Load Image
Advertisement

நடுரோட்டுல கார்ல கைமாறுது லஞ்சம்... விஜிலென்ஸ் போலீஸ் விழிக்குமா கொஞ்சம்?

வீட்டில் அமர்ந்து, 'சோழர்கள் இன்று' புத்தகம் படித்துக் கொண்டிருந்தாள் சித்ரா. திடீரென 'என்ட்ரி' கொடுத்த மித்ரா, ''என்னக்கா! புத்தக கண்காட்சியில வாங்குன புத்தகங்களைப் படிக்க ஆரம்பிச்சிட்டீங்களா... நானும் இந்தப் புத்தகத்துல இருந்துதான் ஆரம்பிச்சிருக்கேன்!'' என்று உற்சாகத்தோடு பேசினாள்.

அவளே தொடர்ந்து, ''ஏதோ பிரண்டுக்கு இடம் பார்க்கப் போலாம்னு சொன்னீங்க...!'' என்று நினைவூட்டினாள். அதைக் கேட்ட சித்ரா, ''அச்சோ! நான் மறந்தே போயிட்டேன் மித்து...இப்போ கிளம்பிருவோம்! கால் மணி நேரத்துல கிளம்பிரலாம்...இடத்துக்கு ரேட்டுதான் ஏத்திட்டே போறாங்க!'' என்றாள்.

சித்ரா முடிப்பதற்குள் குறுக்கிட்டுப் பேசினாள் மித்ரா...

''அவுங்க என்ன பண்ணுவாங்க...லஞ்சத்தை தாறுமாறா ஏத்திட்டே போறாங்க...ஒவ்வொரு டிபார்ட்மென்ட்லயும் என்.ஓ.சி., வாங்க தனித்தனியா தண்டம் அழ வேண்டியிருக்கு. டீ.டி.சி.பி.,யில லே-அவுட்டுக்கு பிளானிங் பர்மிஷன் வாங்க, ஏக்கருக்கு மூணுலயிருந்து அஞ்சு லட்சம் வரைக்கும் தர வேண்டியிருக்கு!''

''ஹாகா ஏரியாவுல இது இன்னும் ஜாஸ்தியாகும் மித்து...அங்க பாரஸ்ட் டிபார்ட்மென்ட்டுக்கு மட்டும் தனியா, ஏக்கருக்கு அஞ்சாறு லட்சம் தரணும்!''

''உண்மைதான்க்கா...! இவுங்கள்லாம் வாங்குறது போதாதுன்னு இப்போ பத்திரப்பதிவுத்துறையில, புது லே-அவுட்களுக்கு வழிகாட்டி மதிப்புக்கு, ஏக்கர் கணக்குல லஞ்சம் வாங்குறாங்க!''

''அது தெரியுமே...ஏக்கருக்கு ரெண்டு லட்ச ரூபாய் லஞ்சம் வாங்குறாங்கன்னு, 'தினமலர்'ல தெளிவா எழுதிருந்தாங்களே...இப்போ அதையும் கூட்டிட்டாங்களா?''

''ஆமாக்கா! ஏரியாவைப் பொறுத்து, ரெண்டு, மூணுன்னு வாங்குறாங்களாம்...இதுல ஒரு ஸ்பெஷல் தகவல் என்னன்னா, இந்த லஞ்சத்தை ரோட்டுல வச்சு அவுங்க வாங்குறாங்கங்கிறதுதான்!''

''என்ன மித்து சொல்ற?''

''பொய்யில்லைக்கா...டிபார்ட்மென்ட் வி.ஐ.பி.,யான மதுரைக்காரரோட பி.ஏ.,ட்ட பேசிட்டு வரச் சொல்றாங்களாம். அவர்ட்ட பேசுனா, கோயம்புத்துார்ல இருக்குற ஒருத்தரோட நம்பர் தர்றாராம். அவரு, ஏதாவது ஒரு ரோட்டுக்கு, பணத்தோட வரச் சொல்றாராம். அங்க ஒரு காரு வருதாம். அதுல இருக்கிறவுங்கள்ட்ட பணத்தைக் கொடுத்துட்டு, திரும்பிப் பார்க்காமப் போயிட்டே இருக்கணுமாம்!''

மித்ராவின் தகவலைக் கேட்டு, கோபத்தோடு பேசினாள் சித்ரா...

''இவுங்களுக்குக் கொடுக்குற லஞ்சத்தை எல்லாம், கடைசியில மக்கள் தலையிலதான் ஏத்துவாங்க. அப்பிடியே சைட் வாங்குனாலும் நிம்மதியா வீடு கட்ட முடியுதா...கார்ப்பரேஷன்ல பில்டிங் கட்ட, வரைபட அனுமதி வாங்குறதுக்கு கட்டணம் கட்டுறதோட, 'பார்ட்டி பண்ட்'ங்குற பேருல, தனியா லஞ்சம் புடுங்குறாங்க. இதுக்குன்னே, 'எம்' ஆபீஸ்லயிருந்து சில ஆளுங்களைப் போட்ருக்காங்களாம்!''

''அப்பிடி இப்பிடி லஞ்சம் கொடுத்து, வீட்டைக் கட்டுனாலும் நிம்மதியா குடியேற முடியாது...சொத்து வரிக்கு சதுர அடிக்கு கணக்குப் பண்ணி, 'எம்' ஆபீஸ் ஆளுங்க லஞ்சம் கேக்குறாங்க. வீடுன்னா சதுரஅடிக்கு அஞ்சு ரூபா, கமர்சியல் பில்டிங்னா சதுர அடிக்கு 10 ரூபா...இதைக் கொடுக்கலைன்னா நம்ம பைலை கிடப்புல போட்ருவாங்க...!''

'' உண்மை மித்து! ஆனா 'பார்ட்டி பண்ட்'ங்குற பேர்ல இவுங்க லஞ்சம் வாங்குறதைப் பயன்படுத்தி, கார்ப்பரேஷன் ரெவின்யூ டிபார்ட்மென்ட்ல இருக்குற சில ஆபீசர்களும், ஒரு 'பில்' போட்டு கலெக்சன் பண்றாங்க!''

''இதுக்கு பேசாம...நம்ம கார்ப்பரேஷன் சட்டத்தை மதிக்காத ஆபீசர் மாதிரி, பர்மிஷனே வாங்காம வீட்டைக் கட்டிரலாம்...!''

சிரித்துக் கொண்டே சித்ரா சொன்னதைக் கேட்ட மித்ரா, சீரியஸ் ஆக பேச ஆரம்பித்தாள்...

''அக்கா! கார்ப்பரேஷன்ல நோட்டீஸ் கொடுக்கப் போறாங்கன்னு தெரிஞ்சதும், அதுக்கு முந்தியே, அவரு மனைவி பேருல, ஹவுசிங் செகரட்டரிக்கு 'அனுமதியில்லாத கட்டடத்துக்கு அனுமதி கொடுக்கச்சொல்லி' லெட்டர் எழுத வச்சு, அதை அவுங்களும் டீ.டி.சி.பி.,க்கு ரெக்கமண்ட்டும் பண்ணிட்டாங்க...அங்க இருந்து ஸ்பெஷல் ஆர்டர் சீக்கிரமே வந்திரும்னு சொல்லிட்டு இருக்காங்க!''

''என்ன மித்து...அநியாயமா இருக்கு...அப்போ 'இன்புளூயன்ஸ்' இருக்கிறவுங்க, எப்பிடி வேணும்னாலும் கட்டடம் கட்டிட்டு, கவர்மென்ட்ல இருந்து ஸ்பெஷல் ஆர்டர் வாங்கிக்கலாமா...முதல்ல அரசு ஊழியரா இருக்குற அந்தம்மா, வீடு கட்டுறதுக்கு முறைப்படி டிபார்ட்மென்ட் பர்மிஷன் வாங்கிருக்காங்களான்னே தெரியலை...!''

இதைச் சொன்ன சித்ரா, சிறிது இடைவெளி விட்டு தொடர்ந்தாள்...

''சிட்டி முழுக்க குப்பை அள்ளுற வேலையை, பிரைவேட்ல கொடுக்குறதுக்கான தீர்மானத்துக்கு முன் அனுமதி வாங்கிருக்காங்கள்ல...எங்களை டிஸ்கஸ் பண்ணாம ஏன் நீங்களா முடிவெடுத்தீங்கன்னு, கவுன்சிலர்கள் எல்லாரும் கடுப்புல இருக்காங்க. தள்ளுவண்டி விவகாரத்துக்கு அடுத்து, தொடர்ச்சியா அவுங்க கட்சிக்காரங்களே நிறையா 'பைல்ஸ்' வெளியிட்டுட்டு இருக்காங்க!''

''நானும் பார்த்தேன்க்கா...கார்ப்பரேஷன்ல வருஷத்துக்கு 400 கோடி ரூபாய் பொது நிதியில இருந்து செலவழிக்கிறாங்க...அதுல வேலை பாக்குற கான்ட்ராக்டர் ஒருத்தரையும் விடாம துரத்திப் பிடிச்சு, தம்பதி 'கல்லா' கட்டுதாம்.

அப்புறம்...நம்ம ஜூவுல இருக்குற அனிமல்ஸ் எல்லாம் பாரஸ்ட் டிபார்ட்மென்ட்டுக்குப் போன பிறகு, அதை பிரைவேட்ல கொடுத்து, வெளிநாட்டுப் பறவைகளை வச்சு, ஆளுக்கு 55 ரூபா டிக்கெட் போட்டு வசூல் பண்ணப் போறாங்களாம். அதுக்கும் பேரம் நடக்குதாம்!''

''இன்னொரு தகவலும் வந்துச்சு...வருமானம் ஜாஸ்தியாயிட்டதால, பினாமி பேர்ல 'ப்ராப்பர்ட்டி' வாங்க ஆரம்பிச்சிட்டாங்களாம்...காரமடை பக்கத்துல அஞ்சரை ஏக்கர் நிலம் வாங்கிப் போட்ருக்காங்களாம். ஒரு ஏக்கர் 70 லட்சம் ரூபாயாம்!''

''தெற்குல முக்கியப் பொறுப்புல இருக்குற, மேடத்தைப் பத்தியும் அவுங்க கட்சி கவுன்சிலர்களே கழுவி ஊத்துறாங்க... மண்டலக் கூட்டத்துல ஆளுங்கட்சி கவுன்சிலர்களே, 'எல்லா வேலைக்கும் மேடம் ரெண்டு பர்சன்டேஜ் கேக்குறாங்க'ன்னு பகிரங்கமா போட்டு உடைச்சிருக்காங்க!''

''ஆக மொத்தத்துல, ஆளும்கட்சியைக் காலி பண்றதுக்கு, அவுங்க கட்சிக்காரங்கதான் அதிகமா உழைக்கிறாங்க போலத் தெரியுது!''

சித்ராவின் கமென்ட்டுக்கு பலமாகச் சிரித்த மித்ரா, அடுத்த மேட்டருக்குத் தாவினாள்...

''டாஸ்மாக், எலைட் ஷாப்கள்ல பாட்டிலுக்கு 10 ரூபா கூடுதலா வாங்கக்கூடாதுன்னு, ஆர்டர் போட்டாலும், பெரும்பாலான கடைகள்ல இன்னும் வாங்குறாங்களாம். கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, கூகுள் பே எதுலயும் பணம் வாங்க மாட்டேங்கிறாங்க...கேஷ்லதான் கூடுதலா அமவுன்ட் வாங்க முடியும்கிறதுதான் ஒரே ரீசன். அதை மீறி யாராவது கேள்வி கேட்டா, 'மெஷின் ரிப்பேர்'னு சொல்றாங்களாம்!''

''ஒரு சில கடைகள்ல, 2000 ரூபாய் நோட்டுகளை கமிஷனுக்கு மாத்திக் கொடுக்குறாங்களாமே...!''

''டாஸ்மாக் கடையில இப்பிடியும் பண்றாங்களா....ரேஷன் கடைகள்ல மக்களுக்கு எதைக் கேட்டாலும் 'இல்லை இல்லை'ன்னு சொல்லிட்டு, வெளியில விக்கிற வேலை இப்போ அதிகமா நடக்குது.

காளப்பட்டியில இருக்குற 22ம் நம்பர் கடையில வேலை பாக்குற ரெண்டு லேடீசும் சேர்ந்து, எதைக் கேட்டாலும் 'இல்லை, லோடு வரலை'ன்னு சொல்லிட்டு, அங்க வச்சே வட மாநிலத் தொழிலாளர்களுக்கு, பொருளை விக்கிறாங்களாம்!''

''யாருக்குமே கொஞ்சம் கூட பயம்கிறதே இல்லாமப் போச்சு. நம்ம ஊரு விஜிலென்ஸ் போலீஸ் வேலை பாக்குற லட்சணம் அப்பிடி!''

''போலீஸ் மேட்டர் எதுவும் பேசலையேன்னு நினைச்சேன்...தடாகம் ஏரியாவுல கஞ்சா சேல்ஸ் பின்னி எடுக்குதாம். சின்னத்தடாகம் பஸ் ஸ்டாண்ட்லயும், சுத்து வட்டாரத்துலயும் எக்கச்சக்கமா கஞ்சா விக்கிறாங்களாம். தடாகம் போலீஸ்க்கு தாராளமா மாமூல் போகுறதால கண்டுக்கிறதில்லைங்கிறாங்க!''

''மித்து! நம்ம சிட்டி பெரிய போலீஸ் ஆபீசருக்கு சீக்கிரமே டிரான்ஸ்பர் வந்திரும்னு பேசிட்டு இருக்காங்க. கோடநாடு கேஸ்ல எதுவுமே பண்ணாம, பந்தை வேற பக்கம் தள்ளி விட்ட ஆபீசரை, அந்த கேஸ்க்கு உதவுறதுக்காக இங்க கொஞ்ச நாள் விட்டு வைப்பாங்கன்னும் ஒரு தகவல் ஓடுது!''

''அந்த கேஸ் சம்பந்தமா, ஓ.பி.எஸ்., கோஷ்டி ஒரு ஆர்ப்பாட்டம் கூடப் பண்றாங்களே... டிடிவி ஆதரவாளர்களும் அதுல ஒண்ணு சேரப் போறாங்களாம்...அவுங்க 'டார்கெட்' கொங்கு மண்டலத்துல இருக்குற ரெண்டு முக்கியமான தலைகளை இந்த கேஸ்ல இழுக்கணும்கிறதுதானாம்...!''

''கொங்கு மண்டல 'மாஜி'க்களைப் பத்திப் பேசவும், ஒரு மேட்டர் ஞாபகம் வந்துச்சு...கருணாநிதியோட கனவுத் திட்டமான செம்மொழிப் பூங்கா டெண்டரை, நம்ம ஊரு 'மாஜி'யோட பினாமி கான்ட்ராக்ட் நிறுவனம் கைப்பத்திருச்சாம். ஆனா அதுக்கு 'ஒர்க் ஆர்டர்' கொடுக்காம இழுத்தடிக்கிறாங்களாம். ஒதுங்கி போகச்சொல்லி, மறைமுகமாக மிரட்டல் விடுக்குறதாவும், ஒரு தகவல் கசிஞ்சிருக்கு!''

சித்ரா பேசும்போது, அலைபேசியில் வந்த அழைப்பை ஏற்றுப் பேசிய மித்ரா, பேசி முடித்து விட்டு, அந்த மேட்டரை விளக்கினாள்...

''அக்கா! நம்ம அக்ரி யுனிவர்சிட்டியில அட்மிஷனுக்கான கவுன்சிலிங் முடிஞ்சு, இப்போ 'சர்ட்டிபிகேட் வெரிபிகேஷன்' மட்டும் இங்க நடக்குது. அதுக்கு வந்திருக்குற மாணவர்கள், அவுங்க அம்மா, அப்பாக்கள்ட்ட பிரைவேட் அக்ரி காலேஜ்கள்ல சேரச் சொல்லி, 'கேன்வாஸ்' பண்றாங்களாம். அத்தனை பேரும் புரோக்கர்கள்தான். அவுங்களை ஏன் யுனிவர்சிட்டியில கண்டுக்க மாட்டேங்கிறாங்கன்னே தெரியலை!''

''நம்ம பாரதியார் யுனிவர்சிட்டி பத்தி ஒரு மேட்டர்...அங்க ஒரு டிபார்ட்மென்ட் தலைவர் மேல, அங்க வேலை பாக்குற லேடி புரபசர் புகார் கொடுத்ததும், அவரை சஸ்பெண்ட் பண்ணிட்டாங்க. அவர் கோர்ட்டுக்குப் போய் வாங்குன ஆர்டர்ல, அதை திரும்ப வாங்கீட்டாங்க... உண்மையிலேயே டிபார்ட்மென்ட்ல நடந்த ஒரு மோதல் விவகாரத்தை, இப்பிடி தேவையில்லாம திசை திருப்பிட்டாங்களாம்!''

''அது நானும் கேள்விப்பட்டேன்க்கா...யுனிவர்சிட்டியை நிர்வகிக்குற ஒரு பொறுப்புல இருக்குற ஒரு மேடமும், முக்கியப் பொறுப்புல இருந்த முன்னாள் ஒருத்தரும்தான், இதுக்குப் பின்னணின்னு தகவல் வந்துச்சு...அந்த டிபார்ட்மென்ட் தலைவர், கோபத்துல கொஞ்சம் எடுத்தெறிஞ்சு பேசுவாராம். ஆனா இந்த மாதிரி அவர் நடந்துக்க வாய்ப்பே இல்லைன்னு மத்தவுங்க பேசுறாங்க...!''

''அதைத்தான் நானும் சொல்ல வந்தேன்...இதுமாதிரி ஒண்ணுமேயில்லாத பிரச்னைக்கு பாலியல் புகாரை ஒரு ஆயுதமாப் பயன்படுத்துனா, நாளைக்கு நிஜமாவே நடக்குற ஒரு தப்பையும், கண்டிக்க முடியாமப் போயிரும்!''

பேசிக்கொண்டே, நேரத்தைப் பார்த்த சித்ரா, ''மித்து! டைம் ஆச்சு...அஞ்சே நிமிஷத்துல கிளம்பி வர்றேன்!'' என்று தன் அறைக்குள் புகுந்தாள்.வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement