Load Image
Advertisement

புதுசா போலீஸ் ஸ்டேஷன் திறந்தாங்க நல்லா... காக்கிகள் ரெண்டு பேரு கட்டுறாங்க கல்லா!

கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில், 'தினமலர்' நுகர்வோர் கண்காட்சிக்குப் போவதற்காக, முன்பே சென்று காத்திருந்தாள் சித்ரா. அவள் சொன்ன இடத்துக்கு வந்து சேர்ந்த மித்ரா, ''சாரிக்கா! கொஞ்சம் லேட்டாயிருச்சு. அவினாசி ரோட்டுல பெருசா டிராபிக் இல்லை. ஆனா பெரிய வண்டிகள் 'யு டர்ன்' அடிக்கிறதைப் பார்த்தா, டூ வீலர்ல பயந்து பயந்துதான் வண்டி ஓட்ட வேண்டியிருக்கு!'' என்றாள்.

அவளுக்குப் பதிலளித்த சித்ரா, ''ஆமா மித்து! உள்ளூர்க்காரங்களுக்கு இந்த சிஸ்டம் தெரியுது; வெளியூர்ல இருந்து வர்றவுங்களுக்கு, புரியுறதில்லை. வேகமா வண்டியை ஓட்டிட்டு வந்து, திடீர்னு 'யு டர்ன்' அடிக்கிற வண்டிகளுக்கு இடையில சிக்கிக்கிறாங்க. இல்லேன்னா மோதிர்றாங்க...போன வாரம் 20 வயசு பையன் இப்பிடித்தான், 'யு டர்ன்' ஆகுற இடத்துலதான் அடிபட்டு இறந்திருக்கான்!'' என்றாள்.

மீண்டும் அதே மேட்டரைத் தொடர்ந்த மித்ரா, ''எது எதுக்கோ நடுரோட்டுல பிளக்ஸ் வக்கிறாங்க...இதுக்கும் கொஞ்சம் முறையான அறிவிப்புப் பலகைகள் வச்சா, வெளியூர்ல இருந்து வர்றவுங்க ஜாக்கிரதையா வருவாங்க...!'' என்றாள். அவள் முடிப்பதற்குள் குறுக்கிட்டாள் சித்ரா...

''கரெக்டா சொன்ன மித்து! வெஸ்டர்ன் பைபாஸ் திட்டத்தை ஒரு வழியா, துறை அமைச்சரை வச்சே துவக்கி வச்சிட்டாங்க. முதல் பகுதி வேலை நடக்குறப்பவே, ரெண்டாவது பேஸ்க்கும் நிதி ஒதுக்கிருவோம்னு சொல்லிருக்காரு. அது நல்ல விஷயம்தான்...ஆனா அவரு வந்த அன்னிக்கு, சி.எம்.,உத்தரவை மீறி, பிளக்ஸ் பேனர்களை வச்சதோடு மட்டுமில்லாம, ரெண்டு பக்கமும் ஏகப்பட்ட கொடி கட்டிருந்தாங்க!''

''ஆமாக்கா! டெபுடியும், அவரோட ஆளுங்களும்தான் குனியமுத்துார்ல இருந்து மைல்கல் வரைக்கும் ஏகப்பட்ட பிளக்ஸ் வச்சிருந்தாங்க...அ.தி.மு.க., மாஜி வீடு் சுகுணாபுரத்துல இருக்கறதுனால, அவரைக் கடுப்பேத்த ஆளும்கட்சிக்காரங்க அப்படி பண்ணியிருக்காங்க. மினிஸ்டர் கெளம்பியதும் எல்லாதையும் கழட்டிட்டாங்களாம்.!''

''ஆனா...என்ன இருந்தாலும் தப்பு தப்புதானே... இவங்க தானே... பிளக்ஸ் பேனர் வைக்க மாட்டோம்னு கோர்ட்டுல பிராமணப்பத்திரம் தாக்கல் செஞ்சாங்க...அ.தி.மு.க., கொடிக்கம்பம் விழுந்து, ஒரு பொண்ணுக்கு கால் போனப்போ, ஸ்டாலின்தானே படுகாட்டமா அறிக்கை விட்டாரு. இப்போ அவுங்க கட்சிக்காரங்க அதே தப்பை செய்யலாமா?''

''எல்லா விஷயத்துலயும் இதான்க்கா நடக்குது...மதுக்கரை நகராட்சியில முக்கியமான பொறுப்புல இருக்குற ஆளும்கட்சிக்காரரோட மகனே, ராத்திரியில லாரி லாரியா கல்லு, மண்ணு கேரளாவுக்குக் கடத்துறாராம். பைபாஸ்ல இருக்குற ஓட்டல்ல இதுக்காகவே அவரு ஒரு ஆபீஸ் போட்ருக்காரு...லோக்கல் லாரிக்காரங்க, கேரளாவுக்கு கல்லு கொண்டு போறதில்லை...ஆனா இவரு அள்ளித்தட்றாரு. ரெவின்யூ, மைன்ஸ் ஆபீசர்க யாருமே சுத்தமா கண்டுக்கிறதேயில்லை!''

''இந்த விஷயம் நானும் கேள்விப்பட்டேன் மித்து! இதுல இன்னொரு கொடுமை என்னன்னா... கனிம வளத்துக்கு எதிரா பெருசாப் போராடுன எதிர்க்கட்சிக்காரங்க சில பேரு, அவுங்களுக்கு மாமூல் கொடுக்குற வண்டிகளை மட்டும் விட்டுட்டு, மத்த வண்டிகளைப் பிடிச்சுக் கொடுக்குறாங்களாம். அதே வண்டிகளை வீடியோ எடுத்து சோஷியல் மீடியாவுலயும் போடுறாங்களாம்!''

''ஆளும்கட்சி சப்போர்ட்ல, கல்லு மட்டுமா கடத்துறாங்க...போடிபாளையம் ரோட்டுல, மதுக்கரையில கேபிள் நடத்துற ஆளும்கட்சி கவுன்சிலர் ஒருத்தரு, அனுமதியே இல்லாம 'பார்' நடத்துறாராம். கலெக்டருக்கு கம்பிளைண்ட் போயி, கொஞ்ச நாளைக்கு முன்னால 'சீல்' வச்சிருக்காங்க...இப்போ, டாஸ்மாக் கடையில இருந்தே உள்ளே போறது மாதிரி, 'இல்லீகல் பார்' திறந்துட்டாங்களாம். இதுக்கு போலீசும் சப்போர்ட்!''

''போலீஸ்னதும் ஞாபகம் வந்துச்சு...மக்களுக்கு உதவணும்னு சுந்தராபுரத்துல புதுசா திறந்த போலீஸ் ஸ்டேஷன்ல மக்கள்கிட்ட வழிப்பறி பண்ற வேலைதான் நடக்குதாம்!''

''என்னக்கா சொல்றீங்க...இப்பதான அதை ஆரம்பிச்சாங்க!''

''ஆமா மித்து! ஆரம்பமே வசூல் அமர்க்களம்தான்...அங்க ரெண்டு எஸ்.எஸ்.ஐ.,இருக்காங்க...அதுல ஜெயமான ஒருத்தரு, போத்தனுார் போலீஸ் ஸ்டேஷன்ல ரோந்துப்பணியில இருக்குறப்ப, செம்ம வசூல் பண்ணுனார்னு அவரை வெள்ளலுார் பேட்ரோலுக்கு மாத்துனாங்க. இப்போ எஸ்.எஸ்.ஐ.,யா புரமோஷன்ல சுந்தராபுரம் வந்து, மறுபடியும் மக்கள்ட்ட வழிப்பறி பண்றது மாதிரி வசூல் பண்றாராம்...!''

''இன்னொருத்தரு...!''

''மருதமலை சாமி பேருள்ள இன்னொரு எஸ்.எஸ்.ஐ., குனியமுத்துார்ல உளவுப் பிரிவுல இருக்குறப்போ, மசாஜ் சென்டர்ல இருந்து லாட்டரி, பான் சேல்ஸ்ன்னு எல்லாத்துலயும் மாமூல் வாங்கிட்டு இருந்திருக்காரு. இப்போ அவரும் சுந்தராபுரம் வந்துட்டாரு...இவுங்க ரெண்டு பேரும் சேர்ந்து நல்லா கல்லா கட்றாங்களாம்!''

சித்ரா சொல்லி முடிக்கும் முன்னே, மித்ரா குறுக்கிட்டுப் பேசினாள்...

''அக்கா! நீங்க மருதமலை சாமின்னு சொன்னதும், போன வாரம் அங்க மினிஸ்டர்கள் ரெண்டு பேரு ஆய்வுக்கு வந்தப்போ நடந்த சம்பவம் ஞாபகத்துக்கு வந்துச்சு...இப்போ அங்க அறங்காவலர் குழுவுல முக்கியப் பொறுப்புல இருக்கிறவரு, ஹைவேஸ் மினிஸ்டருக்கு 'ஆல் இன் ஆல்'ங்கிறதால, அவருதான் அங்க கூப்பிட்டு வந்திருக்காரு!''

''அதான் தெரியுமே...அவரோட நம்ம மாவட்ட பொறுப்பு அமைச்சர் முத்துசாமியும் போயிருந்தாரே!''

''யெஸ்...அன்னிக்குதான், அடிவாரம், கார் பார்க்கிங் ஏரியா, மலையில பிரமாண்ட முருகன் சிலை வைக்கிற இடம் எல்லாத்தையும் பாத்திருக்காங்க. ஆனா வேலுன்னு பேரை வச்சிட்டு, அதுவும் மருதமலைக்கு மேலேயே வந்துட்டு, நேரமில்லைன்னு சுவாமி தரிசனம் கூட பண்ணாமப் போயிட்டாராம். இந்த மாதிரி எந்த மினிஸ்டருமே போனதில்லையாம்!''

''அது அவரோட இஷ்டம் மித்து! ஆனா இவுங்க ரெண்டு பேரும் வந்தப்போ, கூடவே 20 வண்டிகள்ல கட்சிக்காரங்க, அதிகாரிகள் எல்லாரும் வந்தாங்க...இவுங்க மலையில ஆய்வு பண்ணிட்டுத் திரும்புற வரைக்கும், எங்கெங்கேயோ இருந்து வந்த பக்தர்களோட வண்டிகளை, மலையேற விடாமத் தடுத்து நிறுத்தி, பாடாப்படுத்திட்டாங்க!''

''மலை, வண்டின்னதும் ராகுல் காந்தி வந்த அன்னிக்கு, மேட்டுப்பாளையத்துல நடந்த பஞ்சாயத்து ஞாபகம் வந்துச்சு...ஊட்டி வழியா அவர் வயநாடு போறதுக்கு வந்தார்ல...மேட்டுப்பாளையத்துல காங்கிரஸ் சார்புல, தடபுடலா வரவேற்பு கொடுத்திருக்காங்க...அப்போ தி.மு.க., நிர்வாகிகளையும் கூப்பிட்ருக்காங்க. ஆனா யாருமே எட்டிப் பார்க்கலை...இதைப் பத்தி, தி.மு.க., தலைமைக்கே புகார் அனுப்பிருக்காங்களாம்!''

''இப்பவே இவ்ளோ உரசல்னா, எம்.பி.,எலக்சன்ல எப்பிடி ஒண்ணா வேலை பார்ப்பாங்களோ?''

''எல்லாம் காசை வச்சு வேலை வாங்கிரலாம்னு நம்புறாங்க...ஆனா காசே கொடுக்காம ஆளைக் கூட்டணும்னு எம்.எல்.ஏ., நினைக்கிறார்னு அ.தி.மு.க.,காரங்க புலம்புறாங்க!''

''அது எந்த ஊர்ல மித்து...?''

''அன்னுார்லதான்...மதுரையில நடக்குற அ.தி.மு.க., மாநாட்டுக்கு ஒவ்வொரு ஒன்றியத்துல இருந்தும் 1500 பேரைக் கூப்பிட்டு வரணும்னு ஒன்றியச் செயலாளர்களுக்குத் தலைமையில இருந்து உத்தரவாம். அதுக்கான வாகனச் செலவுகளை எம்.எல்.ஏ., ஏத்துக்கணுமாம்...ஆனா அவிநாசி தொகுதி எம்.எல்.ஏ.,தனபாலு, ரொம்ப ரொம்பக் குறைவாக் கொடுத்திருக்காராம். அதை வச்சு, 500 பேரைக் கூப்பிட்டுப்போறதே கஷ்டம்கிறாங்க!''

''இதுவும் 'வெய்க்கிள்' மேட்டர்தான்....கார்ப்பரேஷன்ல சட்டம், நிர்வாகம், கணக்குப் பார்க்குற மூணு ஆபீசர்களுக்கு அரசு வண்டி கொடுக்கவே நகராட்சி சட்டத்துல விதிமுறையேயில்லையாம்...ஏன்னா மூணு பேருக்கும் எந்த களப்பணியும் கிடையாது. ஆனா எலக்சன் டைம்ல தற்காலிகமா கொடுத்ததை, அப்பிடியே நிரந்தரமா வச்சுக்கிட்டாங்களாம்...அதுக்கு மாசத்துக்கு 180 லிட்டர் டீசல் போடுறதா கணக்குக் காமிக்கிறாங்களாம்!''

''வீட்டுக்கும் ஆபீசுக்கும் வந்து போக இவ்ளோ டீசலா...மக்கள் வரிப்பணம் எப்பிடியெல்லாம் பாழாகுது பாருங்கக்கா!''

''வண்டியைப் பத்திப் பேசுனோமே...ஆர்.டி.ஓ., ஆபீஸ் மேட்டர் ஒண்ணு சொல்றேன்...சூலுார் ஆர்.டி.ஓ., ஆபீஸ்ல 'கங்காணி' வேலை பார்க்குற ஆபீசர், வர்றவுங்ககிட்ட எல்லாம், 'மேல கொடுக்கணும் மேல கொடுக்கணும்'னு சொல்லிச் சொல்லியே வசூல் பின்னிப் பெடல் எடுக்குறாராம். புதுசா லைசென்ஸ் எடுக்க, ரினிவல் பண்ண, எப்.சி., போட யாரு வந்தாலும் பர்ஸ் கிழிஞ்சிருதாம்!''

சித்ரா பேசிக் கொண்டிருக்கும்போது, வந்த அலைபேசி அழைப்பை எடுத்துப் பேசிவிட்டு, அடுத்த தகவலை ஆரம்பித்தாள் மித்ரா...

''அக்கா! நம்ம மாவட்டத்துக்கு இந்த மே மாசத்துலதான் புது சி.இ.ஓ., போட்டாங்க. அதுக்குள்ள அவுங்களை ராணிப்பேட்டைக்குத் துாக்கி அடிச்சிட்டாங்க...புதுசா வந்திருக்குற சி.இ.ஓ., இதுக்கு முன்னாடியே இங்க டி.இ.ஓ.,வா இருந்திருக்கிறதால, நிர்வாகம் நல்லாருக்கும்னு சொல்றாங்க. ஆனா வருஷத்துக்கு ஒரு ஆபீசரை மாத்துறதால, சி.இ. ஓ.,ஆபீஸ்ல சில ஊழியர்கள் வக்கிறதுதான் சட்டமா இருக்காம்!''

''அதை விடு மித்து! நம்ம மாவட்டத்துல ஏற்கனவே கவர்மென்ட் ஸ்கூல் அதிகம். இப்பிடியே ஒவ்வொரு அதிகாரியா மாத்திட்டு இருந்தா, எஜூகேஷன் வேலைகள், நிர்வாக வேலையெல்லாம் எப்பிடி நடக்கும்...டீச்சர்ஸ் இதைப் பத்திதான் அதிகமா புலம்புறாங்க!''

''ஹெல்த் டிபார்ட்மென்ட் லட்சணமும் அப்பிடித்தான் இருக்கு...மாவட்டத்துல இருக்குற பெரும்பாலான ஆரம்ப சுகாதார நிலையங்கள்ல, ஞாயித்துக்கிழமைகள்ல ஒரு டாக்டரும் இருக்குறதில்லையாம். கார்ப்பரேஷன் பி.எச்.சி.,யிலயும் இதே நிலைமைதான். சாதாரண காய்ச்சலுக்குப் போனாலும், அங்க இருந்து ஜி.எச்.,க்கு அனுப்பி விட்றாங்க. அதுலயும் பாம்புக்கடிக்கு மருந்தே இருந்தாலும் பாக்குறதே இல்லையாம்!'' ''அங்க மருந்து இருந்தும் மக்களுக்குக் கொடுக்குறதில்லையா...நம்ம சிட்டியில காந்திபுரம், பி.ஆர்.எஸ்.,ல ரெண்டு குவாட்டர்ஸ் இருந்தும், சிட்டிக்கு மாறி வர்ற போலீஸ்களுக்கு வீடே கிடைக்கிறதில்லை. இங்க இருந்து மாறிப்போன போலீஸ்க பல பேரு, ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி, வீட்டைக் காலி பண்ணாம வச்சுக்கிறாங்களாம். அதனால ஏகப்பட்ட வாடகை கொடுத்து இருக்க வேண்டியிருக்குன்னு புலம்புறாங்க!''

''ரேஷன் கடைக்கு வாடகை கொடுக்குறதுல ஒரு பஞ்சாயத்து...மத்தம்பாளையத்துல இருந்த ரேஷன் கடையை ரெண்டாப் பிரிச்சு, சின்னமத்தம்பாளையத்துல புதுசா ஒரு கடை திறந்தாங்க...அந்தக் கடையை காலையில தி.மு.க., நிர்வாகிகள் திறந்து வச்சிருக்காங்க...முதல்ல அவுங்க கட்சிக் கொடியா கட்டிருந்தாங்க. அடுத்த ஒரு மணி நேரத்துல அ.தி.மு.க.,காரங்க வந்து, அதே கடையைத் திறந்து வச்சிருக்காங்க!''

''அதுக்கு அவுங்க கொடிகளைக் கட்டுனாங்களா...இதுல வாடகை பஞ்சாயத்து என்னது?''

''அந்தக் கடைக்கு மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ.,செல்வராஜ்தான் வாடகை கொடுக்குறாராம். அதனால, நாங்கதான் கடையைத் திறந்து வைப்போம்னு அவுங்களும் திறந்து வச்சிருக்காங்க!''

''கட்சிக்காரங்க கடையைத் திறக்க எந்தச் சட்டத்துல அனுமதி கொடுத்திருக்காம்...சுதந்திரம் வாங்கி 76 வருஷமாச்சு...இந்த கேடு கெட்ட அரசியல்ல இருந்தும், லஞ்சத்துல இருந்தும் எப்போ விடுதலை கிடைக்குமோ?''

''ஆமாக்கா! நம்ம மாவட்ட நிர்வாகம் சார்புல, வருஷா வருஷம் வ.உ.சி., கிரவுண்ட்ல, சுதந்திர தின விழா நடக்கும்ல...அதுக்கான செலவுகளை, சவுத், நார்த் ரெண்டு தாசில்தாரும்தான் ஏத்துக்குவாங்களாம். ஆனா இந்த வருஷம் நார்த் தாசில்தாரு, டெபுடி தாசில்தாரு ரெண்டு பேரு தலையில கட்டிட்டாங்களாம். ஏற்கனவே மகளிர் உரிமைத் தொகைக்கு செலவு பண்ணி நொந்து போயி, 'இப்போ இதுக்குமா'ன்னு புலம்புறாங்க!''

பேசிக் கொண்டே, கடிகாரத்தைப் பார்த்த மித்ரா, ''அக்கா! டைம் ஆச்சு...மெதுவா ஒரு ரவுண்ட் அடிச்சிட்டு, சாப்பிடப் போயிருவோம்!'' என்று சொல்ல, இருவரும் எழுந்து, 'ஏ' ஹாலுக்குள் நுழைந்தனர்.வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement