Load Image
Advertisement

மணிப்பூர் மாநிலத்தில் அமைதி திரும்ப என்ன வழி?

முதல்வர் பைரேன் சிங் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கும் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், ஒரு மாதத்திற்கும் மேலாக, வன்முறை தீ பற்றி எரிகிறது. இம்மாநிலத்தில் பெரும்பான்மையாக வசிக்கும் மெய்டி சமூகத்தினருக்கு, பழங்குடியின அந்தஸ்து அளிப்பது குறித்து பரிசீலிக்கும்படி, மாநில அரசுக்கு மணிப்பூர் உயர் நீதிமன்றம், கடந்த மார்ச்சில் உத்தரவிட்டது.

இது, இங்குள்ள கூகி, நாகா பழங்குடியினர் மத்தியில்கடும் கோபத்தையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது. அதனால், கூகி உள்ளிட்ட பழங்குடியின அமைப்பினருக்கும், மெய்டி சமூகத்தினருக்கும் இடையே மோதல் வெடித்து, கலவரமாக நீடித்து வருகிறது.

இந்த கலவரத்தில், இதுவரை 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். பல நுாறு பேர் காயம் அடைந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர், நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். பல கோடி ரூபாய் சொத்துக்கள் சேதம் அடைந்துள்ளன.

பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் வீடு உட்பட, பல அரசியல் தலைவர்களின் வீடுகள் தீக்கிரையாகி உள்ளன. ராணுவம், போலீசார், அதிரடிப்படையினர் இணைந்து நடவடிக்கை எடுத்தும் நிலைமை கட்டுக்குள் வரவில்லை என்பது, மத்திய அரசுக்கு பெரும் கவலை அளிப்பதாக உள்ளது.

மணிப்பூர் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, மெய்டி உள்ளிட்ட சில சமூகத்தினரை, பழங்குடியினர் பட்டியலில் சேர்த்தால், பெரும்பாலும் கிறிஸ்துவ மதத்தை பின்பற்றும், கூகி, நாகா பழங்குடியினர் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என கருதுகின்றனர்.

தங்கள் சமூகத்தினருக்கான வேலை வாய்ப்பு பறிபோகும், பெரும்பான்மையாக வசிக்கும் மெய்டி சமூகத்தினர், காடுகள் மற்றும் மலைப் பகுதிகளில் நிலம் வாங்குவர்; தங்கள் வாழ்வாதாரம் பறிபோகும் என்றும் அஞ்சுகின்றனர். அதுவே, வன்முறை மற்றும் கலவரத்திற்கு காரணம்.

இந்த தருணத்தில், மணிப்பூர் மாநில உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு தவறானது என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியே விமர்சித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சமீபத்தில் இம்மாநிலத்திற்கு சென்று, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவது தொடர்பாக பேச்சு நடத்தினார். இருந்தும், அது பெரிய அளவில் பலன் அளிக்கவில்லை.

வன்முறையை கட்டுக்குள் கொண்டு வரவும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பல்வேறு பிரிவினருடன் பேச்சு நடத்தவும், மாநில கவர்னர் தலைமையில், மத்திய உள்துறை அமைச்சகம் அமைதி குழுவை நியமித்துள்ளது. ஆனால், இந்தக் குழுவில் சேர, மணிப்பூரில் பெரும்பான்மையாக வசிக்கும் மெய்டி சமூகத்தைச் சேர்ந்த பிரபலமான அமைப்பு மறுத்து விட்டது.

அதேநேரத்தில், இந்த அமைதிக் குழுவில், மாநிலத்தின் பா.ஜ., முதல்வர் பைரேன் சிங் இடம் பெறக்கூடாது என, கூகி பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், அமைதி குழுவினர் தங்களின் சமாதான நடவடிக்கைகளை தொடர முடியாத நிலை உருவாகி உள்ளது.

எனவே, மணிப்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டுஉள்ள அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொள்ளும்வகையில், அமைதிக் குழுவில் தேவையான மாற்றங்களைச் செய்து, சமரச பேச்சை, மத்திய அரசு விரைவில் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். அதேநேரத்தில், மாநிலத்தில் நிலைமையை மோசமாக்கி வரும், சில பிரிவினைவாத சக்திகளை, மத்திய, மாநில அரசுகள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

மேலும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பல்வேறு பிரிவினருக்கும், மாநில அரசுக்கும் இடையே ஒரு நம்பிக்கையின்மை உருவாகிஉள்ளது; அது தவிர்க்கப்பட வேண்டும். அத்துடன், பல்வேறு இன மக்களும், ஒருவரை ஒருவர் நம்பும் வகையிலான இணக்கமான சூழ்நிலையை உருவாக்க வேண்டும். அதுவே, விரைவில் அமைதி திரும்புவதற்கு வழிவகுக்கும்.வாசகர் கருத்து (2)

  • Muralidharan raghavan - coimbatore,இந்தியா

    மதமாற்றம் எப்படி சமுதாயத்தில் பிளவை ஏற்படுத்துகிறது ?

  • SENTHIL NATHAN - DELHI,இந்தியா

    கலவரத்துக்கு யாரெல்லாம் காரணமோ அவர்களை உடனே அந்த மாநிலத்தை விட்டு ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சிறைகளில் அடைத்து விட வேண்டும்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement