கோவை ஒண்டிப்புதுாரை பூர்வீகமாக கொண்டவர் சதீஷ்குமார்.
குடும்பத்துடன் ஹைதராபத்தில் வசித்துவரும் இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றுகிறார்.
இவரது மகள் அகர்ஷனா,11,அங்குள்ள பள்ளியில் ஏழாவது படித்துவருகிறார்
விண்வெளி விஞ்ஞானியாகவேண்டும் என்ற கனவுடன் உள்ள இவருக்கு வாசிப்பது மிகவும் பிடிக்கும்.படிப்பு சம்பந்தமாக மட்டுமின்றி பொதுவான தலைப்புகளிலும் நிறைய புத்தகங்களை தேடி தேடி வாங்கிப் படிப்பார்.
இப்படி இவர் வாங்கிய புத்தகங்கள் வீடு கொள்ளாத அளவிற்கு போகவே, வாசித்து முடித்த புத்தகங்களை நன்கொடையாக வழங்க விரும்பினார்.
அருகில் உள்ள மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருப்பதை அறிந்து அவர்கள் படிக்கும் வகையில் தனது புத்தங்களை வழங்கவிரும்பினார்.அனுமதி கிடைக்கவே தனது புத்தகங்களை மட்டும் வழங்காமல் உறவினர் நண்பர்கள் சகமாணவர்களிடமும் இருந்து புத்தகங்களை சேகரித்து வழங்கினார்.
இந்த செயல் மனதிற்கு நிறைவாக இருக்கவே தொடர்ந்து நுாலகங்களுக்கு இலவசமாக புத்தகங்கள் வழங்கும் திட்டத்தை தொடர முடிவு செய்தார்.
சிறுவர் சீர்திருத்த பள்ளியில் உள்ள மாணவர்கள் தங்களை சீர்திருத்திக் கொள்ள முதலில் செய்யவேண்டியது நல்ல புத்தகங்களை படிப்பதுதான் என்பதால் அங்குள்ள இரண்டு சிறுவர் சீர்திருத்த பள்ளிகளில் நுாலகம் அமைத்துக் கொடுத்தார்.
விடுமுறையில் அப்பாவுடன் கோவை வந்திருந்த போது காவல் துறை சார்பாக வீதி நுாலகம் நடைபெறுவதை அறிந்து அந்த நுாலகத்திற்கு புத்தகங்கள் வழங்கினார்.
சென்னை நொளம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாணவ,மாணவியர் பலன் பெறும் வகையில் நுாலகத் தேவை இருப்பதை அறிந்து ஆயிரம் புத்தகங்களை அங்குள்ள புதிய நுாலகத்திற்கு கொடுத்தார்.
இதற்கான விழாவில் கலந்து கொண்ட உயரதிகாரிகள் மாணவி அகர்ஷனாவையும் அவரது செயலுக்கு துணைநிற்கும் பெற்றோர்களையும் பாராட்டினார்.
நீங்களும் அகர்ஷனாவை பாராட்ட எண்ணினால் தொடர்பு கொள்ள வேண்டிய எண்:98431 43605.
-எல்.முருகராஜ்
நல்ல செயல்.இதுபோல் சேவை செய்யலாம் என்று என்ன தோன்றுகிறது.இந்த வயதில் இந்த எண்ணம் உதித்ததே சிறப்பு.