அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. 'இந்தத் தேர்தல் ஜனநாயகம் மற்றும் சர்வாதிகாரத்திற்கு இடையேயான தேர்தலாக இருக்கும்' என, எதிர்க்கட்சிகள் சித்தரித்து வருகின்றன. அதனால், பா.ஜ.,வை ஒன்றிணைந்து எதிர்கொள்வதற்கான பொதுவான செயல் திட்டத்தை உருவாக்க, பீஹார் முதல்வர் நிதீஷ் குமார், சமீபத்தில் பாட்னாவில் கூட்டிய கூட்டத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட, ௧௪ கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று உள்ளனர்.
நான்கு மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் முடிவில் எந்தவிதமான கூட்டறிக்கையும் வெளியிடப்படவில்லை.
இக்கூட்டத்தில் பேசிய, பீஹார் மாநில முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாரத் யாதவ், 'எதிர்க்கட்சிகள் கூட்டணி விஷயத்தில், காங்கிரஸ் திறந்த மனதுடன் செயல்பட வேண்டும். மாநில கட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.
இதன் வாயிலாக, 'பெரியண்ணன் மனப்பான்மையில் செயல்படாமல், காங்கிரஸ் விட்டுக் கொடுத்து செயல்பட வேண்டும்' என்றும், பல கட்சிகளின் தலைவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
எதிர்க்கட்சிகளின் பொதுவான பிரதமர் வேட்பாளர் யார் என்பது, இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்படவில்லை என்றாலும், பா.ஜ.,வை தோற்கடிக்க வேண்டும் என்பதில், அனைத்து கட்சிகளும் உறுதியாக இருக்க வேண்டும் என்பது மட்டும் தீவிரமாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், 'ஒவ்வொரு மாநிலத்திலும், எந்தக் கட்சி செல்வாக்குடன் உள்ளதோ, அந்தக் கட்சி தலைமையில் கூட்டணி அமைக்கலாம். அப்படி இல்லையெனில், தொகுதிப் பங்கீடு மட்டும் செய்து கொள்ளலாம்' என்பது உட்பட, ஏழு யோசனைகளை முன்வைத்துள்ளார்.
ஆயினும், எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்வதில் சில சிக்கல்கள் உள்ளன. அதாவது, ௨௦௧௯ல் நடைபெற்ற லோக்சபா தேர்தலில், பா.ஜ., மட்டும் தனிப்பட்ட முறையில், ௩௦௩ இடங்களில் வெற்றி பெற்றது. அந்தக் கட்சிக்கு, ௩௬.௩௭ சதவீத ஓட்டுகள் விழுந்தன.
அதேநேரத்தில், இந்த, ௩௦௩ல், ௨௨௪ தொகுதிகளில், ௫௦ சதவீதத்திற்கும் அதிகமான ஓட்டுக்களைப் பெற்றிருந்தது.
அதனால், பா.ஜ.,வுக்கு உள்ள மக்களின் அமோகமான செல்வாக்கை, எதிர்க்கட்சிகள் தங்கள் பக்கம் திருப்ப வேண்டும். குறிப்பாக, வடமாநிலங்கள் பலவற்றில், பா.ஜ., செல்வாக்குடன் உள்ளது. அந்த செல்வாக்கை திருப்பினால் மட்டுமே, எதிர்க்கட்சிகள் அணி வெற்றி பெற முடியும்.
மேலும், ௨௦௧௯ல், பா.ஜ., வெற்றி பெற்ற, ௩௦௩ இடங்களில், ௧௨௪ தொகுதிகள், எதிர்க்கட்சிகள் தங்களுக்குள் அடிக்கடி மோதிக் கொள்ளும் தொகுதிகளாகும். குறிப்பாக, மேற்கு வங்க மாநிலத்தில், முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ், அங்கு பா.ஜ.,வை மட்டுமின்றி, காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளை எதிர்த்தும், பல தொகுதிகளில் போட்டியிட்டு வருகிறது.
அப்படிப்பட்ட நிலையில், இந்த மாநிலத்தில், திரிணமுல் காங்., - காங்., மற்றும் இடதுசாரி கட்சிகள் ஓரணியில் திரள்வது என்பது எளிதான விஷயம் அல்ல. இப்படி ஒவ்வொரு மாநிலத்திலும், பா.ஜ.,வுக்கு எதிரான கட்சிகள் இடையே பல முரண்பாடுகள் உள்ளன. அவற்றை எல்லாம் களைந்து, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதும், தொகுதி பங்கீடு செய்து தேர்தலை சந்திப்பதும் சாதாரண விஷயமல்ல.
மேலும், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களில், இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அந்த தேர்தல் முடிவுகளைப் பொறுத்தும், எதிர்க்கட்சி களை ஒருங்கிணைக்கும் முதல்வர் நிதீஷ் குமாரின் முயற்சி கைகூடுமா, கலைந்து போகுமா என்பது தெரியவரும்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!