Load Image
Advertisement

டிராக்டர் கம்பெனிக்கு கவர்மென்ட் வச்ச பாக்கி... ரைட்டருக்கு பயந்து கடுதாசி எழுதிக்கொடுத்த காக்கி!

ஆர்.எஸ்.புரம் உழவர்சந்தை போவதற்காக, வண்டியில் வந்த மித்ரா, அதில் ஏறுவதற்காக வந்த சித்ராவிடம், 'அக்கா! ஹெல்மெட் போட்டு வாங்க...இல்லேன்னா பைன் கட்ட வேண்டியிருக்கும்' என்று எச்சரித்தாள்.

ஹெல்மெட் போட்டபடி வந்த சித்ரா, ''அபராதம்னு சொன்னியே...அதைப் பத்தி ஒரு செம மேட்டர் சொல்றேன்.'' என்று வண்டியில் ஏறி அமர்ந்தாள்.

ஆர்வம் தாளாத மித்ரா, ''சீக்கிரம் மேட்டரை ஆரம்பிங்க!'' என்று வண்டியைக் கிளப்பினாள். சித்ரா ஆரம்பித்தாள்...

''சட்டத்தை மதிக்காம கட்டடம் கட்றவுங்க மேல நடவடிக்கை எடுத்து, நோட்டீஸ் கொடுத்து இடிக்க வேண்டியது, கார்ப்பரேஷனோட பொறுப்பு. ஆனா கார்ப்பரேஷன்லயும், கவுன்சில்லயும் சட்ட வேலைகளைப் பார்க்குற ஆபீசரே, சட்டத்தை மதிக்காம, அனுமதியே இல்லாம மூணு மாடிக் கட்டடம் கட்டிருக்காராம்!'' என்று நிறுத்தினாள்.

தலையைத் திருப்பி, ''என்னக்கா சொல்றீங்க...நம்பவே முடியலை!'' என்று ஆச்சரியமாய், மித்ரா கேட்க, தொடர்ந்து விளக்கினாள் சித்ரா...

''ஆமா மித்து! சவுரிபாளையம் கருணாநிதி நகர்ல, மூணு சென்ட் இடத்துல நாலு புளோர்ல கட்டடம் கட்டிருக்காராம். விதிமுறைப்படி, தரைதளத்தோட மூணு மாடி கட்றதுன்னா, டீ.டி.சி.பி.,ஆபீஸ்லதான் பர்மிஷன் வாங்கணும். ஆனா, இவரு மொத்தம் நாலு தளத்தை, மூவாயிரம் சதுர அடிக்கு மேல கட்டுறதுக்கு, கார்ப்பரேஷன்லயே கட்டட அனுமதி வாங்கலைன்னு தகவல்!''

''இதுக்கு கார்ப்பரேஷன், டீ.டி.சி.பி., யாரும் நோட்டீஸ் கொடுக்கலையா...பில்டிங் கம்ப்ளீஷன் சர்ட்டிபிகேட் இல்லைன்னா, அதுக்கு இ.பி.,கனெக்சன் கூட கிடைக்காதே!''

''ஆனா பில்டிங் வேலை முழுசா முடியுறதுக்கு முன்னாடியே, ஒரு தளத்தையே காமிக்காம, மூணு தளத்துல 100 சதவீதம் விதிகளுக்கு முரணா கட்டடம் கட்டுனதா, கணக்குப் போட்டு, 550 ப்ளஸ் 750 ரூபாய்ன்னு மொத்தம் 1,300 ரூபாய் அபராதத்தோட சொத்துவரி புத்தகம் போட்டுக் கொடுத்துட்டாங்களாம்...சட்டத்தை மதிக்க வேண்டிய ஆபீசரே இப்பிடிப் பண்ணுனா, மக்கள் எப்பிடி மதிப்பாங்க?''

''ஆமாக்கா! முறைப்படி பர்மிஷன் வாங்கிக் கட்டுன கட்டடத்துக்கே, 'பில்டிங் கம்ப்ளீஷன் சர்ட்டிபிகேட்' வாங்க முடியுறதில்லை. இ.பி., கனெக்சன் கிடைக்கிறதில்லை...இவுங்களுக்கெல்லாம் எப்பிடித்தான் கிடைக்குதோ?''

''அதான் அரசியல்...சுங்கம் பஸ் டெப்போவுக்கு வெளியில இருக்குற என்.எச்., இடத்தை யூனியன் ஆபீஸ்கள் ஆக்கிரமிச்சு வச்சிருந்தாங்க. இப்போ அங்க பேக்கரி, ஓட்டல், கறிக்கடை, அக்வேரியம்னு வரிசையா கடை கட்டி விட்டு, கல்லா கட்றாங்க...அதுக்கெல்லாம் இ.பி.,கனெக்சன் கொடுத்திருக்காங்க!''

''பஸ் டெப்போன்னதும், எனக்கு பஸ் ஸ்டாண்ட் ஞாபகம் வந்துச்சு...நம்ம ஊருக்கு சி.எம்., சீக்கிரமே வரப்போறாராமே. செம்மொழிப் பூங்கா, வெஸ்டர்ன் பை பாஸ்க்கு அடிக்கல் நாட்றதோட, நீலாம்பூர் பக்கத்துல ஒரு இடத்துல, ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட், மெட்ரோ ரயில் திட்டத்தையும் முதல்வர் அறிவிப்பாராம். இதைத்தான் புது பொறுப்பு அமைச்சர் முத்துசாமி, இப்போ ஆபீசர்கள்ட்ட டிஸ்கஸ் பண்றாராம்!''

''கட்சிக்காரங்ககிட்டயும், 'உங்க ஏரியாவுக்கு என்ன வேணும்னு எழுத்துப்பூர்வமா எழுதிக் கொடுங்க'ன்னு கேட்டு வாங்குனாராமே....என்ன எழுதிக் கொடுத்திருக்கப் போறாங்க...எங்க ஏரியாவுல ரோடு சரியில்லை; குப்பை அள்ளுறதில்லைன்னு எழுதிக் கொடுத்திருப்பாங்க... இவரோட சேர்த்து நாலாவது மந்திரி...இன்னும் எத்தனை பேரு வந்தாலும் இந்த ரோடு, குப்பை பிரச்னை தீராது போலிருக்கு!''

சித்ரா சொன்னதற்கு பலமாகத் தலையாட்டிய மித்ரா, அதே ஆளும்கட்சி மேட்டரைத் தொடர்ந்தாள்...

''மருதமலைக்கு ஆளும்கட்சிக்காரங்களை அறங்காவலராப் போட்டுட்டாங்க...இனிமே கோவில்ல கரை வேட்டிகள் கலக்கல் அதிகமாயிரும். போன வாரமே அங்க 15 ஜோடிகளுக்குதி.மு.க., சார்புல இலவச கல்யாணம் பண்ணி வச்சாங்க...ரெண்டு மாவட்டச் செயலாளர்களோட கட்சிக்காரங்க ஏகப்பட்ட பேரு வந்திருக்காங்க...தாலி கட்றதை பெத்தவுங்க, சொந்தக்காரங்களே பார்க்க முடியலையாம்!''

''இவுங்களே சுத்தி நின்னு போஸ் கொடுத்திருப்பாங்க...!''

''அதேதான்க்கா...ஆளும்கட்சியில போஸ் கொடுக்குறதோட சரி...வேலை நடக்குறதில்லை... ஹவுசிங் போர்டுல இடம், வீடு வாங்குனவுங்களுக்கு வட்டி மேல வட்டி போட்டு சாவடிக்கிறாங்க. இதைப் பத்தி மினிஸ்டர் முத்துசாமிட்ட, வயசானவுங்க, லேடீஸ் எல்லாம் நேர்ல பார்த்து பெட்டிஷன் கொடுத்தாங்க. அவரும் பாக்குறேன்னு சொன்னாரு. போட்டோ எல்லாம் பேப்பர்ல பெருசா வந்துச்சு...!''

''ஆனா ஒண்ணும் நடந்திருக்காதே...போன கவர்மென்ட்லயும் இதான் நடந்துச்சு...சி.எம்.,ட்டயே போனாலும் ஹவுசிங் போர்டுல கீழ் மட்டத்துல இருக்குற சில பேருக்குக் காசு கொடுக்காம, வேலை நடக்காது. அங்க அவுங்கதான் ராஜா, மந்திரி எல்லாம்...பத்திரம் வாங்காமலே பல பேரு செத்துட்டாங்க. மத்தவுங்க தினம் தினம் அலைஞ்சே கஷ்டப்படுறாங்க!''

''அங்க மட்டுமா...நம்ம மாவட்டத்துல நிலமோசடி எக்குத்தப்பா நடக்குது...ஆனா சிட்டி, டிஸ்ட்ரிக்ட் ரெண்டு லேண்ட் கிராப் பிரிவுலயும் என்ன கம்பிளைன்ட் கொடுத்தாலும் ஒண்ணுமே நடக்குறதில்லையாம்.

கீழ் மட்ட போலீஸ் நினைச்சாதான், எப்.ஐ.ஆர்., போடுறாங்களாம்...அதுலயும் சிட்டியில ரெண்டு மாசமா, ஒரு கேசும் பதிவு பண்ணலைன்னா பாத்துக்கோங்க!''

மித்ரா சொன்னதைக் கேட்ட சித்ரா, கோபத்தோடு கேட்டாள்...

''நியாயமாப் போறவுங்களைத்தான் அலைக்கழிக்கிறாங்க...இதுவே 'பிரஸ்', 'மீடியா'ங்குற பேர்ல, டுபாக்கூர் ரிப்போர்ட்டர்ஸ் எத்தனை பேரு எங்கெங்க என்னென்ன காரியம் சாதிக்கிறாங்க தெரியுமா...?''

''உண்மைதான்க்கா...இதைப் பத்தி, நம்ம பொறுப்பு அமைச்சர்ட்ட மத்த ரிப்போர்ட்டர்ஸ் புகார் பண்ணுனதுக்கு, 'நாங்களே அவுங்களால பாதிக்கப்படுறோம்'னு சொல்லிருக்காரு. ஆனா ஏன்தான் நடவடிக்கை எடுக்காம பயந்துக்கிறாங்கன்னு தெரியலை!''

''இவரு எதுக்கு பயப்படணும்...கார்ப்பரேஷன்ல பல ஆபீசர்களை மெரட்டி பணம் பறிச்சிட்டிருந்த சில டுபாக்கூர் ரிப்போர்ட்டர்ஸ், ரெவின்யூ செக்சன்ல இருக்குற முக்கியமான ஆபீசரை, அதே மாதிரி பணம் கேட்டு மெரட்டிருக்காங்க...

அதுக்கு அவரு, 'முடியாது...முடிஞ்சத பார்த்துக்கோ'ன்னு விரட்டிட்டாராம். அந்த தைரியம் மத்தவுங்களுக்கு இல்லை. குறிப்பா ரிட்டயர்டு ஆகப்போறவுங்க, அமைதியான ஆபீசர்கள் பயந்துர்றாங்க!''

''தைரியம்னா, அந்த வெரைட்டி ஹால் ஸ்டேஷன் லேடி ரைட்டர்தான்...போன வாரம் அந்தம்மாவைப் பத்தி நம்ம பேசுனதைப் பத்தி, பெரிய ஆபீசர்கள் விசாரிச்சிருக்காங்க...அதுக்குள்ள அங்க இருக்குற 10, 15 போலீசையும் மெரட்டி, 'என்கிட்ட மேடம் பணம் கேட்கலை'ன்னு எழுதியே வாங்கீட்டாங்களாம். இது எப்பிடி இருக்கு?''

''கொடுமைதான்...இப்பிடித்தான் நம்ம ஊரு சி.இ.ஓ., ஆபீஸ்ல கங்காணி வேலை பாக்குற ஒருத்தரு, செம்ம வசூல் வேட்டையாடுறார்னு அவருக்கு எதிரா, ஆசிரியர் சங்கத்துக்காரங்க, நிர்வாக அலுவலர் சங்கத்துக்காரங்க எல்லாரும் புகார் பண்ணீட்டாங்க...ஆனா அவரை அங்க இருந்து அசைக்கவே முடியலையாம்...புது சி.இ.ஓ., ஏதாவது பண்ணுவார்னு நம்பிக்கையோட ரெண்டு தரப்பும் காத்திருக்காங்க!''

''என்கிட்ட ஒரு ஸ்கூல் மேட்டர் இருக்குக்கா...ராஜவீதி துணி வணிகர் சங்க கேர்ள்ஸ் ஸ்கூல்ல அருமையான பேஸ்கட் பால் டீம் இருக்கு...ஸ்டேட் லெவல்ல ஏகப்பட்ட மேட்ச்ல ஜெயிச்சிருக்காங்க...இந்த டீம்ல விளையாடுன சில பொண்ணுங்க தமிழ்நாடு டீம், நேஷனல் டிரெயினிங்ல செலக்ட் ஆயிருக்காங்க...ஆனா இப்ப வந்திருக்குற எச்.எம்.,மேடம், பிள்ளைங்களை விளையாடவே விடுறதில்லையாம்!''

''இதென்ன அநியாயமா இருக்கு!''

''ஆமாக்கா...இந்த ஸ்கூல்ல டென்த் முடிச்ச ஒரு ஸ்டூடன்ட், இப்போ இண்டியன் டீம்க்கான பயிற்சியில இருக்கா...அந்தப் பொண்ணு உட்பட, ஸ்போர்ட்ஸ் ஸ்டூடன்ட்ஸ் நிறைய்யப்பேரு, போராடித்தான் பிளஸ் ஒன் சேர்ந்திருக்காங்க...இவுங்களுக்கு பிரைவேட் ஸ்கூல்கள்ல ஸ்போர்ட்ஸ் கோட்டாவுல, இலவசமா சீட் தரத் தயாரா இருக்குறப்போ, இந்தம்மா இப்பிடிப் பண்றாங்க!''

''அதனால...!''

''அந்தப் பொண்ணுங்களோட அம்மா, அப்பாவே வெறுத்துப் போயி, வேற ஸ்கூலுக்குப் போக முடிவு பண்ணிருக்காங்க!''

பேசிக் கொண்டிருந்த மித்ரா, தங்களின் வண்டியைக் கடந்து சென்ற குப்பை வண்டியைப் பார்த்ததும், பேச்சை மாற்றினாள்...

''அக்கா! நம்ம மாவட்டத்துல இருக்குற கிராம பஞ்சாயத்துகள்ல குப்பைகளை எடுக்க டிரெய்லரோட டிராக்டர் கொடுத்திருக்காங்க...ஆனா இந்த வண்டிங்க வந்து ரெண்டு மாசமாகியும், இன்னும் ரிஜிஸ்ட்ரேஷன் பண்ணாம வச்சிருக்காங்க...ஏன்னு விசாரிச்சா, டிராக்டர் கம்பெனிக்கு இன்னும் அமவுன்ட் செட்டில் ஆகலையாம்...அது எப்போ வந்து எப்போ குப்பை அள்ள வண்டி வருமோ...!''

''மித்து! ஒரு வித்தியாசமான மேட்டர்...கவர்னர் தமிழிசை மேடம் போன வாரம், கம்பன் கழக விழாவுக்கு வந்திருந்தாங்க... அவுங்க மேடைக்கு வர்றப்ப, எழுத்தாளர் ஜெயமோகன் பேசிட்டு இருந்தாரு...மேடத்தைப் பார்த்து ஒரு நிமிடம் பேச்சை நிறுத்துனாரு. ஆனா, ஒரு வணக்கம் கூட சொல்லலை. கால் மணி நேரம் பேசிட்டு, கவர்னருக்குப் பக்கத்துல உட்கார்ந்தும் ஒரு வார்த்தை கூட பேசலை!''

''ரெண்டு பேருமே நாஞ்சில் நாட்டுக்காரங்களாச்சே...!''

''ஆமா! மரியாதைக்குக் கூட ஒரு வணக்கமும் சொல்லாம, ஒரு வார்த்தையும் பேசாம இருக்குற அளவுக்கு, ஜெயமோகனுக்கு தமிழிசை மேல என்ன கோபம்னு தெரியலை...கவர்னர் பேசிட்டு கிளம்புறப்பவும், அவர் ஒரு வார்த்தையும் பேசலை...ஆனா, கவர்னர் தமிழிசை பேசுறப்போ, 'மரியாதைக்குரிய எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களே'ன்னு சொன்னாங்க...புரிஞ்சவுங்க ரசிச்சுக் கைதட்டுனாங்க!''

''அக்கா! ஒரு சீரியஸ் மேட்டர்...மாவட்டத்தோட பொறுப்பு மட்டுமில்லை...டாஸ்மாக் வசூல் பொறுப்பும் மாறிடுச்சு. கரூர்க்காரங்க போயி, இப்போ ஈரோட்டுக்காரங்க, கடை கடையா கலெக்சன் சார்ட் போட்டு, களத்துல இறங்கீட்டாங்களாம்...

பார் காரங்க பதறிப்போயி, 'பழைய ஆளுங்க அவசர அவசரமா 10, 15 லட்சத்துல இருந்து 40 லட்சம் வரைக்கும் வாங்கீட்டுப் போயிட்டாங்க. அதையே இன்னும் சம்பாதிக்கலை. அதனால போயிட்டு, நாலஞ்சு மாசம் கழிச்சு வாங்க'ன்னுட்டாங்களாம்!''

மித்ரா சொல்லி முடிக்கும்போதே, உழவர் சந்தை வந்து விட, இருவரும் வண்டியை ஓரம் கட்டி விட்டு, பைகளுடன் சந்தைக்குள் நுழைந்தனர்.வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement