Load Image
Advertisement

ஜாதி சான்றிதழுக்கு அதிகாரிகள் லஞ்சம் வசூல் ஜோரு... மருந்து ஏத்த மாணவர்கள் பஸ்சை கொடுத்தது யாரு?

சித்ரா வீட்டின் முன், 'நானோ' காரில் வந்து இறங்கினாள் மித்ரா. அவளைப் பார்த்த சித்ரா, ''நானே வர்றேன்னு சொன்ன...நானோவுல வர்றேன்னு சொல்லலையே...இது யாரோட கார் மித்து?'' என்று விசாரித்தாள்.

''அக்கா! இது என்னோட பிரண்ட்டோட கார். நம்ம ஊரு டிராபிக்குக்கு இந்த வண்டிதான் லாயக்கு. சும்மா ஓட்டிப் பார்ப்போமேன்னு, வாங்கிட்டு வந்தேன்,'' என்ற மித்ரா, கதவைத் திறந்து சித்ராவை காரில் ஏற்றிக் கொண்டாள்.

காரை ஓட்டிக் கொண்டே பேச்சைத் தொடர்ந்தாள்...

''நம்ம காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் காம்பளக்ஸ்ல, 23 கடைகள் இருக்குல்ல...அதுக்கு எதிர்ல இருக்குற பார்க்கிங்ல, தள்ளுவண்டிக் கடைகள் போட சிலர் முயற்சி பண்றாங்க.

இதுக்கு ஆளும்கட்சி தரப்புல ஏதோ கலெக்சனைப் போட்ருக்காங்க. ஆனா அங்க கடை போட்டா எங்க வியாபாரம் பாதிக்கும்னு, கடைக்காரங்க பெட்டிஷன் போட்டுட்டு இருக்காங்க...!''

''இதை கேளு...நம்ம ஜி.எச்.,ல, கண் ஆபரேஷன் பண்ண வர்ற ஏழைங்களுக்கு, கண்ணுக்கு ஊத்துற சொட்டு மருந்து, கருப்புக் கண்ணாடி எதுவுமே கொடுக்காம, வெளியில வாங்கிக்கச் சொல்றாங்களாம். ஆனா இதெல்லாம் கொடுக்குறதா கணக்கு மட்டும் காமிக்கிறாங்க போலிருக்கு...அந்த டிபார்ட்மென்ட்ல பேஷன்ட்கள் பாடு ரொம்ப மோசமா இருக்குன்னு ஏகப்பட்ட கம்பிளைன்ட் வருது!''

''ஜி.எச்.,பத்தி இன்னொரு புகார்...அங்க மருந்து சப்ளை பண்றதுக்கு ஒரு கம்பெனியோட ஒப்பந்தம் போட்ருக்காங்க. அக்ரிமென்ட்படி, அந்த கம்பெனி வண்டியிலதான், ஜி.எச்.,க்கு மருந்து கொண்டு வரணும். ஆனா மெடிக்கல் காலேஜ் ஸ்டூடண்ட்சை கூப்பிட்டுப் போற வண்டியிலதான் இதை எடுத்துட்டு வர்றாங்களாம்...இதுல கம்பெனிக்கு டிரான்ஸ்போர்ட் செலவு மிச்சம். நிர்வாகத்துக்கு கூடுதல் செலவு!''

''அதையும் ஏதாவது ஒரு கணக்குல எழுதிருவாங்க..நீ வண்டியைப் பத்திப் பேசவும் ஞாபகம் வந்துச்சு. நம்ம பஸ் டிரைவர் ஷர்மிளாதான், போன வாரம் 'டாக் ஆப் தி தமிழ்நாடா' இருந்தாங்கல்ல...அதுக்கு ஒரு வகையில பலனும் கிடைச்சிருச்சு!''

''கமல் சார் அவுங்களுக்கு புதுக்கார் வாங்கிக் கொடுத்ததைச் சொல்றீங்களா...பரவாயில்லை. மத்தவுங்க வெறும் கையில முழம் போட்டாங்க...அவர் காரே வாங்கிக் கொடுத்து, 'மகள் ஷர்மிளாவுக்கு வாழ்த்துகள்'னு நெகிழ வச்சிட்டாரு...!''

''ஆமா மித்து! பஸ்ல போற பாலிடிக்சை மினிஸ்டர் சிவசங்கரும், செந்தில் பாலாஜியும்தான் நம்ம ஊருல ஆரம்பிச்சு வச்சாங்க... அதுக்கு அப்புறம் ஷர்மிளா பஸ்ல வானதி சீனிவாசன் போனாங்க... அவுங்களைப் பார்த்து கனிமொழி போனாங்க...ஆளுக்கு ஆளு போயி, அவுங்க வேலை போயி... ஒரு வழியா இப்போ டிராவல்ஸ் ஓனராயிட்டாங்க!''

சித்ரா பேசிக் கொண்டிருக்கும்போதே, குறுக்கிட்டு அடுத்த மேட்டரை ஆரம்பித்தாள் மித்ரா...

''அக்கா! ஓன்ர்னதும் ஞாபகம் வந்துச்சு...பேரூர் தாலுகாவுல அனுமதியில்லாம இயங்குன, 19 நாட்டு செங்கல் சூளைகளுக்கு, ரெவின்யூ டிபார்ட்மென்ட்டும், மாசு கட்டுப்பாட்டு வாரியமும் சேர்ந்து, நாலு நாளைக்கு முன்னாடி 'சீல்' வச்சாங்கள்ல...அப்போ, நல்லூர் வயல், மற்றும் வடிவேலாம்பாளையத்துல சில சூளைகளை விட்டுட்டாங்களாம்...ஏன்னா அதோட ஓனருங்க எல்லாம் ஆளும்கட்சிக்காரங்களாம்!''

''ஆளும்கட்சிக்காரங்கன்னா என்ன செஞ்சாலும் விட்றணும் போலிருக்கு...அறநிலையத்துறையில வேலை வாங்கித்தர்றதாச் சொல்லி, 'போர்ஜரி ஆர்டர்' கொடுத்து, பல கோடி மோசடி செஞ்சது தொடர்பா, கோவை மாவட்ட கிரைம் பிராஞ்ச் போலீஸ், நாலு மாசத்துக்கு முன்னால, ஏழு பேரு கொண்ட கும்பலை, அரெஸ்ட் பண்ணாங்களே...ஞாபகமிருக்கா?''

''ஓ...நல்லா ஞாபகமிருக்கே...சி.எம்., ஆபீஸ் அதிகாரிகள்னு சொல்லி மோசடி பண்ணுனாங்களே!''

''அதே கும்பல்தான்...அந்த மோசடிக்கு முக்கியமான காரணம், சரவணம்பட்டியில ஒரு இன்ஜினியரிங் காலேஜ்ல வேலை பார்த்த ஒருத்தர்தானாம். அவர் தி.மு.க.,காரராம்...அவர் மனைவி, ரூரல்ல ஒரு ஏரியாவுல கவுன்சிலரா இருக்காங்க...ஆளும்கட்சிங்கிறதால அவர்ட்ட காசை வாங்கிட்டு, 'எஸ்கேப்' பண்ணி விட்ருக்காங்க!''

''நம்ம போலீசை பாராட்டியே தீரணும்...ஆளும்கட்சின்னாலும் சும்மா விடலையே...!''

சித்ராவின் கமென்ட்டுக்கு சிரித்த மித்ரா, ''பண்ருட்டியில கள்ளச்சாராயத்துல 23 பேர் இறந்த பிறகு, நம்ம மாவட்டத்துல கள் இறக்குற விவசாயிகள்ட்ட, போலீஸ் ரொம்பவே கெடுபிடி பண்றாங்களாம்!''

''அதான் மரத்தோட எண்ணிக்கையைப் பொறுத்து, மாசாமாசம் மூவாயிரத்துல இருந்து அஞ்சாயிரம் வரைக்கும் ஸ்டேஷன்களுக்கு, விவசாயிகள் மாமூல் கொடுக்குறாங்களே...!''

''ஆமாக்கா! ஆனா இப்போ பண்ருட்டி சம்பவத்துக்கு அப்புறம், 'ரிஸ்க் அதிகமிருக்கு...அதனால மாமூலைக் கூட்டிக் கொடுங்க'ன்னு துடியலுார், பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் ரொம்ப 'ஸ்ட்ரிக்ட்'டா சொல்லீட்டாங்களாம்...அதனால விவசாயிகள், கள்ளு விலையைக் கூட்டப் போறாங்களாம்!''

''இதுவும் சரக்கு மேட்டர்தான்...மேட்டுப்பாளையம் சிட்டியில ஆறு டாஸ்மாக் கடைங்க இருக்காம். ஆனா சுத்து வட்டார கிராமங்கள்ல கடைகள் கிடையாது. அதனால, நெல்லித்துறை, வன பத்ரகாளியம்மன் கோவில் பக்கத்துல, அம்மன் நகர்னு நிறைய இடங்கள்ல 'இல்லீகல் செல்லிங் பாயின்ட்' வச்சு, அதிக விலைக்கு விக்கிறாங்களாம்!''

''அதுலயும் போலீஸ்க்கு வலுவா மாமூல் போகுமே...!''

''ஆமா...அதுலயும் வனபத்ரகாளியம்மன் கோவில்ல, கிடா வெட்டுக்கு வர்றவுங்க நிறைய்யப்பேரு, எவ்வளவு கொடுத்தும் சரக்கு வாங்குறதால, அங்க இருக்குற மூணு வியாபாரிங்க தாறுமாறா அதிக ரேட் வச்சு சரக்கு விக்கிறாங்களாம்...போலீசுக்கும் செம்ம மாமூல் போகுதாம். நெல்லித்துறையில பல பேரு காலையிலயே,சரக்கு அடிச்சிட்டு வேலைக்குப் போகாம இருக்காங்களாம்!''

''எங்க பார்த்தாலும் போதைதான்...எங்க போயி முடியப்போகுதோ,''

மித்ரா சொல்லிக் கொண்டிருக்கும்போது, 'பிரஸ்', 'மீடியா' என்று ஏகப்பட்ட ஸ்டிக்கர் ஒட்டிய கார் கடந்ததைப் பார்த்த சித்ரா, அடுத்த மேட்டரை ஆரம்பித்தாள்...

''மித்து! நம்ம ஊர்ல டுபாக்கூர் பிரஸ் கூட்டம் பெருகிக்கிட்டே இருக்கு...போன வாரம் கலெக்டராபீஸ்ல ரெவின்யூ டிபார்ட்மென்ட் மீட்டிங் நடந்திருக்கு. அதுல தெற்கு, வடக்கு, மதுக்கரை தாசில்தார்கள் பேசுறப்போ, 'பிரஸ்ங்கிற பேர்ல பட்டா மாறுதல், வாரிசு சான்றிதழ்னு ஏதேதோ வேலைய முடிச்சுத் தரச் சொல்லி, நிறைய்யப்பேரு வந்து 'டார்ச்சர்' பண்றாங்க'ன்னு சொல்லிருக்காங்க!''

''அதுக்கு பெரிய ஆபீசர்கள் என்ன சொன்னாங்களாம்?''

''அப்பிடி யாராவது வந்து டார்ச்சர் பண்ணுனா, அவுங்க எந்தப் பத்திரிகையில வேலை பாக்குறாங்க, போன் நம்பர் கேட்டு வாங்கிக் கொடுங்க...மத்ததை நாங்க பாத்துக்கிறோம்னு சொல்லிருக்காங்க...சில ஆபீஸ்கள்ல புரோக்கர் மாதிரியே, 'ஆக்ட்' பண்ற பத்திரிகைக்காரங்களைப் பத்தி, ரெவின்யூ டிபார்ட்மென்ட்காரங்க தகவல் சேகரிக்கிறாங்களாம்!''

''ஆனா இந்த ரெவின்யூ டிபார்ட்மென்ட்ல நடக்குற வசூலை, இந்த பெரிய ஆபீசர்கள் ஏன் தட்டிக் கேட்குறதில்லைன்னு தெரியலை... காங்கேயம்பாளையம் ஏரியாவுல, கலப்புத் திருமணம் பண்ணுன ஒரு தம்பதியில ஒருத்தரு, பழங்குடியினத்தைச் சேர்ந்தவராம். அதனால, குழந்தைக்கு எஸ்.டி.,சாதிச்சான்று கேட்ருக்காங்க...அதுக்கு அங்க இருக்குற லேடி வி.ஏ.ஓ., அஞ்சாயிரம் கேட்ருக்காங்க!''

''அடக்கொடுமையே...அஞ்சாயிரமா...!''

''கேட்டது அஞ்சாயிரம்...புரோக்கர் மூலமா மூவாயிரம் கொடுத்திருக்காங்க...ஆனா பல நாளாகியும் சர்ட்டிபிகேட் கிடைக்கலை. போய்க்கேட்டா, 'குழந்தை வளர்ந்தா ஏன் எஸ்.டி.,சர்ட்டிபிகேட் வாங்குனீங்க'ன்னு கேப்பாங்கன்னு, மூளைச்சலவை பண்றாங்களாம். நீலகிரி வரைக்கும் போய் வெரிபிகேஷன் முடிஞ்ச பிறகும், இன்னும் அமவுன்ட்டை எதிர்பார்த்து இழுத்தடிக்கிறாங்களாம்!''

''வரவர விஜிலென்ஸ் பத்தி பயமே இல்லாமப் போச்சு...கருமத்தம்பட்டி முனிசிபாலிட்டி ஆபீஸ்ல, வீடுகளுக்கு மின் இணைப்பு வாங்குற பார்ம் 7ல, கமிஷனரோட கையெழுத்தையே போலியாப் போட்டு பல பேருக்குக் கொடுத்து இருக்காங்க...ஆபீஸ்ல இருக்குற சில பேரு பல லட்ச ரூபா சம்பாதிச்சிருக்காங்க. இப்போ விஷயம் வெளியானதும், டெபுடியா இருக்குற கதர்ச்சட்டை, அவுங்களைக் காப்பாத்த முயற்சி பண்றாராம்!''

இதைச் சொல்லி முடித்த மித்ரா, சாந்தி கியர்ஸ் பெட்ரோல் பங்க்கிற்குள் திருப்பி, காரையும் பேச்சையும் நிறுத்தினாள்.வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement