மஹாராஷ்டிரா மாநில அரசியலில், சமீபத்தில் நிகழ்ந்த மாற்றம் காரணமாக, அம்மாநிலத்தின் மற்றொரு துணை முதல்வராக, தேசியவாத காங்கிரசில் இருந்து பிரிந்த அஜித் பவார் பதவியேற்றுள்ளார். இவர், தேசியவாத காங்., தலைவரான சரத் பவாரின் அண்ணன் மகன்.
தேசியவாத காங்., கட்சியில் பிளவு ஏற்படுத்தி, கணிசமான எம்.எல்.ஏ.,க்களுடன் பா.ஜ.,வுடன் கைகோர்த்துள்ளார் அஜித் பவார். அதனால், அவருக்கு துணை முதல்வர் பதவியும், அவரின் ஆதரவாளர்கள் எட்டு பேருக்கு அமைச்சர் பதவியும் தரப்பட்டுள்ளது.
அதே நேரம், சரத் பவாருக்கு நெருக்கமாகவும், நம்பிக்கைக்குரிய தலைவர்களாகவும் கருதப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் பிரபுல்படேல் உள்ளிட்ட சிலரும், அஜித் பவாருடன் கைகோர்த்து, கட்சி உடைய காரணமாக இருந்துள்ளது தான், மாநில அரசியலில் மட்டுமின்றி, தேசிய அரசியலிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த, ௨௦௧௯ல் மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான நேரத்தில், கூட்டணி அமைத்து போட்டியிட்ட பா.ஜ., - சிவசேனா இடையே, முதல்வர் பதவி விவகாரத்தில் மோதல் ஏற்பட்டது. இந்தச் சூழ்நிலையில், சரத்பவாரின் விருப்பத்திற்கு மாறாக, பா.ஜ.,வுடன் அணி சேர்ந்த அஜித் பவார், தேவேந்திர பட்னவிஸ் மீண்டும் ஆட்சி அமைக்க காரணமானார். ஆனாலும், அந்த ஆட்சி மூன்றே நாட்களில் கவிழ்ந்தது.
இதன்பின், சிவசேனா, தேசியவாத காங்., மற்றும் காங்கிரஸ் இணைந்து, மஹா விகாஸ் அகாடி பெயரில் கூட்டணி அமைத்து, உத்தவ் தாக்கரே முதல்வரானார். மூன்று ஆண்டுக்கு பின், உத்தவ் தாக்கரேக்கு எதிராக போர்க்கொடி துாக்கிய ஏக்நாத் ஷிண்டே, 40 எம்.எல்.ஏ.,க்களுடன் வெளியேறி, பா.ஜ., உடன் அணி சேர்ந்து, 2022 ஜூன், 30ல் முதல்வரானார்.
தற்போது, தேவேந்திர பட்னவிஸ், அஜித்பவார் என, இரு துணை முதல்வர்கள் உள்ளதன் வாயிலாக, முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயின் பலம் அதிகரிக்கும் என்பதை விட, அவரது பலவீனம் அதிகரிக்கும் என்பதே உண்மை நிலவரம். இரு துணை முதல்வர்களின் சம்மதமின்றி, எந்த விஷயத்திலும் ஷிண்டேயால் முடிவெடுக்க முடியாது.
அதே நேரம், பா.ஜ.,வுக்கு எதிராக மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து, லோக்சபா தேர்தலுக்கு பலமான கூட்டணியை உருவாக்க நினைத்த சரத் பவாரின் முயற்சிக்கு, அவரது கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவு ஒரு பின்னடைவாக அமைந்துள்ளது.
ஏற்கனவே, உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவில் பிளவு ஏற்பட்டு, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணியே உண்மையான சிவசேனா என, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டு உள்ளதால், அதை எதிர்த்த சட்டப் போராட்டம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், தேசியவாத காங்கிரசில் ஏற்பட்டுள்ள பிளவாலும், மற்றொரு சட்டப் போராட்டம் உருவாகும் என்பதில் சந்தேகமில்லை.
இதற்கிடையில், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா எம்.எல்.ஏ.,க்கள், 40 பேர் மற்றும் உத்தவ் தாக்கரே பிரிவைச் சேர்ந்த, 14 பேர் என, மொத்தம், 54 எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி, இரு தரப்பிலும் கொடுக்கப்பட்ட மனுக்கள் தொடர்பாக, மஹாராஷ்டிரா சட்டசபை சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
இது, மஹாராஷ்டிரா மாநில அரசியலில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் குழப்பம் அடுத்த சில நாட்களுக்கு நீடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
மஹாராஷ்டிராவில், எதிர்க்கட்சிகளில் குழப்பத்தையும், பிரிவினையையும் ஏற்படுத்தி ஆதாயம் அடைந்து வரும் பா.ஜ., இந்த அரசியல் நிலவரங்கள் வாயிலாக, 2019 லோக்சபா தேர்தலில் பெற்றதை போல, வரும் லோக்சபா தேர்தலிலும், 41 இடங்களில் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!