அறிவே சக்தி. வேதங்கள் மற்றும் உபநிடதங்களில் இந்தியாவின் வளமான அறிவுத்திறன் தெளிவாகத் தெரிகிறது, இது பல நூற்றாண்டுகளாக ஞானத்தின் பரந்த ஆதாரங்களாக செயல்படுகிறது. நாளந்தா மற்றும் தக் ஷசீலா போன்ற நமது பண்டைய இந்திய பல்கலைக்கழகங்களுடன், இந்தியா கடந்த காலத்தின் சர்வதேச அறிவு மையமாக இருந்து வருகிறது.
காலப்போக்கில், இந்தியாவின் அறிவுத்திறன் மற்றும் செல்வம் முகலாயர்கள், மங்கோலியர்கள், பிரிட்டிஷ், டச்சு மற்றும் போர்த்துகீசியர்கள் உட்பட பலரை ஈர்த்தது, அவர்கள் வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களில் இந்தியாவின் மீது படையெடுத்தனர், இதன் விளைவாக இந்தியாவின் அறிவு பொக்கிஷங்கள் கணிசமாக அழிக்கப்பட்டன.
இரண்டாவது தொழிற்புரட்சியின் போது பிரிட்டன் உலகை வழிநடத்திய நிலையில், மூன்றாவது இடத்தில் அமெரிக்கா முன்னிலை வகித்தது.
இன்று, இந்தியா பிரிட்டனைபின்னுக்குத் தள்ளி உலகளவில் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ள நிலையில், அது மீண்டும் அறிவின் மையமாக மாறுவதற்கும், புதிய மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் அதிவேக வளர்ச்சியால் உலகை 4 வது தொழில் புரட்சிக்கு வழிநடத்துவதற்கும் நேரம் கனிந்துள்ளது.
தொலைநோக்கு பார்வை
இந்த எதிர்பார்க்கப்படும் மாற்றங்களுக்கு மத்தியில், 2014 ஆம் ஆண்டில், பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் கல்வி முறையை 21 ஆம் நூற்றாண்டின் உலகளாவிய அறிவு மையமாக மாற்றுவதற்கான தொலைநோக்கு பார்வையை முன்வைத்தார்.
பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருடனும் விரிவான விவாதங்களுக்குப் பிறகு, 34 ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய கல்விக் கொள்கையான, 'என்.இ.பி.,- 2020' அறிமுகப்படுத்தப்பட்டது. நாம் ஜூலை 29, 2023 ஐ நெருங்கும்போது, தேசிய கல்விக் கொள்கையின் மூன்றாம் ஆண்டு நிறைவை 2 நாள் அகில பாரதிய சிக்ஷா சமகம் - கல்வி குறித்த, 'மகா கும்பமேளா' உடன் கொண்டாடுகிறோம்.
தேசிய கல்விக் கொள்கை கடந்த மூன்று ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க சாதனைகளைக் கண்டுள்ளது.
இந்தியாவின் வரலாற்றில் முதல் முறையாக, ஆரம்பகால குழந்தை பருவ பராமரிப்பு மற்றும் கல்வி முறையான பள்ளி கல்வியுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது, குழந்தையின் ஒட்டுமொத்த மூளை வளர்ச்சியில் 80 சதவீதத்துக்கும் மேற்பட்டவை 8 வயதிற்கு முன்பே நிகழ்கின்றன என்பதற்கான ஆதாரங்களை இது அங்கீகரிக்கிறது.
1 மற்றும் 2 ஆம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் என்.சி.எப்., -- எப்.எஸ்., அடிப்படையில் வெளியிடப்படுகின்றன, இது 2026 க்குள் அடிப்படை எழுத்தறிவு மற்றும்எண் அறிவை அடைவதற்கான தேசிய நிபுன் பாரத் மிஷனை பூர்த்தி செய்கிறது.
பள்ளிக் கல்விக்கான தேசிய பாடத்திட்ட கட்டமைப்பிற்கு இணங்க, 150 புதிய பாடப்புத்தகங்கள் கிடைக்கும். இவை குறைந்தபட்சம் 22 இந்திய மொழிகளில் உருவாக்கப்படும், இது தேசிய கல்விக் கொள்கை 2020 இன் கீழ் பன்மொழிக் கல்வியின் பார்வையை ஊக்குவிக்கும்.
தொழில்நுட்பம் மாணவர்களை ஆன்லைனில் பட்டப்படிப்புகளைத் தொடர உதவுகிறது, கற்பவர்களுக்கு அதிகரித்த நெகிழ்வுத்தன்மையை வழங்குவதுடன், தரமான கல்விக்கான அணுகலை மேம்படுத்துகிறது, குறிப்பாக தொலைதூர பகுதிகளில்.
ஸ்வயம் போர்ட்டலில் ஆன்லைன் படிப்புகள் மூலமும் கிரெடிட்களைப் பெறலாம், விரைவில், இந்தியாவில் ஒரு டிஜிட்டல் பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.
13 மொழிகளில் நுழைவுத்தேர்வு
கற்றலில் மொழித் தடைகளைக் கடக்க, பல உயர்கல்வி நிறுவனங்கள் இப்போது பல இந்திய மொழிகளில் தொழில்நுட்ப திட்டங்களை வழங்குகின்றன.
செயற்கை நுண்ணறிவு மொழிபெயர்ப்பு கருவிகள் பல்வேறு இந்திய மொழிகளில் பாடப்புத்தகங்களை மொழிபெயர்க்க உதவுகின்றன.
ஜே.இ.இ., நீட் மற்றும் சி.யு.இ.டி., போன்ற முக்கிய நுழைவுத் தேர்வுகள் இப்போது, 13 மொழிகளில் கிடைக்கின்றன.
கல்வியை சர்வதேச மயமாக்கும் துறையில், இந்தியாவின் நிறுவனங்கள், வெளிநாடுகளில் வளாகங்களை அமைத்து வருகின்றன. ஐ.ஐ.டி., மெட்ராஸ், தான்சானியாவில் திட்டமிடப்பட்ட வளாகத்துடன் உலகளாவியதாகச் சென்று கொண்டிருக்கும் நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஐ.ஐ.டி., தில்லியை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் இந்த மாத தொடக்கத்தில் பிரதமர் மோடி முன்னிலையில் கையெழுத்தானது.
குறிப்பிடத்தக்க வெளிநாட்டு பல்கலைக்கழகங்களும் குஜராத்தில் உள்ள கிப்ட் சிட்டியில் தங்கள் வளாகங்களை அமைத்து வருகின்றன, மேலும் எதிர்காலத்தில் பள்ளி வாரியம் உட்பட பிற இந்திய நிறுவனங்களின் இருப்பை வெளிநாடுகளில் மேலும் விரிவுபடுத்துவதற்கான லட்சிய திட்டங்கள் உள்ளன.
வசுதைவ குடும்பகத்தின் உணர்வால் உந்தப்பட்ட இந்தியா, 21ம் நுாற்றாண்டின் உண்மையான தலைவராக மாறும் பாதையில் செல்கிறது.
இந்த மாற்றத்தை தற்போதைய யதார்த்தத்துடன் இணைப்பதில், தேசிய கல்விக் கொள்கை முக்கிய பங்கு வகிக்கிறது.
உலகளாவிய குடிமக்களை உருவாக்கும் கண்ணோட்டத்துடன் இந்தியாவின் அறிவு அமைப்புகளில் வேரூன்றியிருப்பதை வலியுறுத்துவதன் மூலம், உலகளவில் எங்கும் அறிவு அடிப்படையிலான சமூகத்தை உருவாக்குவதற்கான ஒரு வழிகாட்டும் தத்துவமாக இது இருக்கும்.
குறிப்பாக காலனித்துவத்தின் நிழலில் இருந்து விடுபட விரும்பும் ஏழைகள் மற்றும் வளர்ந்து வரும் பொருளாதாரங்களுக்கு இது வழிகாட்டும். தேசிய கல்விக் கொள்கை அதன் நான்காவது ஆண்டில் நுழையும்போது, அதன் வெற்றி 2047 க்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்க பெரிதும் உதவும்.
-தர்மேந்திர பிரதான்
மத்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சர்
அருமையான முயற்சிகள். வாழ்த்துக்கள்.