Load Image
Advertisement

பதிவுத்துறை லஞ்சத்தை கேட்டா நெஞ்சு பதறுது... பதற்றமே இல்லாம விஜிலென்ஸ் போலீஸ் உறங்குது!

காலையில் சீக்கிரமே வந்து விட்ட மித்ரா, ரேஸ்கோர்ஸ் நடைபாதையில் ஒரு ரவுண்டு 'ஜாக்கிங்' முடித்து விட்டு, சித்ராவுக்காகக் காத்திருந்தாள். வண்டியில் வந்து இறங்கிய சித்ரா, ''சாரி மித்து! லேட்டாயிருச்சு... இன்னிக்கு வேகமா நடந்துருவோம்!'' என்று வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.

அவளுக்கு ஈடு கொடுத்து நடக்க ஆரம்பித்த மித்ரா, ''அக்கா! இதே மாதிரி லேட்டா ஆரம்பிக்கிற பிராஜெக்ட்களை, சீக்கிரமா முடிச்சா நல்லாருக்கும்!'' என்று விடுகதை போட்டாள்.

அவள் முடிக்கும் முன் குறுக்கிட்ட சித்ரா, ''நீ மெட்ரோ டிரெயின் பிராஜக்ட்டைப் பத்தித்தான சொல்ற!'' என்று சொல்லி விட்டு, பேச்சைத் தொடர்ந்தாள்...

''நம்ம ஊருக்கு மெட்ரோ ரயில் வரவே வராதுன்னு, எல்லாரும் சொல்லிட்டு இருந்தப்போ, நிதி ஒதுக்கி, டி.பி.ஆர்., தயாரிச்சுட்டாங்களே... எப்போ தொடங்கும் எப்போ முடியும்னே சொல்லிட்டாங்களே...நம்ம ஊர்ல அஞ்சு வருஷத்துல மெட்ரோ ரயில் ஓடிரும்னு ஆபீசர்களே நம்புறாங்க!''

''ஏர்போர்ட் எக்ஸ்பேன்ஷன், வெஸ்டர்ன் பை பாஸ் எல்லாமே வேலை தொடங்குறது மாதிரித்தான் இருக்கு...ஆனா குவாரி ஸ்டிரைக்னால ரோடு, சிவில் ஒர்க் எந்த வேலையுமே நடக்காது போலிருக்கே. கல்லு, மணல் விலை ஏறுனா மக்கள் அதிருப்தியில கவர்மென்ட் இறங்கிவரும்னு நினைச்சு, குவாரிக்காரங்க ஸ்டிரைக்கை ஆரம்பிச்சாங்க...கவர்மென்ட் கண்டுக்கிறது மாதிரியே தெரியலை!''

''நம்ம மாவட்டத்துல, குவாரிகள் சங்கத்துக்கு மாவட்டத் தலைவரா இருக்கிறவரு, நம்ம ஊரு எதிர்க்கட்சி 'மாஜி'க்கு வலது கரமா இருக்கிறவரு...அவரு குவாரிக்காரங்க வண்டி ஓட்டக்கூடாதுன்னு போட்ட, 'வாய்ஸ் மெசேஜ்' வைரலா பரவிட்டு இருக்கு...கனிம வளக்கொள்ளைன்னு ஒரு பக்கம், அ.தி.மு.க., சார்புல ஆர்ப்பாட்டம் நடத்துனாங்க. மறுபக்கம்குவாரிகளையே அவுங்கதான் கன்ட்ரோல் பண்றாங்கன்னு தெரியுது. இதைத்தான் ஆளும்கட்சிக்காரங்க, சோஷியல் மீடியாவுல பரப்பிட்டு இருக்காங்க...!''

''ஓ...அதனாலதான் குவாரி லைசென்சை, ஏன் ரத்து பண்ணக்கூடாதுன்னு நோட்டீஸ் அனுப்பிட்டு இருக்காங்களோ... ஒரு வேளை ரத்து பண்ணிட்டா என்ன பண்றதுன்னு, இப்போ குவாரிக்காரங்க கதிகலங்கிப் போயிருக்கிறதா கேள்விப்பட்டேன்!''

''அக்கா! மாவட்டத்திட்டக்குழுவுல, ஆளும்கட்சி கவுன்சிலர்கள் அஞ்சு பேரு ஜெயிச்சாங்கள்ல...கவுன்சில் மீட்டிங் நடந்த அன்னிக்கு, அவுங்க சார்புல எல்லா கவுன்சிலர்களுக்கும் விருந்து வச்சிருக்காங்க.

இது தெரிஞ்சு கட்சிக்காரங்க, 'எங்களுக்கு கவனிப்பு இல்லையா'ன்னு கேட்ருக்காங்க. அதுக்கு மார்க்கெட் புகழ் கவுன்சிலர், தனக்குச் சொந்தமான தோட்டத்துல 'மெகா பார்ட்டி', விருந்து வச்சு அசத்திட்டாராம்!''

''கவுன்சில்னதும் ஞாபகம் வந்துச்சு...கனவு மேயர் கவுன்சிலர், மூணு கூட்டத்துக்கு வரலைன்னு அவரை தகுதி நீக்கம் பண்ணுனாங்கள்ல...உடல்நிலை சரியில்லைன்னு, அவுங்க கொடுத்த விளக்கத்தை ஏத்துக்கிட்டு, மறுபடியும் அவருக்குப் பதவி கொடுத்துட்டாங்க...ஆனா மீடியாவுல பேட்டியாக் கொடுத்துத் தள்ளுன அந்தப் பொண்ணு, கவுன்சில் மீட்டிங்ல வார்டு பிரச்னைகளைப் பத்தி வாயே திறக்கலை!''

''ஆனா கவுன்சில்ல காங்., கவுன்சிலர் காயத்ரி, 'அடுத்த முறையும் நாமதான் ஆட்சி அமைக்கப்போறோம்'னு பேசுனதுக்கு, தி.மு.க., கவுன்சிலர் கார்த்திக் செல்வராஜ், 'அது நீங்க இல்லை; நாங்கதான்'னு மூக்கை உடைச்சு விட்டாரு...அதே மாதிரி தெருநாய்ப் பிரச்னையைப் பேச வந்த கம்யூ., பெண் கவுன்சிலரை, மண்டலத் தலைவரு தடுத்துட்டாரு...கூட்டணிக் கட்சி லேடி கவுன்சிலர்க, கடுப்புல இருக்காங்க!''

''மித்து! சிட்டிக்குள்ள பிளாஸ்டிக் கேரிபேக் ரொம்ப அதிகமாயிருச்சு...ரெய்டுக்குப் போற கார்ப்பரேஷன் தனிப்படை சுகாதாரப் பிரிவுக்காரங்க, பறிமுதல் செய்யுறது மூணு கிலோன்னா, ரசீதுல ஒன்றரை கிலோன்னு எழுதுறாங்களாம்...மீதிய அவங்க கடைகளுக்கே விக்கிறாங்கன்னு ஒரு சந்தேகம் கிளம்பிருக்கு!''

''கார்ப்பரேஷன்ல மட்டுமா...டவுன் பஞ்சாயத்துலயும் ஆபீசர்கள் ஆதிக்கம்தான்க்கா...தொண்டாமுத்துார் பேரூராட்சியில ஒவ்வொரு மாசமும் கடைசி நாள்கள்லதான், கவுன்சில் மீட்டிங்கை நடத்துறாங்களாம்...மாசத்துவக்கத்துல நடத்துனா கணக்குக் கேக்குறாங்கன்னு, இந்த ஏற்பாடாம்,''

''அன்னுார்ல விவசாய நிலங்களைப் பிரிச்சு பத்திரப்பதிவு பண்றதுக்கு, அங்க இருக்குற சப் ரிஜிஸ்ட்ரார் ஆபீஸ்ல, திடீர்னு லஞ்ச ரேட்டை, மூணு மடங்கு அதிகமாக்கிட்டாங்களாம். இடைத்தரகர்கள்தான் இப்பிடிப் பண்றாங்கன்னு நினைச்சு, ஆபீசர்ட்ட சொன்னதுக்கு, 'சென்னையில ரேட்டைக்கூட்டிட்டாங்க'ன்னு கையை விரிக்கிறாராம்!''

''நம்ம மாவட்டத்துல ரிஜிஸ்ட்ரேஷன் டிபார்ட்மென்ட்டை மட்டும் விஜிலென்ஸ்ல கண்டுக்கிறதே இல்லை... அதனாலதான் தைரியமா லட்சங்கள்ல லஞ்சம் வாங்குறாங்க...

திருப்பூர்ல ஒரு பாட்டி, அவுங்களுக்குத் தெரிஞ்ச மூணு பேரோட சேர்ந்து, பல வருஷத்துக்கு முன்னால ஒரு பிராப்பர்ட்டி வாங்கிருக்காங்க. அதை அந்தப் பாட்டிக்குத் தெரியாம விக்கிறதுக்கு அந்த மூணு பேரும், திருப்பூர் டி.ஆர்.,ட்ட மூவ் பண்ணிருக்காங்க!''

சித்ரா சொல்லும்போதே குறுக்கிட்டு, ''அதெப்பிடி முடியும்!'' என்று கேட்டாள் மித்ரா. அவளை பொறுக்கச் சொல்லி சைகை காண்பித்து விட்டு, மேட்டரைத் தொடர்ந்தாள் சித்ரா...

''அவர் முடியலைன்னதும், கோயம்புத்துார்ல இருக்குற பெரிய ஆபீசரைப் பார்த்து, 'நீங்கதான் இதை முடிச்சுத் தரணும்'னு கேட்ருக்காங்க...அவர் அந்தப் பாட்டியைக் கூப்பிட்டு, 40 லட்ச ரூபா கொடுத்தா உங்களுக்குச் சாதகமா பண்றேன்னு சொல்லிருக்காரு... அவுங்க முடியலைன்னதும், மத்த மூணு பேர்ட்ட ஆளுக்கு, 20 லட்சம் வாங்கிட்டு, அவுங்களுக்குச் சாதகமா பேரை மாத்திக் கொடுத்துட்டாராம்!''

''அடேங்கப்பா...ஒரே டீல்ல 60 லட்சமா...தலை சுத்துதுக்கா...நீங்க சொல்ற அந்த ஆபீசர் மேல ஏகப்பட்ட கம்பிளைன்ட் வருது...இவுங்க மேல எல்லாம் சொத்துக் குவிப்பு விசாரணை வராதா?''

சற்று இடைவெளி விட்டு, மித்ராவே தொடர்ந்தாள்...

''வரவர போலீஸ்க்கு, புகார் பண்ணவேபயமா இருக்கு...மேட்டுப்பாளையத்துல காலங்காத்தால டாஸ்மாக் கடையைத் திறந்து பகிரங்கமா சரக்கு விக்கிறாங்கன்னு 100க்கு போன் பண்ணி, கம்பிளைன்ட் பண்ணுன வீடியோ பேமஸ் எக்ஸ் ஆபீசரை, அந்தக் கடைக்காரங்க அனுப்புன ஆளுங்க அடிச்சிருக்காங்க. கடைசியில புகார் பண்ணுனவரையே, வேற ஒரு கேசைப் போட்டு ஒரு மாசம் உள்ளே தள்ளீட்டாங்க!''

''அநியாயம்...அக்கிரமம்!''

''இதுல கொடுமை என்னன்னா, 100க்கு போன் பண்ணுன தகவல், அந்தக் கடைக்காரங்களுக்கு எப்பிடிப் போச்சுங்கிறதுதான்... மேட்டுப்பாளையத்துல எஸ்.பி.,ஆபீசுக்கு உளவு வேலை பாக்குற ஒரு சி.ஐ.டி., போலீஸ் இருக்காராம். அவர் வேலையாம் இது...அங்க நடக்குற சரக்கு, கஞ்சா, லாட்டரி விக்கிறது அத்தனையுலயும், அவருக்கு மாமூல் கொட்டுதாம்...ஆனா அவரை மாத்தவே முடியலையாம். ரூரல் எஸ்.பி., நல்ல ஆபீசர்னு பேரு வாங்கிருக்காரு...அவார்டும் வாங்கிருக்காரு...,''

''பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலம் கட்டுற வேலை ஆமை வேகத்துல நடக்குது. அதனால அந்த ரூட்ல மக்கள் படுற பாடு கொஞ்ச நஞ்சமில்லை.

இந்த லட்சணத்துல நரசிம்மநாயக்கன்பாளையத்துல இருந்து, பெரியநாயக்கன்பாளையம் வரைக்கும் ரோட்டுல ரெண்டு பக்கமும், ஆக்கிரமிப்புக் கடைகளை வைக்க விட்டு போலீஸ் மாமூல் வசூலிக்கிறாங்க!''

''ஒரு சிட்டி போலீஸ் மேட்டர்க்கா...வெரைட்டி ஹால் போலீஸ் ஸ்டேஷன்ல, போலீஸ்காரங்களுக்கு வார லீவு கொடுக்க, 200 ரூபா, சி.எல்.,க்கு 500 ரூபாயை சம்பந்தப்பட்ட லேடி போலீசுக்கு கொடுக்கணுமாம். இதை தவிர, தினமும் ஒரு ஓட்டல்ல இருந்து பிரியாணியும் வாங்கித்தரணுமாம்!''

குறுக்கிட்ட சித்ரா, ''போயும் போயும் பிரியாணிக்கா இப்படி அலையுறாங்க?'' என்று சிரித்தாள். மித்ரா தொடர்ந்தாள்...

''இது பரவாயில்லைக்கா...இவர் கட்டுற வீட்டுக்கு ஒரு போலீஸ்காரரை ரூபிங் ஷீட் வாங்கித் தரச் சொல்லி, இம்சை பண்ணி வாங்கீட்டாராம்... இவருக்கு தினமும் பிரியாணி வாங்கித்தர்றது மட்டுமில்லாம, மாசத்துக்கு ரெண்டு வாட்டி இவர் குடும்பத்துக்கே, அசைவ ஓட்டல்ல விருந்து வைக்கணுமாம். போலீஸ்காரங்க புலம்பித் தள்ளுறாங்க!''

''அதை விட இந்த புலம்பல் பரிதாபம்...நம்ம பி.ஆர்.ஓ., ஆபீஸ்ல டிரைவரா இருந்து சஸ்பெண்ட் ஆன டிரைவர் ஒருத்தரு, ரேஸ்கோர்ஸ் குவாட்டர்ஸ்ல குடியிருந்திருக்காரு. அங்கயிருந்து காலி பண்ணிட்டுப் போன பிறகும், வேற ஊரு கலெக்டராபீஸ்ல வேலை பாக்குறதாச் சொல்லி, அந்த ஏரியாவுல இருக்குற அயர்ன் பண்றவங்க, சலுான் வச்சிருக்கிறவுங்க கிட்ட 20 ஆயிரம், 50 ஆயிரம்னு வாங்கிட்டு, எஸ்கேப் ஆயிட்டாரு...இப்போ ஆளையும் பிடிக்க முடியாம, பணமும் கிடைக்காம அவுங்க பாவம் புலம்புறாங்க!''

''பணத்துக்காக யார் யாரோ என்னென்னமோ செய்யுறாங்க...கோட்டைமேட்டுல இருக்குற கோவில்ல பக்தர்கள், கூட்டமா வர்ற நாட்கள்ல 10 ரூபாய் கட்டண தரிசனத்துக்கு டிக்கெட் தர்றதில்லையாம். கேட்டா 'மெஷின்ல பேப்பர் இல்லை'ன்னு சொல்லிர்றாங்களாம். இடையிடையில இப்பிடி அடிக்கிறதே ஏகப்பட்ட துட்டாம்!''

சொல்லி முடித்த மித்ரா, 'அக்கா! எனக்கு தாகமா இருக்கு...வாங்க ஏதாவது குடிப்போம்!'' என்று 'வாக்கிங்'கிற்கும் பேச்சுக்கும் முற்றுப்புள்ளி வைத்தாள்.வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement