Load Image
Advertisement

அமைச்சர்கள் புறக்கணித்த அக்ரி இன்டெக்ஸ் பாராட்டு விழாவில் துவங்கிய பாலிடிக்ஸ்!

சித்ராவுக்காக ஸ்பெஷல் டிபன் தயாரித்து விட்டுக் காத்திருந்தாள் மித்ரா. ஸ்வீட்ஸ் பாக்கெட்டுடன் நுழைந்த சித்ரா, கைகளைக் கழுவி விட்டு, நேராக டைனிங் டேபிளுக்குப் போனாள்.

ஸ்வீட்ஸ் சுவைத்தபடி இருந்த சித்ராவை பார்த்து மித்ரா, ''அக்கா, அன்னுார் ஏரியாவுல குப்பனுார், அக்கரை செங்கப்பள்ளி ஏரியாக்கள்ல போலி பர்மிட் வச்சு, லோடு லோடா மண் எடுக்குறாங்க. இதுவரைக்கும் அங்க கரூர்க்காரங்கதான் கலெக்சன் பண்ணிட்டு இருந்தாங்க. இப்போ அவுங்க இல்லாததால, லோக்கல் தி.மு.க.,காரங்களுக்கு மாமூல் போகுதாம்,''

''இதை கேள்விப்பட்டியா... நம்ம ஊருல விழா நடத்துறதுல பெரிய பாலிடிக்ஸ் ஓடிட்டு இருக்கு. கோயம்புத்துார் தொழில் அமைப்புகள் சேர்ந்து, ஜார்க்கண்ட் கவர்னருக்குப் பாராட்டு விழா நடத்துனாங்கள்ல...அதுல கடுப்பாகித்தான், அக்ரி இன்டெக்ஸ் துவக்கவிழாவுக்கு ஆளும்கட்சி அமைச்சர்கள் யாரும் வராததோட, அதிகாரிகளையும் போக வேணாம்னு தடுத்துட்டாங்களாம்!''

''ஓ! அதனாலதான் அந்த பெண் துணைவேந்தர் மட்டும் வந்தாங்களோ?''

''ஆமா மித்து! அவங்க, கவர்னருக்கு ரொம்ப சப்போர்ட்டா இருக்காங்களாம்...பல விஷயங்கள் இவர் மூலமா கசியுதுன்னு துறை அமைச்சருக்கும், இவுங்களுக்கும் பயங்கரமா மோதலாயிட்டு இருக்குன்னு ஒரு தகவல். இந்த யுனிவர்சிட்டியில இப்பிடின்னா, இன்னொரு யுனிவர்சிட்டியில துணை வேந்தர் பொறுப்புக்குழுவுல இருக்குற ஒரு லேடி உறுப்பினரோட ஆதிக்கம் ஓவராயிருச்சாம்!''

சித்ரா சொல்லிக் கொண்டிருக்கும்போது குறுக்கிட்டுப் பேசினாள் மித்ரா...

''பாசமான பேரு கொண்டவுங்கதான...அவுங்களைப் பத்தி எனக்கும் நிறைய தகவல் வந்துச்சுக்கா...அவுங்க யாரையுமே மதிக்கிறது இல்லியாம்...அவருக்கு வேண்டிய ஆளுங்க நிறைய்யப் பேருக்கு முக்கியமான போஸ்ட்டிங் போட்டுக் கொடுக்குறாங்களாம்...அந்தக் குழுவுல இருக்குற இன்னொரு லேடி உறுப்பினர், எதையுமே கண்டுக்காம ஒதுங்கீட்டாங்களாமே!''

''அது தெரியலை மித்து...ஆனா, ஸ்டேட் - சென்ட்ரல் லடாய்ல நம்ம ஊரு இண்டஸ்ட்ரிகாரங்கதான் ரொம்பப் பாவம்...வலது பக்கமா திரும்புனா, ஸ்டேட் கவர்மென்ட் டார்ச்சர்...இடது பக்கம் திரும்புனா, சென்ட்ரல்ல இருந்து ஏதாவது ரெய்டு வருமோன்னு பயம்...!''

''நீங்க என்னமோ இப்பிடிச் சொல்றீங்க...பள்ளிக் கல்வித்துறையும், ஒரு முக்கியமான தொழில் அமைப்பும் சேர்ந்து, 'நம்ம ஊரு பள்ளி'ங்கிற நிகழ்ச்சியை இங்க நடத்துனாங்க. மினிஸ்டர் மகேஷ் வந்திருந்தாரு...ஆனா அதுக்கான இன்விடேஷன்ல கலெக்டர், கார்ப்பரேஷன் கமிஷனர் ரெண்டு பேர் பேருமே இல்லை. சர்ச்சையான பிறகு அவசரமா திருத்தம் பண்ணி, வாட்ஸ்ஆப்ல அழைப்பு அனுப்பிருக்காங்க!''

''இதுவும் இண்டஸ்ட்ரி சம்பந்தப்பட்ட நியூஸ்தான்...நம்ம ஊருல தொழிற்பேட்டை அமைக்கிறதுக்கு நிலம் கையகப்படுத்த, கலெக்டராபீஸ்ல ஒரு செக்சன் தனியா செயல்படுது. அதுக்கு டி.ஆர்.ஓ., தாசில்தார், சர்வேயர்னு நிறைய்ய போஸ்ட்டிங் போட்ருக்காங்க...அவுங்க நிலத்தைக் கையகப்படுத்த ரிப்போர்ட் தயார் பண்ணி அனுப்பிட்டாங்க...ஆனா...!''

''ஆனா கவர்மென்ட்லயிருந்து பதில் வரலையா?''

''அது வந்தா என்ன...வராட்டி அவுங்களுக்கு என்ன...அவுங்களுக்கு நாலு மாசமா சம்பளமே வரலைங்கிறதுதான் பிரச்னை... அரசு நிர்வாகம் அப்படி நடக்குது!''

சாப்பிட்டுக் கொண்டே ஆதங்கப்பட்ட சித்ரா, தண்ணீர் குடித்து விட்டு, அடுத்த கேள்வியைக் கேட்டாள்...

''ஏர்போர்ட் விரிவாக்கத்துக்காவது நிலத்தைக் கையகப்படுத்திக் கொடுத்துட்டாங்களா?''

''அதை ஏன்க்கா கேக்குறீங்க...அதுக்கும் தனியா ஒரு யூனிட் இயங்குது...ஏற்கனவே பல டி.ஆர்.ஓ.,க்கள் மாறி மாறி, இப்ப இருந்த டி.ஆர்.ஓ.,வும் ரிட்டயர்டு ஆயிட்டாரு...மறுபடியும் ஒரு ஆபீசர்ட்ட 'இன்சார்ஜ்' கொடுத்திருக்காங்க...இதனாலதான், வேலை இழுத்துக்கிட்டே இருக்கு. முழுசா லேண்ட் எடுக்குறதுக்குள்ள இன்னும் எவ்ளோ ஆபீசர்ஸ் மாறுவாங்களோ?''

ஆவேசப்பட்ட மித்ரா, சிறு இடைவெளிக்குப் பின் தொடர்ந்தாள்...

''நிலம் கையகப்படுத்துறதுல இந்த கவர்மென்ட் பண்ற குளறுபடிகள் கொஞ்ச நஞ்சமில்லைக்கா...உக்கடம் மேம்பாலத்துக்கு நிலம் கொடுக்குற அஞ்சாறு பேரு, ஐகோர்ட்ல கேஸ் போட்டு, ஒரு ஆர்டரும் வாங்குனாங்க.

கூடுதலா எடுக்குற நிலத்துக்கு இழப்பீடு வேணும், இப்போ இருக்குற வழிகாட்டி மதிப்புலயும், சந்தை மதிப்புலயும் இழப்பீடு கணக்குப் பண்ணனும்கிறதுதான் அவுங்களோட பிரேயர்!''

''ஐகோர்ட்ல என்ன ஆர்டர் போட்டாங்க?''

''உத்தரவு கிடைச்ச நாலு வாரத்துக்குள்ள இழப்பீடை முடிவு பண்ணனும்னு ஆர்டர் போட்டாங்க...ஆனா 18 மாசமாகியும் இன்னும் முடிவு பண்ணலை... முறைப்படி நோட்டீஸ் கொடுக்காம, பேச்சு வார்த்தை நடத்தாம, கட்டப்பஞ்சாயத்து பண்றது மாதிரிப் பேசி, நிலத்தை எடுக்கப் பார்க்குறாங்களாம்...!''

''மித்து! ஏர்போர்ட் பத்திப் பேசவும், அந்த ஏரியாவுல இருக்குற இன்னொரு பிரச்னை ஞாபகத்துக்கு வந்துச்சு... அங்க இருக்குற குமாரசாமி நகர்ல நிறையா பாய்ஸ் ஹாஸ்டல்கள் இருக்கு...எதுக்குமே 'ப்ராப்பர்' சாக்கடை வசதி இல்லை. கழிவுத் தண்ணிய ரோட்டுல விட்டுர்றாங்க. அதனால பயங்கர ஸ்மெல்...நிறைய பிரச்னை...கார்ப்பரேஷன் அதிகாரிகள் காசை வாங்கிட்டு கண்டுக்கிறதில்லைன்னு கம்பிளைன்ட்!''

''கோவை மாநகராட்சியில இப்ப வரைக்கும் எதிர்க்கட்சி 'மாஜி'யோட சப்போர்ட் ஆபீசர்கள்தான் 'டாமினேட்' பண்றாங்கன்னு பேச்சா இருக்கு...அவர் இருந்தப்போ ராவோட ராவா, 54 ஜூனியர் அசிஸ்டெண்ட்களுக்கு போஸ்ட்டிங் போட்டாங்கள்ல...அவுங்கள்ல 21 பேரை திருப்பூருக்கு மாத்திருக்காங்க...ஆனா இன்னமும் பல பேரு அங்க போகவே இல்லியாம்!''

''அதெப்பிடிக்கா போகாம இருக்க முடியும்?''

''எல்லாம் 'மாஜி' யோட மறைமுக உத்தரவுங்கிறாங்க...இன்னும் 11 பேர் 'ரிலீவ்' ஆகாம இருக்காங்க...இதுல ஒரு சிலரு காசாலயே அடிச்சு, இருப்பைத் தக்க வச்சிக்கிட்டதாவும் ஒரு தகவல் ஓடுது...!''

''உண்மைய மறைச்சு, இவுங்க இருக்காங்க...ஆலாந்துறை ஸ்கூல்ல வேலை பார்த்த ரெண்டு டீச்சர்கள், அங்க சத்துணவு அரிசி காணாமல் போனது, பிளஸ் ஒன்ல புது குரூப் ஆரம்பிச்சதைப் பத்தி உண்மையைப் பேசிருக்காங்க. அவுங்க ரெண்டு பேரு பேசுன ஆடியோ லீக் ஆயிருச்சு.

''அது எப்பிடி லீக் ஆச்சுன்னு ஒரு டீச்சர், சைபர் க்ரைம்ல புகார் பண்ணாங்க...அவுங்களை தீத்திபாளையம் ஸ்கூலுக்கு மாத்திட்டாங்க!''

''தனி ஒருவன் மாதிரி உடம்புல ஏதாவது ஆபரேஷன் பண்ணி 'சிப்' வச்சிட்டாங்களா?''

சித்ராவின் கேள்விக்கு சிரித்துக் கொண்ட மித்ரா, அடுத்த மேட்டருக்குத் தாவினாள்....

''ஆபரேஷன்னு சொன்னதும் நம்ம ஜி.எச்., ஞாபகம் வந்துச்சு....அங்க பேஷன்ட்களை படுத்துற பாடு, படு மோசமாயிட்டு இருக்கு...கொடுமை என்னன்னா அங்க வேலை பார்க்குறவுங்களுக்கும் அதே ட்ரீட்மென்ட்தான்.

ஜி.எச்.,ல வேலை பாக்குற ஒரு பெண் துாய்மை தொழிலாளி வயித்துவலின்னு டாக்டரைப் பார்க்க, அவருக்கு எந்த டெஸ்ட்டும் பண்ணாமலே, 'ஒண்ணுமில்லை'ன்னு அனுப்பிட்டாங்க!''

''அடக்கொடுமையே...!''

''பாவம்க்கா....அந்தப் பொண்ணு வீட்டுக்குப் போற வழியில, கணபதியில வாந்தி எடுத்திருக்கு...அவுங்க வீட்டுல இருக்கிறவுங்க, இ.எஸ். ஐ., ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்காங்க...அங்க அவரை டெஸ்ட் பண்ணுன டாக்டர்கள், 'அல்சர் அதிகமாயிருச்சு'ன்னு ட்ரீட்மென்ட் கொடுத்திருக்காங்க!''

''எனக்கும் ஒரு தகவல் வந்துச்சு...ஒரு கர்ப்பிணி, அஞ்சாவது மாச ஸ்கேன் டெஸ்ட் எடுக்க பிரைமரி ஹெல்த் சென்டர் லெட்டரோட வந்திருக்கு...அவரைப் பரிசோதனை பண்ணுன டாக்டர்கள், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுக்கச் சொல்லிருக்காங்க. ஸ்கேன்ல இது ஆறாவது மாசம் எடுக்க வேண்டியதுன்னு, திருப்பி அனுப்பிட்டாங்க!''

''அப்புறம்...!''

''அந்தப் பொண்ணு திரும்ப டாக்டர்கள்ட்ட போனதுக்கு, 'இது இப்பதான் எடுக்கணும்'னு திருப்பி விட்டாங்களாம். மறுபடியும் ஸ்கேன் போனதுக்கு, 'எங்க வேணும்னாலும் சொல்லிக்கோ; எடுக்க முடியாது'ன்னு விரட்டிட்டாங்க...இப்ப வரைக்கும் அந்தப் பொண்ணு ஸ்கேன் எடுக்கவே இல்லை. ஹாஸ்பிடல் நிர்வாகம் என்னதான் பண்ணுதோ!''

சித்ரா சொல்லி முடிப்பதற்குள் மீண்டும் குறுக்கிட்ட மித்ரா, ''அக்கா! ஸ்வீட் சாப்பிடுங்க...ஒரு இன்ட்ரஸ்ட்டிங் மேட்டர் சொல்றேன்!'' என்று தானும் ஒரு ஸ்வீட் எடுத்துக் கொண்டு, மேட்டரைத் தொடர்ந்தாள்...

''ஆர்.எஸ்.புரம் வி.ஐ.பி., பங்களாவுல இருக்குற மேடம், தன்னோட சொந்தக் கட்சியில இருக்குற எதிரிகளை அழிக்க பொம்மை செஞ்சு, மாந்த்ரீகம் பண்ணுனதா ஒரு தகவல் பரவுச்சுல்ல...இப்போ அந்தப் பங்களாவுல பண்ணுன மாந்த்ரீகம் 'ரிவர்ஸ்' ஆகி...வடிவேலு சொன்னது மாதிரி, 'ஏதோ தானா நகருதாம்...கத்துதாம்'. அதனால....!''

பலமாகச் சிரித்த சித்ரா, ''சீக்கிரம் சொல்லு மித்து!'' என்று செல்லமாய்க் கோபிக்க, தொடர்ந்தாள் மித்ரா...

''அதனால இப்போ ராத்திரியானா இவுங்க யாருமே அங்க தங்குறது இல்லியாம்...குடும்பத்தோட கணபதிக்குப் போயிர்றாங்களாம்...!''

மித்ரா சொல்லி முடித்ததும், இருவரும் சிரித்துக் கொண்டே ஒன்றாகக் கை கழுவ எழுந்தார்கள்.வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement