மோடி சமூகத்தினர் பற்றி அவதுாறாக கருத்து தெரிவித்ததாக தொடரப்பட்ட வழக்கில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுலுக்கு, குஜராத் நீதிமன்றம் விதித்த இரண்டாண்டு சிறை தண்டனையை, உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் நிறுத்தி வைத்தது. இதன் வாயிலாக, குஜராத் உயர் நீதிமன்றத்தில் கிடைக்காத நிவாரணம், உச்ச நீதிமன்றத்தில் கிடைத்துள்ளது.
இந்த தண்டனை நிறுத்த உத்தரவை, காங்கிரஸ் தலைவர்களும், அதன் கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் வரவேற்றுள்ளனர். 'ஜனநாயகத்தின் பாதுகாவலனாக கருதப்படும் நீதிமன்றத்தின் மீது, மக்கள் வைத்துள்ள நம்பிக்கை காப்பாற்றப்பட்டு உள்ளது' என்றும் பெருமையாக கூறியுள்ளனர்.
இருப்பினும், ராகுலுக்கு சாதகமாக உத்தரவு பிறப்பித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், 'மோடி சமூகத்தினருக்கு எதிராக, ராகுல் தெரிவித்த கருத்துக்கள் ரசிக்கத் தக்கதாக இல்லை.
பொது வாழ்வில் இருக்கும் பொறுப்புள்ள மனிதர்கள், பொது வெளியில் பேசும் போது, அதிகபட்ச எச்சரிக்கையுடன் வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும்' என்று தெரிவித்துஉள்ளனர்.
இதை, அரசியல் சுயலாபத்திற்காக எதிர் தரப்பினரை அவதுாறாக பேசும் அரசியல்வாதிகளுக்கு வைக்கப்பட்ட குட்டு என்றே நம்பலாம்.
இது ஒருபுறமிருக்க, 'ராகுலுக்கு அதிகபட்சமாக இரண்டாண்டு சிறை தண்டனை வழங்கிய விசாரணை நீதிமன்ற நீதிபதி, அதற்கான சில காரணங்களை தெளிவாக குறிப்பிட்டிருக்க வேண்டும். அதைச் செய்யத் தவறி விட்டது சரியல்ல.
மேலும், ராகுலுக்கு இரண்டாண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டதால் தான், அவருக்கு எதிராக, மத்திய அரசு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க நேரிட்டது.
'இரண்டாண்டிற்கு ஒரு நாள் குறைவாக தண்டனை வழங்கப்பட்டு இருந்தாலும், அவரை எம்.பி., பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்திருக்க முடியாது' என்றும், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.
அதாவது, அவதுாறு வழக்கில் ராகுலுக்கு தண்டனை வழங்கியது சரியானது என எடுத்துக் கொள்ளப்பட்டாலும், இதற்கு முன் கிரிமினல் குற்றங்களில் ஈடுபடாத ஒருவருக்கு, அவதுாறு வழக்கில் அதிகபட்சமாக இரண்டாண்டு சிறை தண்டனை வழங்கியது நியாயமற்றது என்பதை, சூசகமாக நீதிபதிகள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
மேலும், ராகுல் வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையானது, தனி நபரான அவரின் உரிமையை மட்டுமின்றி, அவரை எம்.பி.,யாக தேர்ந்தெடுத்த தொகுதி மக்களின் நலனையும் பாதித்துள்ள விஷயம் என்பதால், அவருக்கான தண்டனைக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
மோடி சமூகத்தினர் பற்றிய தன் கருத்துக்காக, மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று நீதிமன்றத்தில் தெரிவித்த ராகுல், தற்போது, தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு நிவாரணம் பெற்றதன் வாயிலாக, எம்.பி.,யாக மீண்டும் பார்லிமென்டிற்கு திரும்ப உள்ளார். அடுத்த லோக்சபா தேர்தலில், அவர் போட்டியிடுவதற்கான வாய்ப்பும் உருவாகி உள்ளது.
ராகுலுக்கு கிடைத்த இந்த நிவாரணம், இந்த ஆண்டில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம், சத்தீஸ்கர், தெலுங்கான என, ஐந்து மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் மற்றும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான கூட்டணியை எதிர்கொள்ள, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு உத்வேகம் தருவதாக உள்ளது.
இருப்பினும், அரசியல்வாதிகள், தங்களின் போட்டியாளர்களை விமர்சிக்கும் போது, எல்லை மீறக் கூடாது என்பது, ராகுலுக்கு எதிரான இந்த வழக்கின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!