Load Image
Advertisement

கொடுத்து 'வச்சவருக்கு' கோவை... மறுத்துப் பேசியவர்களுக்கு மதுரை!

வெளியே கிளம்புவதற்காக சித்ராவும், மித்ராவும் கிளம்பும்போது, மழை துாறலாக ஆரம்பிக்கவும், மறுபடியும் இருவரும் வீட்டிற்குள் சென்று, 'டிவி'யைப் போட்டு உட்கார்ந்தார்கள். செய்தித் தொலைக் காட்சியில், எங்கோ கட்டடத்தை இடிக்கும் காட்சியைப் பார்த்ததும், மித்ராதான் ஆரம்பித்தாள்...

''அக்கா! நம்ம கார்ப்பரேஷன்ல இடிக்க வேண்டிய கட்டடங்கள் எண்ணிக்கை அதிகமாயிட்டே இருக்கு... அதுலயும் கிழக்குல இருக்கற அந்த துறை ஆபீசர், அனுமதியில்லாத கட்டடங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி வசூல் பண்றதுல கில்லாடியாம்!''

மித்ராவின் கருத்தை பலமாக ஆமோதித்த சித்ராவும், அதே மேட்டரைத் தொடர்ந்தாள்...

''கார்ப்பரேஷன்ல சட்டத்தை அமல்படுத்த வேண்டிய ஆபீசரே, எந்தவிதமான அனுமதியும் வாங்காம கட்டடம் கட்டிட்டு இருக்காரு. அவரோட மனைவி பேருல கட்டுற கட்டடத்துக்கு, கார்ப்பரேஷன்ல இருந்து நோட்டீஸ் கொடுத்தாங்க...ஆனா அதையும் வாங்கி வச்சிக்கிட்டு, அவர் இன்னமும் கட்டிட்டேதான் இருக்காரு. சொல்லப் போனா, அந்த கட்டடத்துக்கு பர்மிஷனே, டீ.டி.சி.பி.,யிலதான் வாங்கணும். ஆனா...!''

சித்ரா முடிப்பதற்குள் குறுக்கிட்டாள் மித்ரா...

''அவுங்களும் நோட்டீஸ் கொடுக்கலை...கார்ப்பரேஷனும் எதுவும் பண்ணலை...சென்னையில ஆளும்கட்சியில முக்கியமான பொறுப்புல இருக்குற வக்கீல் ஒருத்தரு கூப்பிட்டு, இங்க இருக்குற ஆபீசர்களைச் சத்தம் போட்டதால, அப்பிடியே 'ஆப்' ஆயிட்டாங்களாம். அந்த தைரியத்துலதான், மறுபடியும் கட்ட ஆரம்பிச்சிட்டாராம்!''

''கார்ப்பரேஷன் ஆபீசரே சட்டத்தை மதிக்காததைப் பத்தி, ஒரு தேசியக் கட்சியோட மாநிலத் தலைவர் வரைக்கும் கம்பிளைன்ட் போயிருக்காம். அடுத்த தடவை கோயம்புத்துாருக்கு வர்றப்போ, அவரும் இதைப் பத்தி கேள்வி எழுப்பப் போறார்ன்னு, ஒரு தகவல் கசிஞ்சிருக்கு!''

''இதை கேளுங்க! கிழக்கு மண்டலத்துல கார்ப்பரேஷன் ரோட்டை ஆக்கிரமிச்சு, ஒருத்தரு வீடு கட்டிருக்காரு. அதுக்குக் கொடுத்த கட்டட அனுமதியையே ஒரு லேடி ஆபீசர் ரத்து பண்ணிட்டாங்க...கட்டடம் கட்டுனவரு ஐகோர்ட் போனாரு...அங்க 'ஆவணங்களைப் பார்த்து நடவடிக்கை எடுங்க'ன்னு டைரக்சன் கொடுத்தாங்க...ஆனா ரோடுக்கான ஆவணத்தைப் பார்க்காமலே, இன்னொரு லேடி ஆபீசர் கட்டட அனுமதியை நீட்டிச்சுக் கொடுத்துட்டாங்க!''

''யெஸ்... முன்னாள் உளவுத்துறை அதிகாரி தலையிட்டுதான், ஆபீசர்களை 'இன்புளூயன்ஸ்' பண்ணுனார்னு தகவல் வந்துச்சே...புது கமிஷனர் வந்ததும் அந்த அனுமதியை நீட்டிச்சுக் கொடுத்த, 3 டவுன் பிளானிங் லேடி ஆபீசர்களுக்கு 8(2) சார்ஜஸ் போட்டாரே!''

''கிரேட் அக்கா! எல்லாத்தையும் ஞாபகம் வச்சிருக்கீங்களே...அந்த விவகாரத்தை விசாரிக்கச் சொல்லி, மேற்கு மண்டலத்துல இருக்குற, பெரிய ஆபீசருக்கு கமிஷனர் ஆறு மாசத்துக்கு முன்னாடியே உத்தரவு போட்டாரு...இந்த மாசம் ரிட்டயர்டு ஆகப்போற அவரு, 'எதுக்கு வம்பு'ன்னு மூணு பேர்ட்டயும் வேண்டியதை வாங்கிட்டு, 'நாட் ப்ரூவ்டு'ன்னு போட்டுக் கொடுத்துட்டாரு...இப்போ அதை நேர்ல வந்து விளக்கச் சொல்லிருக்காராம் கமிஷனர்!''

மித்ரா பேசும்போதே, இருவருக்கும் டீ கொண்டு வந்த சித்ரா, டீயைக் குடித்துக் கொண்டே அடுத்த கேள்வியைக் கேட்டாள்...

''அதிருக்கட்டும் மித்து! கார்ப்பரேஷன் ஆபீசர்ஸ் ரெண்டு பேரை மதுரைக்கு தூக்கி அடிச்சிட்டாங்களாமே?''

''ஏ.இ.இ.மூணு பேருக்கு இ.இ.,யா புரமோஷன் கொடுக்க, ஆளுக்கு 25 லட்சம் கேட்ருக்காங்க...ஒருத்தரு, 'ஒத்த ரூபா கூட தரமாட்டேன்; எங்க வேணும்னாலும் மாத்திக்கோங்க'ன்னு சொல்லிட்டாராம். இன்னொரு ஆபீசர், 'அஞ்சுக்கு மேல என்னால முடியாது'ன்னு கைய விரிச்சிருக்காரு. விரல் அதிகாரி மட்டும், 'சம்பாதிச்சு' தர்றேன்னு உறுதி சொன்னதால அவரை விட்டுட்டு, மத்த ரெண்டு பேரையும் மதுரைக்கு மாத்திட்டாங்க!''

''கார்ப்பரேஷன் சார்புல, 'வணக்கத்துக்குரியவருக்கு' புது கார் வாங்கிக் கொடுத்தாலும், அவுங்க ஹஸ்பெண்ட்டுக்கு தனிக்காரு கேட்ருக்காரு. இப்போ கார்ப்பரேஷன்ல இருந்து ஒரு வண்டி கொடுத்திருக்காங்களாம்...ஸ்டிக்கரை கிழிச்சிட்டு, அந்த வண்டியிலதான் அவர் வலம் வர்றாராம்...ரெண்டு பேரும் சென்னைக்கு, 'பிளைட்'ல அடிக்கடி போயிட்டு வர்றாங்களாம்...அதுக்கான செலவை கார்ப்பரேஷன்ல கேக்குறாங்களாம்!''

''அடப்பாவமே! அவுங்களுக்கு என்ன காசு, மரத்துலயா விளையுது...எப்பிடித்தான் பில் எழுதப் போறாங்களோ...!''

''அதான் அவுங்களும் புலம்பிட்டு இருக்காங்க...இந்த லேடி மட்டுமில்லை...எட்டிமடையில இருக்குற லேடி தலைவரும் கூட, புது 'இன்னோவா கிரிஸ்டா'வுல வலம் வர்றாங்களாம். அங்க இருக்குற ஒரு கல்வி நிறுவனத்துல இருந்து வாங்கிக் கொடுத்ததாம். போன கவர்மென்ட்ல கட்டுனதை விட, கம்மியா 'ப்ராப்பர்டி டாக்ஸ்' போட்டுக் கொடுத்ததுக்குப் பரிசாம்...!''

''அங்க கட்டுற எந்தத் கட்டடத்துக்குமே, 'ப்ராப்பரா' பர்மிஷன் வாங்குறதில்லை...சொத்துவரியே பாதிக்குப் பாதி மட்டும்தான் போடுறாங்கன்னு, நானும் கேள்விப்பட்டேன்...எல்லாமே துட்டுதான்!''

பேசிக் கொண்டிருந்த மித்ரா, ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டதும் மற்றொரு மேட்டரை ஆரம்பித்தாள்...

''அக்கா! நம்ம ஜி.எச்.,ல தாராபுரத்தைச் சேர்ந்த 38 வயசு இளைஞர் இறந்ததுக்கு, ஹாஸ்பிடல்தான் காரணம்னு அவுங்க அப்பா மீடியாவுல பேட்டி கொடுத்தார்ல...அதுக்கு மறுநாள், டீன் மேடம் பத்திரிகைக்காரங்களக் கூப்பிட்டு, பிரஸ்மீட் கொடுத்திருக்காங்க...!''

''அதையும் 'டிவி'யில பார்த்தேனே...!''

''அதுல போட்டது கொஞ்சம்தான்...உண்மையில, அப்போ பிரஸ்காரங்க தாறுமாறா கேள்வி கேட்ருக்காங்க... அதுக்கு அவுங்க புகார் கொடுங்கன்னு கேட்க, 'நாங்களே பாதிக்கப்பட்ருக்கோம்'னு பத்திரிகைக்காரங்களே பளிச்சுன்னு பதிலடி கொடுக்க, மேடம் வாயையே திறக்கலியாம்!''

''மித்து! ஏழை ஜனங்க உசிருன்னா அவ்ளோ இளக்காரமாப் போச்சு...மேட்டுப்பாளையம், காரமடைக்கு ஒரு புட் சேப்டி ஆபீசரைப் போட்ருக்காங்க...மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல அவருக்கு ஆபீசும் இருக்கு.

ஆனா பெரும்பாலும் அது பூட்டித்தான் கெடக்குது. ஏரியாவுக்குள்ள அவர் எட்டியே பார்க்காததால, டவுன்ல கெட்டுப்போன புட் அயிட்டங்களை 'டேட்' போடாமலே, பாக்கெட்ல போட்டு வித்துட்டு இருக்காங்க!''

''பாவம்! ஸ்கூல் குழந்தைங்கதான் இந்த மாதிரி அயிட்டங்களை நிறைய வாங்கிச் சாப்பிடுறாங்க...!''

''நீ ஸ்கூல் குழந்தைங்கன்னதும் ஞாபகம் வந்துச்சு...ஜெயலலிதா மேடம் சி.எம்.,மா இருக்குறப்போ, எல்லா ஸ்கூல்கள்லயும் குழந்தைங்க அறிவைத் துாண்டுறதுக்கு, செஸ் போட்டி கட்டாயம் நடத்தணும்னு உத்தரவு போட்ருந்தாங்க...வருஷா வருஷம் நடந்துட்டு இருந்துச்சு... இந்த வருஷமும் நடத்தச் சொல்லிருக்காங்க. பிஸிக்கல் டைரக்டர்கள் குரூப்ல, இதை ஷேர் பண்ணிருக்காங்க!''

''திடீர்னு உத்தரவு போட்டா எப்பிடி நடத்துவாங்க?''

''அதான் பிரச்னையே...கடைசி நேரத்துல தகவல் சொல்லி, போட்டி நடத்தி குரூப்ல போட்டோ போடச் சொல்லி இருக்காங்க...கொடுமை என்னன்னா, பசங்களே செஸ் போர்டு கொண்டு வந்து விளையாடணுமாம். கவர்மென்ட், கார்ப்பரேஷன் ஸ்கூல்ல படிக்கிற பசங்கள்ட்ட அது எப்பிடியிருக்கும்...அப்புறம் ஸ்கூலுக்கு நாலஞ்சு போர்டு ரெடி பண்ணி, நைட் வரைக்கும் விளையாட வச்சு வீட்டுக்கு அனுப்பிருக்காங்க!''

''நம்ம சி.இ.ஓ., மேடம், 'லேப்ல பசங்களை வச்சுப் பாடம் நடத்தக்கூடாது; பிராக்டிக்கல் இல்லாத நேரங்கள்ல, ஸ்டூடன்ட்ஸ்சை லேப்ல அனுமதிக்க கூடாது'ன்னு வாய்மொழி உத்தரவு போட்ருக்காராம்.

டீச்சர்ஸ் எல்லாம் கொந்தளிக்கிறாங்க...பசங்களை லேப்ல அனுமதிச்சு, அவுங்களை அங்க பிராக்டீஸ் பண்ண அனுமதிச்சா மட்டும்தான், அவுங்களுக்குப் புரியும்கிறதுதான், முன்னாடியெல்லாம் அதிகாரிகள் உத்தரவா இருந்துச்சு!''

''இது நிஜமாவே குழப்பமான உத்தரவுதான்...,''

மித்ரா, டீ கப்களை கழுவி வைத்து விட்டு, பேச்சைத் தொடர்ந்தாள்...

''அக்கா! சூலுார் ஏரியாவுல நுகர்வோர் அமைப்பு பேரை வச்சு, எலக்ட்ரீஷியன் ஒருத்தரு, இ.பி., ரெவின்யூ, போலீஸ் ஆபீசர்கள் எல்லாரையும் மெரட்டுறாராம். யாராவது கேட்டா, கலெக்டர் ஆபீஸ்ல நடக்குற கூட்டத்துல கலந்துக்கிட்ட போட்டோக்களைக் காட்டுறாராம்...இப்போ டாஸ்மாக் கடைகள்ல தினமும் ஓசி பாட்டில் வாங்கி அடிச்சிட்டு, அங்கயே மட்டையாகிர்றாராம்!''

''போலீஸ்னதும் ஞாபகம் வந்துச்சு மித்து! போலீஸ் கமிஷனர் ஆபீஸ்ல எஸ்.ஐ.சி.,ன்னு ஒரு உளவுப் பிரிவு இருக்கு...மதம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளைக் கவனிக்கிறதுதான் இவுங்களோட வேலை. ஆனா கொஞ்ச நாளா, ஸ்டேஷன்கள்ல இருக்குற ஐ.எஸ்., மற்றும் எஸ்.பி.சி.ஐ.டி., போலீஸ்ட்ட இருந்து, எல்லாத் தகவலையும் வாங்கச் சொல்றாங்களாம்...!''

''என்ன காரணமாம்?''

''அது அவுங்களுக்கே தெரியலை...ஏற்கனவே கடுமையான ஆள் பற்றாக்குறை இருக்கு...இதுல இவ்ளோ வேலை கொடுக்குறாங்களேன்னு, கடுமையான மன உளைச்சல்ல இருக்காங்க...பேசாம வி.ஆர்.எஸ்., வாங்கிட்டுப் போயிரலாம்னு சில பேரு யோசிக்கிறாங்க...மன உளைச்சல்ல ஒரு டி.ஐ.ஜி.,யே தற்கொலை பண்ணுன பிறகும், இவ்ளோ ஏன் டார்ச்சர் பண்றாங்கன்னு தெரியலை!''

சித்ரா பேசும்போது வெளியில் பார்த்த மித்ரா, ''அக்கா! செம்மொழிப் பூங்காவுக்கு நிதி ஒதுக்கியும் ஏன் வேலையை ஆரம்பிக்காம இருக்காங்க தெரியுமா?'' என்று கேட்டாள். அவள் தெரியாது என்று தலையாட்டியதும், அவளே பதிலைத் தொடர்ந்தாள்...

''துறையை கவனிக்கிற அமைச்சர் தரப்புல இருந்து, ஈரோடு நிறுவனத்துக்கு ரெகமெண்ட் பண்ணி இருக்காங்க... ஆனா, அ.தி.மு.க., ஆட்சியில் கொடி கட்டி பறந்த கம்பெனிகாரங்களே டெண்டர் போட்டிருக்காங்க. அவுங்களை, டெண்டரை வாபஸ் வாங்கச் சொல்லி பேசிட்டு இருக்காங்களாம். அதனாலதான், டெண்டரை இன்னமும் இறுதி பண்ணலையாம்!''

சொல்லி முடித்த மித்ரா, ''அக்கா! மழை விட்ருச்சு...கிளம்பலாம்!'' என்று எழுந்ததும், இருவரும் வீட்டைப் பூட்டி விட்டு, வெளியில் கிளம்பினர்.வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement