உலக நாடுகள் பலவும் ஆவலுடன் எதிர்பார்த்த, 'சந்திரயான் - 3' விண்கலத்தை, 'இஸ்ரோ' என அழைக்கப்படும், இந்திய விண்வெளி ஆய்வு மையம், 'எல்.வி.எம்., 3 - எம் 4' ராக்கெட் உதவியுடன், சமீபத்தில் திட்டமிட்டபடி, புவி வட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தியது.
நிலவுக்கு, சந்திரயான் விண்கலம் அனுப்பும் திட்டத்தை, 20 வருடங்களுக்கு முன், பிரதமராக இருந்த வாஜ்பாய் அறிவித்தார். அதன்பின், 2008ல், 'சந்திரயான் - 1' மற்றும், 2019ல், 'சந்திரயான் - 2' விண்கலங்களை தொடர்ந்து, தற்போது, மூன்றாவது விண்கலம் அனுப்பப்பட்டு உள்ளது.
'இந்தியாவின் விண்வெளி ஆய்வு வரலாற்றில், புதிய சகாப்தம் படைக்கப்பட்டுள்ளது. நம் விஞ்ஞானிகளின் அயராத அர்ப்பணிப்புக்கு சான்றாக, இந்த சாதனை அமைந்துள்ளது' என, பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
அதே நேரத்தில், சந்திரயான் - 1, 2 மற்றும் 3 விண்கலங்களின் திட்ட இயக்குனர்களாக, தமிழகத்தைச் சேர்ந்த மயில்சாமி அண்ணாதுரை, வனிதா முத்தையா மற்றும் வீர முத்துவேல் பணியாற்றியது, தமிழர்கள் அனைவருக்கும் பெருமை சேர்க்கும் விஷயமாகும். நிலவை ஆராய அனுப்பப்பட்டுள்ள இந்த விண்கலம், அடுத்த மாதம், 23 அல்லது, 24ம் தேதி நிலவில் தரையிறங்கும் என, கூறப்படுகிறது.
அப்படி தரையிறங்கி, இந்திய விஞ்ஞானிகள் எதிர்பார்க்கும் ஆய்வுகளை மேற்கொண்டு தகவல்களை தெரிவித்தால், ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக, நிலவில் தரையிறங்கும் நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா அடையும். அத்துடன், நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தை தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமையும் நமக்கு வந்து சேரும்.
கடந்த, 2019ல் நிலவுக்கு அனுப்பப்பட்ட, 'சந்திரயான் - 2' விண்கலம், வெற்றிகரமாக நிலவின் சுற்று வட்டப் பாதையை அடைந்தது. இருப்பினும், அதிலிருந்து பிரிந்த லேண்டர் நிலவில் தரையிறங்கும் போது, வேகமாக மோதியதால் திட்டம் தோல்வி அடைந்தது.
அந்த விண்கலத்தில் கண்டறியப்பட்ட குறைகள் சரி செய்யப்பட்டு தான், தற்போதைய விண்கலம் அனுப்பப்பட்டுள்ளது. அதனால், முந்தைய விண்கலம் சந்தித்ததை போன்ற பிரச்னைகளை தற்போதைய விண்கலம் சந்திக்காது என, எதிர்பார்க்கப்படுகிறது.
'சந்திரயான் - 3' விண்கலம், நிலவில் பாதுகாப்பாக தரையிறங்குவதற்கும், நிலவின் மேற்பரப்பில், அதன் ரோவர் நகர்வதற்கும் கேமராக்களின் அடிப்படையில், ஆபத்துகளை கண்டறிந்து, தவிர்க்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. எனவே, 'சந்திரயான் - 3' திட்டம் வெற்றிகரமாகி, பல ஆக்கப்பூர்வமான பலன்களை தரும் என, இந்திய விஞ்ஞானிகள் எதிர்பார்க்கின்றனர்.
விண்வெளி ஆய்வுகளை விரிவுபடுத்தும் இலக்குடன், 2025ம் ஆண்டுக்குள் மீண்டும் சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பும், அமெரிக்காவின் ஆர்ட்டெமிஸ் உடன்படிக்கையில், சமீபத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின், சமீபத்திய அமெரிக்க பயணத்தின் போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆர்ட்டெமிஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட, 27வது நாடு இந்தியா.
வரவிருக்கும் நாட்களில், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் பயணங்கள் பெரிய அளவில் திட்டமிடப்படுகின்றன. குறிப்பாக, நிலவுக்கு மனிதனை அனுப்புவதோடு, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான, 'நாசா'வுடன் இணைந்து, செவ்வாய் கிரகத்திற்கு விண்கலங்களை அனுப்பும் பல திட்டங்களையும், செயல்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
அதற்கு, 'சந்திரயான் -3' விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்குவது, நம் நாட்டின் விண்வெளி ஆராய்ச்சிக்கு மேலும் உத்வேகம் தருவதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!