Load Image
Advertisement

கோவையில விதிகளை மீறுன குவாரி... வேண்டியதை கொடுக்குறாங்க வாரி!

வெயில் அதிகமாக இருந்ததால், டூ வீலரை நிறுத்தி விட்டு, கால் டாக்சியில் சித்ராவும், மித்ராவும் ஈச்சனாரி சென்று கொண்டிருந்தனர்.

பேசுவது கேட்காமலிருக்க, பண்பலையில் பாட்டை சத்தமாக வைக்கச் சொன்னாள் மித்ரா. அதில் 'கண்டா வரச்சொல்லுங்க...கையோடு கூட்டி வாருங்க' என்று கிடக்குழி மாரியம்மாளின் குரல் தெறித்தது.

பாட்டைக் கேட்டதும் புன்னகையோடு ஆரம்பித்தாள் சித்ரா...

''மித்து! அன்னுார் மக்கள் அ.தி.மு.க.,காரங்களைப் பார்த்து, இப்போ இந்தப் பாட்டைத்தான் பாடுறாங்க...ஏரியாவுக்குள்ள எம்.எல்.ஏ.,தனபால் வந்து ஆறு மாசத்துக்கு மேலாயிருச்சாம்...அன்னூர் சுத்துவட்டாரத்துல 21 பஞ்சாயத்துல மூணு பஞ்சாயத்தைத் தவிர, மத்த எல்லாமே அ.தி.மு.க., தலைவர்கள் இருக்குறதுதான்...!''

சித்ரா முடிக்கும் முன் குறுக்கே புகுந்த மித்ரா, ''ஆமாக்கா! அது எப்பவுமே அ.தி.மு.க., கோட்டையாச்சே. பஞ்சாயத்துல பூமி பூஜைன்னு எதைப் போட்டாலும், எம்.எல்.ஏ.,எங்கன்னு கேப்பாங்களே!'' என்றாள்.

மித்ராவுக்குப் பதிலளித்த சித்ரா, அதே மேட்டரைத் தொடர்ந்தாள்...

''கொங்கு மண்டலமே அ.தி.மு.க.,கோட்டைன்னு, மதுரை மாநாட்டுல நிரூபிக்கிறதுக்குதான், ஏகப்பட்ட கூட்டத்தைச் சேர்க்கிறதுக்கு அ.தி.மு.க.,வுல தீவிரமா வேலை பாக்குறாங்க... அதுலயும் புறநகர்லதான் வேலை ஜரூரா நடக்குதாம்...வண்டியெல்லாம் ரெடி பண்ணிட்டாங்க!''

''ஆமாக்கா! ஆண்களுக்கு 500 ரூபாயும், குவாட்டரும்...லேடீஸ்க்கு 500 ரூபாயும் பிரியாணிப் பொட்டலத்தோடு, தனியா வண்டியும் 'அரேஞ்ச்' பண்றாங்களாம்...ஆனா, மதுரையில ஓ.பி.எஸ்., கோஷ்டி புகுந்து, ஏதாவது கலட்டா பண்ணுவாங்க...அங்க போற வண்டிகள்ல கல்லடிச்சிருவாங்கன்னு தகவல் பரவுறதால, கொஞ்சப்பேரு பயப்படுறாங்களாம்... அதனால, 'உசுரைப் பணயம் வச்சு வர்றோம்; கொஞ்சம் கூடப்போட்டுக் கொடுங்க'ன்னு பேரம் பேச ஆரம்பிச்சிருக்காங்களாம்!''

''அவுங்க கூடக்கொஞ்சம் போட்டுக் கொடுத்துருவாங்க...ஆனா இந்த கார்ப்பரேஷன் ஆபீசர்கள், துாய்மைப் பணியாளர்களுக்கு கூடுதலா சம்பளம் தரமாட்டாங்க போலிருக்கு...இதுல குப்பை அள்ளுற வேலையை வேற, பிரைவேட்ல கொடுக்கப் போறாங்க...அப்புறம் எப்பிடி கூடுதலா சம்பளம் கிடைக்கும்?''

''அதுக்குதான், டெபுடி கமிஷனர் முன்னால, யூனியன்காரங்க, கான்ட்ராக்டரு எல்லாரையும் வச்சுப் பேசுனாங்களே!''

''பேசிருக்காங்க...அதுல ஒரு 'தோழமை' அமைப்பு, சம்பளம், அரியர்ஸ் பத்திப் பேசிருக்காங்க. ஆபீசர்களும் நடவடிக்கை எடுக்குறதா சொல்லிருக்காங்க...ஆனா இன்னொரு குரூப், பேசுறதுக்கே விடாம, 'நாங்க கோர்ட்ல பாத்துக்கிறோம்'னு சொல்லிட்டுக் கிளம்பிருச்சாம். அதனால, 'நிஜமாவே அவுங்க தீர்வு காண வந்தாங்களா, இல்லேன்னா காசு பாக்க டிரை பண்றாங்களான்னு, சந்தேகம் கெளம்பிருக்கு!''

சித்ரா பேசிக் கொண்டிருக்கும்போது, 'புதுரூட்டுலதான்...நல்ல ரோட்டுலதான்' என்று ஜேசுதாஸ் பாட்டு துவங்கியது. அதைக் கேட்டு, மித்ரா வேறு ஒரு மேட்டரை ஆரம்பித்தாள்...

''அக்கா! கணபதி எப்.சி.ஐ., குடோன் ரோடை சிமென்ட் ரோடா சூப்பராப் போட்டாங்கள்ல...இப்போ ஒன்றரை கி.மீ., ரோட்டுக்கு நடுவுல, 'கேட்' போடப் போறாங்களாம்.

'கேட்' போட்டா பெருசா போராட்டம் வெடிக்கும்னு, எல்லாக்கட்சி நிர்வாகிகளும் சேர்ந்து எச்சரிக்கை பண்ணிருக்காங்க. என்ன பண்ணனும்னு தெரியாம, எப்.சி.ஐ., ஆபீசர்கள் முழிச்சிட்டு இருக்காங்க...!''

''அந்த ஆபீசர்கள் முழிக்குறாங்க...கார்ப்பரேஷன் ஆபீசர்கள் மெரட்டுறாங்க...சி.எம்., வீட்டுக்கு ரொம்ப வேண்டப்பட்டவரு மாதிரி போட்டோவெல்லாம் காமிச்சிட்டு, சரவணம்பட்டியில கார்ப்பரேஷன் ரிசர்வ் சைட்ல, கட்டடம் கட்டுன ஆளுக்கு சப்போர்ட்டா, அந்த ஏரியாவுல இருக்குற டவுன் பிளானிங் லேடி ஆபீசர், இ.என்.டி., டாக்டர் ஒருத்தரோட கட்டடத்தை இடிக்கப்போறதா மெரட்டிருக்காங்க...!''

''ஏ.இ.,யா இருந்துட்டு, பத்து வருஷமா 'இன்சார்ஜ்' போஸ்ட்டிங்லயே, வலுவா சம்பாதிச்சிட்டு இருக்காங்களே...அவுங்கதான...!''

''அவுங்களேதான்...இதுல விசேஷம் என்னன்னா, அந்த டாக்டர் உண்மையிலேயே தி.மு.க., அமைச்சர் ஒருத்தருக்குச் சொந்தக்காரராம்...!''

''ஆனா சென்ட்ரல்ல இருக்குற டவுன் பிளானிங் லேடி ஆபீசர், காந்திபுரம் டவுன்பஸ் ஸ்டாண்ட்ல, உள்வாடகைக்கு விடப்பட்ட கடைகளைக் கண்டுபிடிச்சு, காலி பண்ணிருக்காங்க...அதுக்கு முன்னால அவுங்களே நேர்ல போய், நைசா விசாரிச்சதுல, சில கடைகளை எடுத்தவுங்க, உள் வாடகைக்கு விட்டு, தினமும் 700 ரூபா சம்பாதிச்சது தெரிஞ்சிருக்கு...அப்புறம்தான் கடைகளைக் காலி பண்ணி, கார்ப்பரேஷனுக்கு வருமானம் வர ஏற்பாடு பண்ணிருக்காங்க!''

''ஆனா...இந்த ஆவின் ஆக்கிரமிப்புக் கடைகளை எடுக்குறதுல மட்டும், கலெக்டரும், கார்ப்பரேஷன் கமிஷனரும், ஏன் இப்பிடி குழப்பி கும்மியடிக்கிறாங்கன்னு தெரியலையே!''

சித்ரா சொன்னதைக் கேட்ட மித்ரா, ''என்னக்கா ஆச்சு?'' என்று ஆர்வமாய் விசாரித்தாள். அதற்கு விளக்கம் சொல்ல ஆரம்பித்தாள் சித்ரா...

''நம்ம கார்ப்பரேஷன் லிமிட்ல 124 ஆவின் கடைகளுக்கு லைசென்ஸ் கொடுத்திருந்தாங்க. அதுல பல கடைகள் ஆக்கிரமிப்பு இடத்துல இருக்குறதால, இப்போ மொத்த கடைகளுக்கும் ஆவின் நிர்வாகத்துல லைசென்ஸ் 'ரினிவல்' பண்ணலை...அவுங்க யாருமே, நிபந்தனைப்படி ஆவின் பொருள் வாங்குறது இல்லைன்னு, கலெக்டருக்கு ரிப்போர்ட்டும் கொடுத்திருக்காங்க!''

''ஆனா கார்ப்பரேஷன்தானே ஆக்கிரமிப்பை எடுக்கணும்!''

''ஆமா மித்து! அவுங்ககிட்ட கேட்டா, 'நண்பன்' படத்துல சொல்றது மாதிரி, 'எங்களுக்கு கலெக்ட்ரேட்ல இருந்து, எந்த இன்ஸ்ரக்சனும் வரலை'ன்னு சொல்றாங்க...அங்க கேட்டா, ஆவின் நிர்வாகத்தைக் கைகாட்றாங்க...ஆவின் ஆபீசர்கள்ட்ட கேட்டா, 'நாங்க ரிப்போர்ட் கொடுத்துட்டோம். கலெக்டர்தான் ஆர்டர் போடணும்'னு சொல்றாங்க...!''

''ஆக...ஆக்கிரமிப்பும் எடுக்கலை...அரசாங்கத்துக்கும் வருமானம் இல்லை...கல்லா கட்றவுங்க கட்றாங்க!''

''கட்றாங்கன்னதும் ஞாபகம் வந்துச்சு...கார்ப்பரேஷனை ஒட்டியே இருக்குற ஒரு ஊர்ல, டவுன் பஞ்சாயத்து சேர்மனா இருக்குற ஆளும்கட்சிக்காரரு, பில்டிங் அப்ரூவல் விண்ணப்பம் வந்தா, எஸ்டிமேசன் கேட்டு, அதுக்கேத்தது மாதிரி, லட்சக்கணக்குல லஞ்சம் கேக்குறாராம். தரலைன்னா அப்ரூவல் தர்றதில்லையாம். அவருக்கேத்த மாதிரி செயல்படுற ஆபீசர் இருக்குறதால, ரெண்டு பேரும் வசூல் தட்டி எடுக்குறாங்களாம்!''

''பல தப்புகளுக்கு ஆபீசர்கள்தான் காரணமா இருக்காங்க...செல்வபுரத்துல போலி இறப்புச்சான்றிதழ் தயாரிச்சுக் கொடுத்த, இ-சென்டர் ஓனரை கைது பண்ணாங்கள்ல...அவரு இது போல ஏகப்பட்ட சர்ட்டிபிகேட் தயார் பண்ணிக் கொடுத்திருக்காராம்...ஆனா, இதுக்கு முக்கியக் காரணமா இருந்தது, ரேஸ்கோர்ஸ்ல நலவாரிய ஆபீஸ்ல வேலை பாக்குற ஒரு ஊழியராம்...அவர் எஸ்கேப் ஆயிட்டாரு!''

''அதெப்பிடி முடியும் மித்து?''

''எல்லாம் காசுதான்க்கா...இ-சென்டர் ஓனர் மாட்டிக்கிட்டதும், தன்னைக் காட்டிக் கொடுக்காம இருக்க, ஏகப்பட்ட பணம் கொடுத்திருக்காரு அந்த அரசு ஊழியர்...இதைக் கண்டுபிடிச்ச போலீஸ் இன்ஸ்பெக்டர், கேஸ்ல இவரைக் கொண்டு வராம இருக்க, பெரிய அமவுன்ட் வாங்கிருக்காரு. அதுக்கு விசுவாசமா, அவரே கைது பண்ணுன ஆளை, ஜாமீன்ல எடுக்குறதுக்கும் நிறைய உதவி பண்ணிருக்காரு...!''

மித்ரா சொல்லும்போது, 'ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை' என்று பண்பலையில் டி.எம்.எஸ்.,முழங்கிக் கொண்டிருந்தார்.

அதைக் கேட்டதும் சிரித்தபடி ஆரம்பித்தாள் சித்ரா...

''மதுக்கரை முனிசிபாலிட்டியில ரோடு வேலைக்கு, 20 கோடி ரூபா ஒதுக்கிருக்காங்க...அதுல 10 பர்சன்டேஜை, கவுன்சிலர் எல்லாரும் பிரிச்சுக்கலாம்னு முடிவெடுத்திருக்காங்க. இப்போ முக்கியமான ரெண்டு பேரு மட்டும், பெரும்தொகையை எடுத்துக்கிட்டு, 'செட்அப் ஆக்சிடென்ட்' சீன்ல வடிவேலு பிரிக்கிறதுமாதிரி, பேருக்குப் பிரிச்சுக் கொடுக்கவும், கவுன்சிலரெல்லாம் கொதிச்சுப் போயிருக்காங்க!''

''அங்க அப்பிடியா...காரமடை முனிசிபாலிட்டியில சேர்மனோட வீட்டுக்காரர்தான், ஆளும்கட்சியில முக்கியப் பொறுப்புல இருக்காரு. அவரு மூத்த கவுன்சிலர்களைக் கூட மதிக்காம தன்னிச்சையா எல்லாம் பண்ணிட்டு இருந்தாரு. அவுங்க கடுப்பாகி, தலைமைக்குச் சொல்லிட்டு, தலைவர் மேல நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வர முடிவு பண்ணிட்டாங்க!''

''சூப்பரு...செம்ம மிரட்டல்!''

''வேற வழியில்லாம சீனியர் கவுன்சிலர்கள்ட்ட பேசி, எல்லா வேலையையும் தலைவர் உட்பட ஐந்து பேர் கொண்ட குழுவே முடிவு பண்ணலாம்னு, வீட்டுக்காரரு சொல்லிட்டாராம்.

இதுல, முதல்ல இருந்து சேர்மனுக்கு, ஆதரவா இருந்த கவுன்சிலர்கள் கொதிச்சுப் போய், கொடி துாக்க ஆரம்பிச்சிட்டாங்க. அதனால என்ன பண்றதுன்னு தெரியாம, தலைவரும், கணவரும் மண்டை காய்ஞ்சு போயிருக்காங்க!''

''மித்து! இதெல்லாம் ஜூஜூபி மேட்டர்...ஒரு பெரிய பேரம் நடந்துட்டு இருக்கு...நம்ம மாவட்டத்துல, விதிகளை மீறி ஏகப்பட்ட கல்குவாரிகள்ல, தாறுமாறா கல் எடுத்திருக்காங்க.

அதெல்லாம் ஆய்வு பண்ணுன மைன்ஸ் டிபார்ட்மென்ட்காரங்க, மூணு கல்குவாரிக்கு 44 கோடி ரூபா 'பைன்' போட்ருக்காங்க...இன்னும் 6 குவாரிக்கு 56 கோடி அபராதம் விதிக்க 'ப்ளான்' பண்ணிருக்காங்க!''

''அடேங்கப்பா...போட வேண்டியதுதான்...அதுதான் ஒவ்வொரு குவாரியிலயும் அதல பாதாளத்துக்குத் தோண்டி இருக்காங்களே!''

''ஆனா 6 குவாரிக்கும், 'பைன்' போடாம காப்பாத்துறதுக்கு, ஆளும்கட்சி தரப்புல, குவாரிக்காரங்களோட பெரிய அளவுல, பேரம் நடந்துட்டு இருக்கு...அநேகமா 'டீலிங்' முடிஞ்சிரும்னு தகவல் வருது!''

அப்போது பேக்கரியைப் பார்த்ததும், 'டீ குடிச்சிட்டுப் போலாம் மித்து' என்று கூறி, டிரைவரிடம் வண்டியை ஓரம் கட்டச் சொன்னாள் சித்ரா.வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement