பெங்களூரு மாநகரின் கேப்டவுன் ஏரியாவில், வீட்டுத் தோட்டம் அமைத்து, ஓய்வு காலத்தை செடி, கொடிகளுடன் மகிழ்ச்சியாக கழித்து வரும் நிர்மலா:
முதலில், ஐந்து தொட்டிகளில் தான் செடிகள் வளர்த்தேன். அதன்பின், பயணிக்கும் இடங்கள், நர்சரிகள் என, பல இடங்களில் செடிகளை வாங்கி வந்து வளர்த்தேன். இப்போது, எங்கள் வீட்டில், 100 செடிகள் இருக்கின்றன.
குரோட்டன்ஸ், பூக்கள் மற்றும் அதிக வெயில் தேவைப்படாத செடிகளை பால்கனியில் வைத்திருக்கிறேன். மாடியில் காய்கறிகள், மூலிகைச் செடிகள் உள்ளன.
வீட்டுக்குள் ஆக்சிஜன், 'சப்ளை'க்காக மணி ப்ளான்ட், போன்சாய், ஸ்னேக் ப்ளான்ட் வைத்திருக்கிறேன். வீட்டுக்குள் இருக்கும் செடிகளை வாரத்தில் ஒரு நாள் வெயிலில் வைத்து, திரும்பவும் வீட்டுக்குள் கொண்டு வந்து விடுவேன்.
செடிகளுக்கு எப் போது தண்ணீர் தேவையோ, அப்போது மட்டுமே தண்ணீர் விடுவேன். நானும், என் கணவரும் செடிகளுக்கு மத்தியில் தான் தினமும், 'வாக்கிங்' செல்கிறோம். அது, செடிகளை பார்த்த மாதிரி இருப்பதுடன், மனதிற்கு ஆரோக்கியமும் கொடுக்கிறது.
மாலை நேரத்தில், மொட்டைமாடி சூரிய வெளிச்சத்தில் மின்னும். என் வீட்டை சுற்றி முழுக்க அடுக்குமாடி குடியிருப்புகள் இருப்பதால், என் வீட்டு மொட்டைமாடி பசுமையாக காட்சிஅளிக்கும்.
மாடித் தோட்டத்தில் முக்கியமானது பராமரிப்பு தான்.தண்ணீர் தேவையைப் பொறுத்து, ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் ஊற்ற வேண்டும்.
தொட்டி நிரம்பி வழியும் அளவுக்கு தண்ணீர் ஊற்றக்கூடாது. மாடித் தோட்டத்துக்குப் பயன்படுத்தும் உரங்கள் உயிர் உரங்களாகவும், இயற்கை உரங்களாகவும் இருப்பது நல்லது.
மாடித் தோட்டத்தில் பூச்சித் தாக்குதல் ஏற்பட்டால், '3ஜி' கரைசல் தெளிக்கலாம். செடிகளின் வளர்ச்சிக்கு, வாழைப்பழ கரைசல் தெளிக்கலாம்.
வேரின் ஆழத்தில் புழுக்களின் தாக்குதலை தவிர்க்க, வேப்ப எண்ணெய் கரைசலை நீரில் கலந்து விடலாம்.
வாரம் ஒரு முறை செடியைச் சுற்றி மண்ணை கொத்திவிட வேண்டும். காய்கள் முற்றி விடாமல், அவ்வப்போது அறுவடை செய்ய வேண்டும்.
'வேறு இடங்களில் இருந்து செடிகளை வாங்கி வந்து நடுகிற போது, பல செடிகள் வளராமல் போகலாம். அதற்கு காரணம், செடிகளோட வேர்கள் அந்த மண்ணுக்கு, 'செட்' ஆகாமல் இருக்கும்.
அதனால், கற்றாழையில் இருக்கிற ஜெல்லை எடுத்து, அதில் வேர்களை முக்கி, தொட்டியில் நடவு செய்கிறேன்.
இதனால், வேர்களில் எந்த நோய்கள் இருந்தாலும் பயிர் வளர்ச்சியை பாதிப்பதில்லை. இதுபோல தேனில் செடியோட வேர்களை நனைத்தும் நடவு செய்யலாம். அவரவருக்கு ஏற்ற மாதிரி நடவு செய்து கொள்ளலாம்.
தொடர்புக்கு:
96111 05803
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!