ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் அமல்படுத்தப்பட்ட, இந்திய குற்றவியல் தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் போன்றவற்றை மறுசீரமைத்து, புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட உள்ளன. இதற்கான மசோதாக்கள், கடந்த வாரம் பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டன. அவை பார்லிமென்ட் நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
அதே நேரத்தில், இந்த மசோதாக்கள் சட்ட மாகி அமலுக்கு வந்தால், ஒருவர் திருமண ஆசை காட்டி பெண்ணுடன் உறவு வைத்துக் கொண்டால், அது கற்பழிப்பாக கருதப்படாது என்றாலும், அந்த நபருக்கு, 10 ஆண்டு சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும். அத்துடன், கற்பழிப்பு குற்றத்திற்கு குறைந்தபட்சம், 10 ஆண்டு சிறை தண்டனையோ அல்லது ஆயுள் தண்டனையோ வழங்கலாம்.
அதுவே, கூட்டு பலாத்காரமாக இருந்தால், 20 ஆண்டு சிறை தண்டனை அல்லது மரணம் அடையும் வரை சிறை என, தண்டனை விதிக்க முடியும். 12 வயதிற்கு குறைவான சிறுமியரை பாலியல் பலாத்காரம் செய்வோருக்கு, 20 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்படும் என்பது உட்பட பல விதிமுறைகள் இடம் பெறுகின்றன.
இதுமட்டுமின்றி, பத்திரிகையாளர்கள், அரசியல் எதிரிகள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு எதிராக, அடிக்கடி துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக புகார் கூறப்படும், தேசத்துரோக சட்டப்பிரிவும், இந்த மூன்று சட்ட மசோதாக்கள் வாயிலாக நீக்கப்பட உள்ளன.
இந்திய தண்டனை சட்டத்தில், '124ஏ' பிரிவு தான், தேசத்துரோக குற்றச்சாட்டு மற்றும் அதற்கான தண்டனை பற்றி விவரிக்கிறது. இந்த சட்டப் பிரிவை தொடர வேண்டும். அத்துடன், 'இந்தப் பிரிவின் கீழ் வழங்கப்படும் தண்டனையின் அளவை அதிகரிக்க வேண்டும்' என, இரண்டு மாதங்களுக்கு முன், மத்திய அரசுக்கு சட்ட கமிஷன் பரிந்துரை செய்திருந்தது. அப்படிப்பட்ட நிலையில், புதிய மசோதாக்களில் தேசத்துரோக குற்றச்சாட்டு நீக்கப்படுகிறது.
அதற்குப் பதிலாக, பிரிவினைவாதம், நாசவேலைகள், ஆயுத புரட்சி, நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டிற்கு கேடு விளைவிக்கும் செயல்கள் போன்றவற்றுக்கு ஆயுள் தண்டனையோ அல்லது ஏழு ஆண்டு தண்டனை மற்றும் அபராதம் விதிக்கும் வகையிலான பிரிவுகள் இடம்பெற உள்ளன.
குற்றவியல் நீதி நடைமுறைகளில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பான பரிந்துரைகளை வழங்க, 2003ல், நீதிபதி வி.எஸ்.மாலிமாத் கமிட்டி நியமிக்கப்பட்டது. இந்த கமிட்டி, குற்ற வழக்குகள் விசாரணை மற்றும் தண்டனை தொடர்பாக, ௧௫௮ பரிந்துரைகளை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் வழங்கியது.
இதன்பின், 20 ஆண்டுகள் கழித்து, தற்போது தான் குற்றவியல் நடைமுறை சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ள மத்திய பா.ஜ., அரசு முற்பட்டுள்ளது பாராட்டத்தக்கது.
அதேநேரத்தில், தற்போதைய சட்டங்களுக்கு மாற்றாக, புதிய குற்றவியல் சட்டங்களை, மத்திய அரசு உருவாக்கும் போது, அப்பாவிகள் யாரும் பாதிக்கப்படாத வகையில், எச்சரிக்கையோடு செயல்பட வேண்டியதும் அவசியம். புதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டால், குற்றவியல் நீதி அமைப்பு புத்துயிர் பெறும்.
வழக்குகளில் அதிகபட்சம் மூன்று ஆண்டுகளில் அனைவருக்கும் நீதி கிடைக்கும் என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளது நம்பிக்கை தருவதாக உள்ளது.
காலங்களும், சூழ்நிலைகளும், குற்றங்களின் தன்மையும் மாறும் போது, அதற்கேற்ற வகையில், சட்ட விதிகளில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியது கட்டாயமானது. அந்த வகையில், பல ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் செய்யாததை, தற்போதைய பா.ஜ., அரசு செய்ய முற்பட்டுள்ளது வரவேற்கத்தக்க விஷயமே.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!