வரும், 2024 லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் பா.ஜ., அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும்; அத்துடன், 2026 சட்டசபை தேர்தலிலும், தமிழகத்தில் ஆளும் கட்சியாக உருவாக வேண்டும் என்ற, முனைப்புடன் தீவிர களப்பணியாற்றி வருகிறார், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை.
அதனால், மத்திய பா.ஜ., அரசின் ஒன்பது ஆண்டு சாதனைகளை, தமிழகத்தில் உள்ள, ௨௩௪ சட்டசபை தொகுதி மக்களிடமும் எடுத்துக் கூறும் வகையில், 'என் மண், என் மக்கள்' என்ற பெயரில், ராமேஸ்வரத்தில் இருந்து பாதயாத்திரையை துவக்கி உள்ளார். மொத்தம், 168 நாட்கள் நடைபெறும், இந்த யாத்திரையின் போது, 700 கி.மீ., துாரம் நடந்தும், 1,500 கி.மீ., துாரம் வாகனத்திலும் அண்ணாமலை செல்ல உள்ளார். இந்த பாதயாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா துவக்கி வைத்தார்.
இந்திய அரசியலில் நாடு சுதந்திரம் அடையும் முன், மகாத்மா காந்தி மேற்கொண்ட தண்டி யாத்திரை தான் மிகவும் பெயர் பெற்றது. ஆங்கிலேயே அரசு, உப்புக்கு வரி விதித்ததை கண்டித்து, 1930 மார்ச், 12 முதல் ஏப்ரல், 6ம் தேதி வரை, குஜராத் மாநிலம், சபர்மதி ஆசிரமத்தில் இருந்து தண்டி கடற்கரை நோக்கி, 24 நாட்கள், தொண்டர்களுடன் 386 கி.மீ., நடைபயணம் மேற்கொண்டார் காந்தி.
நாடு சுதந்திரம் அடைந்த பின், முன்னாள் பிரதமர் சந்திரசேகர், முன்னாள் துணை பிரதமர் அத்வானி, முன்னாள் மத்திய அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி, ஆந்திர மாநில முன்னாள் முதல்வர்களான என்.டி.ராமராவ், ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி, சந்திரபாபு நாயுடு, அம்மாநிலத்தின் தற்போதைய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோரும், அரசியல் காரணங்களுக்கான பாதயாத்திரை நடத்தி, அதன் வாயிலாக பலன் அடைந்துள்ளனர். அதே நேரத்தில், சில சந்தர்ப்பங்களில் சிலரின் யாத்திரைக்கு மவுசு இல்லாமல் போனதும் வரலாறு.
தமிழகத்தில், 1982 பிப்ரவரியில், மதுரையில் இருந்து திருச்செந்துார் முருகன் கோவில் வரை, நடைபயணம் மேற்கொண்டார் முன்னாள் முதல்வர் கருணாநிதி. காணாமல் போன முருகன் கோவில் வைர வேலை மீட்கவும், ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரி சுப்பிரமணிய பிள்ளை மர்ம மரணம் குறித்து விசாரித்த நீதிபதி பால் கமிஷன் அறிக்கை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி,எம்.ஜி.ஆர்., ஆட்சியில் இந்த நடைபயணத்தை அவர் மேற்கொண்டார்.
அதேபோல, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோவும், மதுவிலக்கு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காவிரி பிரச்னை என, பல பிரச்னைகளுக்காக, நீண்ட துார யாத்திரைகளை மேற்கொண்டார். குறிப்பாக, 1994ல், ஜெயலலிதா தலைமையிலான, அ.தி.மு.க., அரசுக்கு எதிராக, கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரையிலும், 1,500 கி.மீ., துாரம், 51 நாட்கள் நடைபயணம் மேற்கொண்டார்.
ஆனால், கருணாநிதி மற்றும் வைகோவின் நடைபயணங்களாலும், வேறு சில காரணங்களுக்காக, பா.ம.க., தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் மேற்கொண்ட பாதயாத்திரைகளாலும், பெரிய அளவில் அவர்களுக்கு பலன் கிடைக்கவில்லை.
இந்த தருணத்தில் தான், தமிழகத்தில், பா.ஜ.,வின் செல்வாக்கை துாக்கி நிறுத்த பாதயாத்திரை புறப்பட்டுள்ளார், அண்ணாமலை. இந்த யாத்திரையால் தமிழக மக்கள் மத்தியில், அவர் மேலும் பிரபலமாவார் என்பதில் மாற்றமில்லை.
அதேநேரத்தில், தமிழகத்தில் பா.ஜ.,வின் செல்வாக்கு அதிகரித்து, அது ஓட்டுகளாக மாறுமா என்பது, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலின் போது தான் தெரியவரும்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!