Load Image
Advertisement

நடுரோட்டுல பாய்ஞ்சு போலீஸ் 'படம்' :லஞ்சம் கேட்டு அதிகாரி மேடம் அடம்

அ ன்று காலை 6:00 மணிக்கெல்லாம் சித்ராவும், மித்ராவும், ஸ்கூட்டியில் சிட்டிக்குள் உலா புறப்பட்டனர்.

சித்ராதான் முதலில் ஆரம்பித்தாள்.

''என்ன மித்ரா, தி.மு.க.,காரங்க கண்டனக்கூட்டம் எல்லாம் பார்த்தியா, கூட்டம் எப்படி,'' என்றாள்.

''பார்த்தேன்க்கா, கூட்டம் பிரமாதம்தான். பழைய சென்ட்ரல் மினிஸ்டர் ராசா, ஆள் திரட்டுறது, கூட்ட ஏற்பாடு எல்லாம் முன்னாடி நின்னு, பொறுப்பா செஞ்சிருக்காரு. வேணுங்கிற அளவுக்கு தனியார் பஸ் எல்லாத்தையும், யூஸ் பண்ணிக்கச் சொல்லிட்டாங்க.

''கட்சி பொறுப்பு இருக்கறவங்க கட்டாயம் வந்தாகணும்னு, சொல்லி வரவெச்சுருக்காங்க. பொறுப்புல இல்லாதவங்களுக்கு மட்டும் ஆண்களுக்கு 500, பெண்களுக்கு 300 கொடுத்ததா பேசிக்கிறாங்க. எப்படியோ கூட்டம் வந்ததுல, ஆளும் கட்சிக்காரங்களுக்கு அமோக திருப்தி,'' என்றாள் மித்ரா.

பேச்சை தொடர்ந்த மித்ரா, ''வெளியூர்ல இருந்து வந்தவங்க வண்டி எல்லாம், வ.உ.சி., மைதானத்துல நிறுத்தி வச்சிருந்தாங்க. அங்கேயே சாப்பிட்டவங்க நிறையப்பேரு, எச்சில் இலை, பொட்டலம், தண்ணி பாட்டில், மது பாட்டில் வீசிட்டு போனதை தான், ஜனங்க பார்த்து முகம் சுளிச்சாங்களே,''

''ஆமா மித்து... பல ஊர்ல இருந்து வந்த கட்சிக்காரங்களும், ஒரே எடத்துல சாப்பிடுறப்போ ஒரு முக்கியமான விஷயம் வெளியாகிடுச்சு. அது என்னன்னா, சில மாவட்ட செயலாளருங்க, கூட்டிட்டு வந்தவங்களுக்கு பிரியாணி பொட்டலம் தந்தாங்க.

இந்த தகவல் பரவுனதும், தக்காளி சாதம் கொடுத்த மாவட்ட செயலாளருங்க எல்லாம் வசமா மாட்டிக்கிட்டாங்க. நாங்க மட்டும் என்ன தொக்கான்னு கேட்டு, சண்டைக்குப் போயிட்டாங்களாம்,'' என்றாள் சித்ரா.

''கண்டனக்கூட்டம் பத்தி எனக்கு ஒரு தகவல் வந்துச்சுக்கா... ஆளுங்கட்சி கவுன்சிலர்களுக்கு கூட முன் வரிசையில உட்கார சீட் கிடைக்கலையாம். அவங்களும் ரொம்ப நேரம் அங்கேயும் இங்கேயும் அலைஞ்சு பாத்துட்டு, கடைசியில கெடைச்ச இடத்துல உட்காந்துட்டாங்க. எல்லாம் ஒரே புலம்பல்,'' என்ற மித்ரா, ''பல மாவட்டம், பல கட்சின்னா அப்படி இப்படி தான் இருக்கும். ஆனா ஆளும் கட்சிக்காரங்களால, அதெல்லாம் ஏத்துக்க முடியாதில்லையா,'' என்றாள்.

வண்டி கலெக்டர் அலுவலகத்தை கடந்தபோது மித்ரா, ''மாவட்ட திட்டக்குழு தேர்தல் வெள்ளிக்கிழமை நடக்கப்போகுதுக்கா. நகர்ப்புற உள்ளாட்சி எல்லாத்துலயும், பொறுப்பு அமைச்சர் புண்ணியத்துல தி.மு.க., மெஜாரிட்டியா இருக்குது. அங்க எந்த பிரச்னையும் வர வாய்ப்பில்லை,''

''ஆனா இந்த ஊரக உள்ளாட்சியில, அ.தி.மு.க., ஆட்சியில ஜெயிச்சவங்க தான் இருக்காங்க. அதுல அ.தி.மு.க.,வுக்கு மெஜாரிட்டி வேற இருக்கு. அவங்களும் எலக்சன்ல மல்லுக்கு நிக்குறாங்க. அதனால தேர்தல் நாளன்னிக்கு, பிரச்னை வரும்னு அதிகாரிங்களே எதிர்பாக்குறாங்க,'' என்றாள்.

அதற்கு சித்ரா, ''ஆமா, நான்கூட கேள்விப்பட்டேன். தி.மு.க., தரப்புல, வழக்குல தொடர்புடைய சர்ச்சைக்குரிய ஆனந்தனுக்கு, சீட்டு குடுத்திருக்காங்களாம். ஸ்ட்ராங்கான ஆள் இருந்தாத்தான், எதிர் தரப்பு கவுன்சிலர்களை தட்டித் துாக்குற வேலைக்கு, ரொம்ப வசதியா இருக்கும்னு, ஆளும்கட்சி தரப்பு நெனைக்குறாங்களோ என்னவோ,'' என்றாள்.

''அதுவும் சரிதான்,'' என்ற மித்ரா, ''அக்கா, கோர்ட்டை பார்த்தப்புறம் தான் ஞாபகம் வருது. பள்ளி மாணவி தற்கொலை செஞ்சுகிட்ட, வழக்குல பெண் ஒருத்தரை அரெஸ்ட் பண்ணாங்க தெரியுமா,'' ''ஆமாமா, நானும் பேப்பர்ல படிச்சேன். அதுல ஏதாச்சும் வெவகாரம் இருக்கா என்ன,'' என்றாள் சித்ரா.

''இந்த வழக்குல, போலீஸ் தரப்புல குற்றப்பத்திரிகை தாக்கல் பண்ணிட்டாங்க. கோர்ட்டுல விசாரணை தொடங்க இருந்த நேரத்துல, எதிர்தரப்பு வக்கீல், இந்த வழக்குல வேற சிலருக்கும் தொடர்பு இருக்குது. அதனால மறுவிசாரணை பண்ணணும்னு, பெட்டிஷன் போட்டுட்டாரு,''.

''இதனால போலீஸ் ரொம்ப கடுப்பாயிட்டாங்க. அப்புறம் தான், ஏற்கனவே கைதானவரோட மனைவியையும் இந்த வழக்குல சேர்த்து, அரெஸ்ட் காட்டி இருக்காங்க. தானே தன் தலையில மண்ணை வாரி போட்டுட்டாங்கன்னு, கோர்ட்டுல எல்லோரும் பேசிக்கிறாங்க,'' என்று ஒரே மூச்சாக சொல்லி முடித்தாள் மித்ரா.

''ஐயோ பாவம்,'' என்ற சித்ரா, ''போலீஸ் தரப்பு தகவல் ஏதாச்சும் இருக்கா,'' என்று குசலம் விசாரித்தாள்.

''ஆமாக்கா, வடவள்ளி, துடியலுார் போலீஸ் ஸ்டேஷனை சிட்டி போலீஸ்கூட இணைக்க, கவர்மென்ட் உத்தரவு போட்டு மாசக்கணக்குல ஆகுது. அதற்கான 'பிராசஸ்' நடந்துகிட்டு இருக்குது,''

''மாவட்ட போலீஸ்னா, அதிக கண்காணிப்பு இருக்காது; வேலையும் கம்மியா இருக்கும், ஆனா சிட்டி போலீஸ்னா வேலை நெட்டையை வாங்கிடுவாங்கன்னு, அங்க வேலை செய்யுற போலீஸ்காரங்க எல்லாம் சலிச்சுக்குறாங்க...,''

''அதனால, வடவள்ளி ஸ்டேஷன்ல இருக்குற போலீஸ்காரங்க பல பேரு, மாவட்ட போலீஸ்ல வேற ஸ்டேஷனுக்கு பணியிட மாறுதல் வாங்கிட்டாங்க. ஆனாலும், ஸ்டேஷனை சிட்டி போலீஸ் கூட இணைக்குற வரைக்கும், வடவள்ளி ஸ்டேஷன்லதான் உங்களுக்கு டூட்டின்னு எஸ்.பி., சொல்லிட்டாரு,''.

''இப்ப என்ன நடக்குதுன்னா, டிரான்ஸ்பர் வாங்குன போலீஸ்காரங்க யாரும், ஸ்டேஷன்ல சரியா வேலை செய்யறதில்லை; நேரத்துக்கும் வேலைக்கு வர்றது இல்லையாம். நாங்கதான் போகப் போறோமே, கொஞ்ச நாள் ப்ரீயா இருக்குறோம்னு சொல்லி, சும்மா சுத்துறாங்களாம்,'' என்றாள்.

''நல்ல கதையால்ல இருக்கு,'' என்ற சித்ரா, ''கோவை ஆர்.எஸ்.புரம் போக்குவரத்து போலீஸ்ல, ஐயப்ப சுவாமி பேரு கொண்ட ஸ்பெஷல் எஸ்.ஐ., இருக்காரு. இவரு அந்த பகுதியில வாகன சோதனை நடத்தும்போது, வாகன ஓட்டிகளை ஒருமையில பேசுறதா, தொடர்ந்து புகார் வந்துட்டே இருக்குது,''.

''ரோட்டுல போற வாகனங்களை பாய்ந்து போய் பிடிப்பாராம். அதனால வாகன ஓட்டிகள் தட்டுத்தடுமாறி நிப்பாங்களாம். சில பேரு கீழேயும் விழுறாங்களாம். இப்படி பண்ணுறீங்களேன்னு, வாகன ஓட்டிகள் கேள்வி கேட்டா, அவங்களை தாறுமாறா பேசுறாறாம். இதுக்கெல்லாம் உயரதிகாரி முடிவு கட்டுனா நல்லா இருக்கும்,'' என்றாள்.

உடனே, ''நான் கூட கேள்விப்பட்டேன்க்கா. அவருக்கு ஏதோ மேலதிகாரிங்க சப்போர்ட் இருக்குறதா போலீஸ்லயே பேசிக்கிறாங்க; உண்மையா இருக்குமோ,'' என்றாள் மித்ரா.

ஜூஸ் கடை முன் ஸ்கூட்டியை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தினாள் சித்ரா.

''கல்வித்துறையில நடக்குற அநியாயத்தை கேளுக்கா,'' என்ற மித்ரா, ''கோவைப்புதுார்ல ஒரு அரசு உதவிபெறும் பள்ளிக்கு, பட்டதாரி ஆசிரியர் மாறுதல் பெற, ஆறு லட்சம் ரூபாய் கேட்குறாங்க. இப்படி லஞ்சம் வாங்கிட்டு, டிரான்ஸ்பர் வாங்கித்தர்றதுக்கு ஒரு சிலபேரு புரோக்கர்களா செயல்படுறாங்க. அவங்க சி.இ.ஓ., ஆபீஸ்லயும் வேலையை காட்டுறாங்க. சி.இ.ஓ., இதை கொஞ்சம் கண்காணிச்சா நல்லா இருக்கும்,'' என்றாள்.

''அதுல இன்னொரு விஷயம் மித்து...,'' என்று இழுத்த சித்ரா, ''கூடுதலாக இருக்குற உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களை வேற பள்ளிக்கு மாத்துறாங்க. அப்படி மாறுதல் வாங்கிட்டு போறவங்களை, புதிய பள்ளிக்கூடத்துக்காரங்க ஏத்துக்கிறது இல்லை. 'எங்களுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்தா தான் ஏத்துக்குவோம்'னு கேட்குறாங்க. கொடுமையை பாரு,'' என்றாள்.

''பாவம் தான். இன்னொரு பரிதாப மேட்டர் ஒண்ணு இருக்குதுக்கா... துடியலூர் வட்டாரத்துல தனியார் நிறுவனங்கள்ள வேலை பாக்குற தொழிலாளர்களுக்கு, அங்க இருக்குற இ.எஸ்.ஐ., மருத்துவமனை தான் ஒரே உதவியா இருக்குது,''.

''சமீப காலமா இந்த ஹாஸ்பிடல்ல, உயிர் காக்கும் மருந்து எதுவும் ஸ்டாக் இல்லைன்னு சொல்லி கை விரிக்குறாங்க. அதை நம்பியே இருக்குற நோயாளிங்க பாவம், ரொம்ப சிரமப்படுறாங்க,'' என்ற மித்ரா, கடையில் ஆப்பிள் ஜூஸ் ஆர்டர் செய்தாள்.

''பேரூர் தாலுகா ஆபீஸ்ல ஒரே சத்தமாம், விசாரிச்சா ஒரே காமெடி,'' என்றாள் சித்ரா.

''அப்படி என்ன காமெடி?''

''சில வாரம் முன்னாடி நடந்த ஜமாபந்தில ஒருத்தர், 50 சென்ட் இடத்துக்கு சொத்துரிமை சான்றும், என்.ஓ.சி.,யும் கேட்டு வந்தாரு. அந்த இடத்தோட மதிப்பு, அவங்க புராஜக்ட் எல்லாம் கேட்ட துணை தாசில்தார், ஜமாபந்தி செலவு நிறைய இருக்குதுன்னு சொல்லி, 25 ஆயிரம் ரூபா வாங்கி இருக்காரு. ஒரு வழியா ஜமாபந்தியும் முடிஞ்சுது. ஆனா சொன்னபடி அவருக்கு சான்று எதுவும் கெடைக்கலை,''

''அவரு நேர்ல போயி தாலுகா ஆபீஸ்ல விசாரிச்சிருக்காரு. நீங்க கொடுத்த தொகை ஜமாபந்தில செலவாயிடுச்சு. ஆனா எனக்கு வர வேண்டியதை கொடுத்தால் தான், கையெழுத்து போடுவேன்னு அதிகாரி மேடம் சொல்லிட்டாங்க,''.

''அதனால மறுபடியும் பணம் தரணும்னு அதே துணை தாசில்தார் கேட்டிருக்காரு. இதைக்கேட்டதும், மனு கொடுத்தவர் கொந்தளிச்சு, சத்தம் போட ஆரம்பிச்சுட்டாரு. வெவகாரம் வெளிய தெரிஞ்சா ரொம்ப அசிங்கம் ஆயிடும்னு சொல்லி, அப்போதைக்கு அவரை சமாதானம் பண்ணி, அனுப்பி வெச்சாங்களாம்,'' என்றாள் சித்ரா.

''மத்தவங்க காசுக்கு அலையற அநியாயத்துக்கு, என்னிக்கு முடிவு வரப் போகுதோ,'' என்று சலித்தபடி, இருவரும் ஜூசை உறிஞ்சினர்.வாசகர் கருத்து (1)

  • baala - coimbatore,இந்தியா

    லஞ்சம் வாங்கி சாப்பிடுவதை விட ....

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement