Load Image
Advertisement

அரசியல் நிர்பந்தங்களால் இணைந்த எதிர்க்கட்சிகள்

அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளதால், பா.ஜ.,வுக்கு எதிராக பலமான கூட்டணியை உருவாக்கும் முயற்சியில், காங்கிரஸ், தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஈடுபட்டுள்ளன. இந்தக் கட்சிகளின் முதல் ஆலோசனை கூட்டம், பீஹார் மாநிலம் பாட்னாவில் நடந்தது. இரண்டாவது கூட்டம், கர்நாடக மாநிலம், பெங்களூரில் இம்மாதம், 17 மற்றும் 18ம் தேதிகளில் நடந்தது.

இதில், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா, ராகுல், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், ஆத் ஆத்மி கட்சி தலைவரான, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், திரிணமுல் காங்., தலைவர் மம்தா பானர்ஜி உட்பட, 29 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

பா.ஜ.,வுக்கு எதிராக, 29 கட்சிகளும் ஒன்றிணைந்து, 'இந்தியா' என்ற கூட்டணியை அமைத்துள்ளன. கூட்டணிக்கு பெயர் வைத்து விட்டாலும், தங்கள் அணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்கவில்லை.

பிரதமர் வேட்பாளரை முன்னரே அறிவித்தால், கூட்டணிக்குள் பிரச்னை எழும் என்பதை, காங்., கட்சி யூகித்திருப்பது தெளிவாக தெரிகிறது.

அத்துடன் எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டத்தை மும்பையில் நடத்துவது என்றும், அப்போது, ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், காங்., முன்னாள் தலைவரான ராகுல், அவதுாறு வழக்கில் இரண்டாண்டு தண்டனை விதிக்கப்பட்டதால், எம்.பி., பதவியை இழந்துஉள்ளார். அவரது தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தால் மட்டுமே, வரும் தேர்தலில், அவர் போட்டியிட முடியும். இல்லையெனில், பிரசாரம் மட்டுமே செய்ய முடியும்.

பிரதமர் மோடியை எதிர்க்க பலமான கூட்டணியை உருவாக்கி விட்டதாக, எதிர்க்கட்சிகள் பெருமிதம் கொண்டுள்ள அதே நேரத்தில், பிரதமர் மோடியும், இந்த விஷயத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. எதிர்க்கட்சிகளுக்கு போட்டியாக, ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தை சமீபத்தில் கூட்டி விவாதித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில், அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி, மஹாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா பிரிவினர், அம்மாநில துணை முதல்வர் அஜித்பவார் தலைமையிலான, தேசியவாத காங்., அணியினர் உட்பட, 38 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

பெங்களூரில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்ற, 29 கட்சிகளுக்கும், தற்போது, லோக்சபாவில், 150 எம்.பி.,க்கள் உள்ளனர். பா.ஜ., தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு உள்ள எம்.பி.,க்கள் பலத்துடன் ஒப்பிடுகையில், இந்த எண்ணிக்கை பாதிக்கும் குறைவே.

அத்துடன், கர்நாடகா, சத்தீஸ்கர், ராஜஸ்தான், ஹிமாச்சல பிரதேசம் மாநிலங்களில் ஆட்சி அதிகாரத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி தான், எதிர்க்கட்சிகள் அணியில் முதன்மையானதாகவும் உள்ளது.

இந்தக் கட்சிக்கும், மம்தாவின் திரிணமுல் காங்., கட்சிக்கும், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையே பல்வேறு விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. மேலும், பா.ஜ.,வை எதிர்ப்பதில் முனைப்பு காட்டும், மாநில கட்சிகளுக்கும் சில சொந்த பிரச்னைகளும், அரசியல் நிர்பந்தங்களும் உள்ளன. அதனால் தான், காங்கிரசுடன் அணி சேர்ந்துள்ளன.

இருப்பினும், எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் தங்களுக்குள் உள்ள வேறுபாடுகளை களைந்து, வரும் லோக்சபா தேர்தலை ஒன்றாக சந்தித்தால், அந்தத் தேர்தலில், தே.ஜ., கூட்டணி - இந்தியா கூட்டணி என்ற இரு அணிகளுக்கு இடையேயான போட்டியாகவே, தேர்தல் களம் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement