Load Image
Advertisement

அறிவியல் துணுக்குகள்

கீரைகள், தாவர எண்ணெய், தானியங்களில் காணப்படும் வைட்டமின் கே சத்து ரத்த உறைவு, எலும்பு கட்டமைப்பிற்குத் தேவையான புரதங்களை உருவாக்குகிறது. இருப்பினும், நுரையீரல் ஆரோக்கியத்தில் வைட்டமின் கே வகிக்கும் பங்கு தெளிவாக அறியப்படாமல் இருந்தது. தற்போது, டென்மார்க்கில் உள்ள கோபன்ஹேகன் பல்கலை ஆய்வாளர்களின் புதிய ஆய்வு, வைட்டமின் கே குறைபாடு ஆஸ்துமா, மூச்சுத்திணறல் உள்ளிட்ட நுரையீரல் நோய்களை ஏற்படுத்தும் என்று கண்டுபிடித்துள்ளது.

ஷென்சென் மற்றும் ஷாங்காய் ஜியாவோ டோங் பல்கலைகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஒளியையும், வெப்பத்தையும் உறிஞ்சாத ஒரு படலத்தை உருவாக்கியுள்ளனர். இது கட்டடங்கள், வாகனங்கள், பிற பொருட்களை மிகவும் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும். இதனால் குளிர்சாதனத்தின் செலவு குறையும். டைட்டானியம் டை ஆக்சைடு, அலுமினியம் டை ஆக்சைடு, கண்ணாடி, துாய வெள்ளி ஆகியவற்றைக் கொண்டு இதை உருவாக்கியுள்ளனர்.

வைரஸ்கள், பாக்டீரியாவிற்குப் பின், பூஞ்சைகள் மிகவும் ஆபத்தான நோய்க்கிருமிகளாகும். இவை பாக்டீரியாவைப் போலவே, தற்போதைய மருந்துகளை எதிர்ப்பதற்கு ஏற்ப, வேகமாகத் தங்களைத் தகவமைத்துக் கொள்கின்றன. ஓக்லஹோமா பல்கலை விஞ்ஞானிகள், அல்லிப்பூவில் பெர்செபாசின் (Persephacin) எனும் ஒரு மூலக்கூறு உள்ளதைக் கண்டறிந்துள்ளனர். எதிர்காலத்தில் பூஞ்சை தொற்றுநோயை எதிர்த்துப் போராடக்கூடிய மருந்தாக இது பயன்படும் என்கின்றனர்.

வயிற்றில் உணவைச் செரிக்க வைக்க உருவாகும் அமிலம், உணவுக் குழாயில் ஏறுவதால் நெஞ்செரிச்சல் உருவாகும். இது தொடர்வது வயிறு, உணவுக் குழாயில் பல நோய்களை உருவாக்கலாம். இதைச் சரிசெய்ய தொடர்ந்து எடுத்துக் கொள்ளும் மருந்துகள் மறதி நோயை உருவாக்கக்கூடும் என்று அமெரிக்க நரம்பியல் ஆய்வுக் கூடத்தின் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பவளப் பாறைகள் அழிந்து வருவதால் அவற்றில் மறைந்திருந்து இரையைப் பிடித்துண்ணும் 'ட்ரம்பெட்' உள்ளிட்ட மீன்களுக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால், அவை ஆபத்தில்லாத தாவர உண்ணிகளான 'பேரட்' மீன்களுக்குப் பின்னால் மறைந்துகொண்டு வேட்டையாடுவதற்குத் தங்களைப் பழக்கப்படுத்திக் கொண்டுள்ளதாக இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலை ஆய்வு தெரிவிக்கிறது.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement