Load Image
Advertisement

தடையுத்தரவால் தலைவிக்கு 'தலைவலி' காதல் கவுன்சிலர் தாண்டுறாரு வேலி!

வாயிலில் அழைப்பு மணியோசை கேட்டு எழுந்து வந்த சித்ரா, கதவருகே நின்றிருந்த மித்ராவை கண்டதும், ''வா மித்து, வா, வா... என்ன இன்னிக்கு இவ்வளவு லேட்டா வர்றே,'' என்று வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றாள்.

''அந்த சோகக்கதையை ஏன்க்கா கேட்குறே,'' என்று ஆரம்பித்து, ''இன்னும் கொஞ்ச நாளைக்கு மழை வரலைன்னா சிட்டிக்குள்ள தண்ணி பிரச்னை, பூதாகரமா வந்துடும் போல இருக்குக்கா... இப்பவே இப்படின்னா, நம்ம பசங்க புள்ளைங்க காலத்துல, என்னாகும்னு நெனைச்சாலே பயமா இருக்குது,'' என்றாள் மித்ரா.

''சிறுவாணி அணையில தண்ணியே இல்லையாண்டி... அதனால தண்ணியை சிக்கனமா செலவு பண்ணுங்கன்னு, கார்ப்பரேஷன்ல இருந்து கவுன்சிலருங்க வரைக்கும் எல்லாரும் குடித்தனக்காரங்களுக்கு அட்வைஸ் பண்ணுறாங்க... ஆனா இந்த ஹோட்டல்காரங்களுக்கும், லாட்ஜ்காரங்களுக்கும் மட்டும் தண்ணி, எங்கிருந்து தான் கெடைக்குதோ தெரியலை,'' என்றாள் சித்ரா.

'இதுல இன்னொரு விஷயம் என்னன்னா...,'' என்று ஆரம்பித்த மித்ரா, ''சிட்டிக்குள்ள பல ஏரியாவுல தண்ணி சப்ளை, 10 நாளுக்கு ஒரு தடவை தான் கிடைக்குது. அணையில தண்ணி இல்லைங்குற காரணத்தை சொல்லாம, இந்த சூயஸ் கம்பெனிக்காரங்க, பராமரிப்பு பணி காரணமாக குடிநீர் 10 நாளைக்கு ஒரு முறை தான் சப்ளை செய்றோம்னு, மெசேஜ் அனுப்பி கடுப்படிக்குறாங்க,' என்றாள்.

''தண்ணி பிரச்னையை விடு.கார்ப்பரேஷன் பெண் கவுன்சிலர் ஒருத்தரோட காதல் விவகாரம் வீடியோவுல வந்துச்சாம்... பாத்தியாடி மித்து,'' என்று அடுத்த மேட்டருக்கு தாவினாள் சித்ரா.

''ஆமாக்கா. நானும் பாத்தேன். கார்ப்பரேஷன்ல கடந்த வாரத்துல ஹாட் டாபிக் அந்த வீடியோ தான்.ஆளும் கட்சிக்கு சங்கடத்தை உண்டாக்குறதுல, ஆளாளுக்கு போட்டி போடுறாங்க. தெற்கு மண்டலத்துல 2 கவுன்சிலருக, கூட்டத்துக்கே வராம டக்கால்டி குடுக்குறாங்க.

''வடக்கு மண்டலத்துல ஒரு கவுன்சிலர், அங்கிருக்கும் ஆளும் கட்சி பெண் நிர்வாகி ஒருத்தரை அடிக்கிற மாதிரி வீடியோவும் வந்துச்சு. இப்படி டெய்லி ஒரு வீடியோவா வந்திட்டிருந்தா, ஆளும் கட்சிக்காரங்க என்ன தான் பண்ணுவாங்க. அவங்களும் பாவம் தானே,'' என்று பரிதாபப்பட்டாள் மித்து.

''சரி சரி, கார்ப்பரேஷன், காதல் எல்லாம் போதுண்டி, போலீஸ்ல ஏதாச்சும் இருந்தா சொல்லு,'' என்று மித்துவின் வாயைக்கிளறினாள் சித்ரா.

''நம்ம மாவட்ட போலீஸ்ல, புதுசா ஒரு வழக்கத்தை ஆரம்பிச்சு வெச்சுருக்காங்க. அதாவது, ஏதாவது ஒரு வழக்குல பெண்கள் சிக்கினா, அவங்க குற்றம் சாட்டப்பட்டவரா, பாதிக்கப்பட்டவங்களான்னு வித்தியாசம் பாக்குறது இல்லை.

''அவங்க பேரை மறைக்குறது, படத்தை மறைக்குறதுன்னு இருக்காங்க. வழக்கமா, போக்சோ, பாலியல் துன்புறுத்தல், சைபர் கிரைம் போன்ற வழக்குகள்ல, பாதிக்கப்பட்டவங்க அடையாளம் தெரியக்கூடாதுன்னு சொல்லி முகத்தையும், பேரையும் மறைக்குறது வழக்கம். அது தான் கோர்ட் உத்தரவும் கூட.

''ஆனா, இவுங்க கொஞ்சம் ஓவரா போயிட்டாங்க. வழிப்பறி வழக்குன்னா கூட, பெண்களோட படத்தை மறைக்குறாங்க. ஆனா ஆண்களோட படத்தை அப்படியே வெளியிடுறாங்க.விபத்து வழக்குல புகார்தாரர் பெண்ணா இருந்தா,பேரை மறைச்சு வெளியிடுறாங்க. இவுங்க அலப்பறை தாங்க முடியலைன்னு, சட்டம் தெரிஞ்ச போலீஸ்காரங்க பேசிக்கிறாங்க,'' என்றாள் மித்து.

''அடப்பாவமே, தெரிஞ்சு தான் பண்ணுறாங்களா, தெரியாமப் பண்ணுறாங்களா,'' என்ற சித்ரா, ''யாரோ ஒரு அதிகாரி சொன்னதை, அரைகுறையா புரிஞ்சுட்டு இஷ்டத்துக்கு பாலோ பண்ணுறாங்க போல இருக்கு,'' என்று சலித்துக் கொண்டாள்.

''இன்னொரு விஷயம் கேளுக்கா, அதே எஸ்.பி., ஆபீஸ்ல, மாவட்ட குற்றப்பிரிவு ஒண்ணு இருக்குது. மாவட்டத்துல எங்கயாச்சும் சீட்டிங்420 கேஸ் நடந்தா, அவங்கதான் வழக்கு போடுவாங்க. அதுல இருந்த பெண் இன்ஸ்பெக்டரை, தடாலடியா வேற இடத்துக்கு டிரான்ஸ்பர் பண்ணிட்டாங்க.

'அதுல நல்ல நோக்கம் இருக்கிறா மாதிரி தெரியலை; ஏதோ கெட்ட நோக்கத்தோட பண்ணி இருக்கிறாப்புல தெரியுதுன்னு, எஸ்.பி., ஆபீஸ்ல ஒரு பேச்சு இருக்குது,'' என்றாள் மித்து.

அதற்கு சித்ரா, ''ஆமாமா... நான் கூட கேள்விப்பட்டேன். டிரான்ஸ்பரை தடுக்க எஸ்.பி., கூட முயற்சி பண்ணாரு; முடியலைன்னாங்க. என்னவோ போகட்டும். ஆனா, டுவீட்டுக்கு டுவீட்டு திருக்குறளை மேற்கோள் காட்டுற, ஐ.ஜி., இருந்துமா இப்படியெல்லாம் நம்மூர்ல நடக்குது,'' என்று நமட்டுச் சிரிப்பு சிரித்தாள்.

'நம்மூர்ல விஜிலன்ஸ் போலீஸ் சரியா வேலை செய்யலைன்னு நாம சொன்னதும், அடுத்தடுத்து ரெண்டு எப்.ஐ. ஆர்., போட்டுட்டாங்க பாத்தியாக்கா,'' என்றாள் மித்து.

'ஆமாமா, நாம என்ன நமக்காவா சொல்றோம். ஊர் நன்மைக்காக சொல்றோம். வழக்கு போட்டா, கைது பண்ணா பாராட்டப் போறோம். எப்படியோ நல்லது நடந்தா சரி,'' என்றாள் சித்ரா.

''விஜிலன்ஸ்னு சொன்னதும் தான் ஞாபகம் வருது. ஒரு சுவாரஸ்யமான வசூல் மேட்டர் சொல்றேன் கேளு,'' என்று ஆரம்பித்தாள் சித்ரா.

''தொண்டாமுத்தூர் பேரூராட்சியில செயல் அலுவலரா இருக்குறவர் ரமேஷ் குமார். இவருகிட்ட, ஒரு அமைப்பை சேர்ந்தவர் போய், 'சேலத்துல மாநாடு நடத்துறோம், நன்கொடை கொடுங்க'ன்னு கேட்க, அவரு எடுத்த எடுப்புல முடியாதுன்னு சொல்லிட்டார்.

ஆனா வசூலுக்குப் போன ஆசாமி, 'என்னை ஜாதிப்பேரை சொல்லி திட்டிட்டாரு'ன்னு போலீசில் புகார் கொடுக்கப் போறேன்னு, சொல்லிட்டுப் போயிட்டாரு,''

''ம்ம்...அப்புறம்?''

'இது என்னடா வம்பாப்போச்சுன்னு நெனச்ச அந்த அதிகாரி, சம்பந்தப்பட்ட நபர் கிட்ட கெஞ்சிக் கூத்தாடி, 10 ஆயிரம் ரூபா கொடுத்து அனுப்பி இருக்காரு. அதோட பிரச்னை முடியலையாம்.

''நான் பணம் கேட்ட உடனே கொடுத்திருந்தா பிரச்னை இல்லை; ஆனா நீங்க லேட் பண்ணி, வாக்குவாதம் பண்ணி இப்ப, நெறய சேதாரம் ஆகிப்போச்சு. இன்னும் பணம் தரணும்'னு அந்த வசூல் பார்ட்டி, வடிவேலு கணக்கா நச்சரிக்கிறாராம். ஆபீசர், பேய் முழி முழிச்சுட்டு இருக்காரு,'' என்றாள் மித்ரா.

''அவ்வளவு தானா, போன வாரம் பூராவும் காரமடை, காரமடைன்னு பேரு காதுல விழுந்துச்சே என்ன விஷயம் மித்து,'' என்றாள் சித்ரா.

''அதுவா,காரமடை யூனியன் மருதுார் பஞ்சாயத்துல 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்துல, போலியான பயனாளிகளை சேர்த்து, சம்பளப் பணத்தை ஆட்டையைப் போடுறதா, விஜிலன்ஸ் கேஸ் போட்டா மித்து. அதே மாதிரியான பிரச்னை இன்னும் நிறைய இடத்துல இருக்கு போல,''

''அன்னூர் யூனியன்ல சில பஞ்சாயத்துல, வேலை பாக்குற ஆளுகளை காட்டிலும் கூடுதலான ஆளுங்க பேருல, பணம் எடுக்குறதா பேசிக்கிறாங்க,''

''வேலையே செய்யாம சம்பளம் வந்தா யாருக்குத்தான் கசக்கும். வர்ற சம்பளப் பணத்துல, சம்பந்தப்பட்ட நபருக்கு 20 சதவீதமும், பஞ்சாயத்து பார்ட்டிகளுக்கு 80 சதவீதமும் போயிடுதுன்னு சொல்றாங்க... எல்லா பஞ்சாயத்துலயும், 100 நாள் வேலைத்திட்ட பயனாளிகளோட ஒரிஜினல் லிஸ்ட் எடுத்து ஆய்வு பண்ணுனா, சிறப்பான பல சம்பவங்கள் அரங்கேறும்னு அதிகாரிகள் பேசிக்கிறாங்க...,'' என்றாள் மித்ரா.

''அது மட்டுமில்லைக்கா, டெய்ல் பீஸ் மேட்டரும் காரமடை தான்க்கா. ஆளுங்கட்சி நகர செயலாளருக்குதடையுத்தரவு போட்டுருக்காங்க தெரியுமா,'' என்று ஆரம்பித்து விஷயத்தை சொல்ல ஆரம்பித்தாள் மித்ரா.

''காரமடையில நகர தி.மு.க., செயலாளர் மனைவி தான், நகராட்சி தலைவரா இருக்காங்க. பேருக்குத்தான் அவங்க தலைவர்; செயல்படுவது எல்லாம் செயலாளர் தானாம். இதுனால கவுன்சிலர்களுக்கு எல்லாம் செம கடுப்பு,''

''எதுக்குமே எங்களை கலந்துக்கிறதில்லைன்னு புகார் சொல்லி, சொல்லிப் பார்த்து நொந்து போன கவுன்சிலர்கள், ஒரு குரூப்பா சேர்ந்து, நகராட்சி தலைவரை மாத்தணும்னு டிமாண்ட் வெச்சுட்டாங்க. மொத்த கவுன்சிலர் 27 பேருல, 22 பேரு இப்படி கோரிக்கை வெச்சாங்க. அதையே ஒரு மனுவா தயார் பண்ணி மாவட்ட செயலாளருக்கும், பொறுப்பு அமைச்சருக்கும் அனுப்பிட்டாங்க.

''நிலைமை கை மீறி போய்டக்கூடாதுன்னு நெனச்ச பொறுப்பு அமைச்சர், மாவட்ட செயலாளரை விட்டுப் பேசி, 5 பேர் கொண்ட குழுவை போட்டுருக்காரு.

''அவங்களோட, நகராட்சி தலைவர், துணைத்தலைவர் சேர்ந்த 7 பேர் குழு தான் நகராட்சியை நிர்வாகம் செய்யணும்; தீர்மானம், டெண்டர் பணி ஒதுக்கீடு முடிவு செய்வது எல்லாத்தையும், அவங்க தான் செய்யணும்னு, உத்தரவு போட்டுருக்காங்க.

''இதுல ஹைலைட்டான மேட்டரே, நகர செயலாளர், நகராட்சி ஆபீஸ்க்குள்ள வரக்கூடாதுன்னு போட்ட தடையுத்தரவு தானாம். மீறி உள்ளாற வந்தா, சம்சாரத்தோட பதவி பணால்னு தெரிஞ்சு, அண்ணன் இப்ப வர்றதே இல்லையாம். காரமடை சுத்து வட்டாரத்துல, கட்சிக்காரங்க எல்லாம் இதைத்தான் பரபரப்பா பேசிக்கிறாங்க,'' என்று ஒரே மூச்சாக சொல்லி முடித்த மித்ரா, ''கலெக்டரேட்ல சின்னதா ஒரு வேலை இருக்கு; அப்புறமா வர்றேன்,'' என்று கூறி புறப்பட்டாள்.வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement