ஒடிசா மாநிலம், பாலசோர் மாவட்டத்தில், சமீபத்தில், ஷாலிமார் - சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் உட்பட, மூன்று ரயில்கள் மோதிய கோர விபத்தில், ௨௮௦க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். அவர்களில், ௫௦௦க்கும் மேற்பட்டவர்கள் பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் சதி வேலையாக இருக்கலாம் என, சந்தேகிக்கப்படுவதால், சி.பி.ஐ., விசாரணையும் நடந்து வருகிறது.
சமீபத்திய சில ஆண்டுகளாக, இந்திய ரயில்வேயானது, 'வந்தே பாரத்' ரயில், எக்ஸ்பிரஸ்களின் வேகம் அதிகரிப்பு உட்பட, பல்வேறு விஷயங்களிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது. அதற்கேற்ற வகையில், ௨௦௨௩ - ௨௪ம் நிதியாண்டில், ரயில்வே துறைக்கு, ௨.௪௦ லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. சில ஆண்டுகளாக, ரயில் பாதைகளை மின்மயமாக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு, ௯௦ சதவீத வழித்தடங்கள் மின்மயமாக்கப்பட்டு உள்ளன.
இந்தத் தருணத்தில், ஒடிசாவில் மூன்று ரயில்கள் மோதிய சம்பவம், சமீபத்திய ஆண்டுகளில் நிகழ்ந்த விபத்துகளில் மிக மோசமானதாக கருதப்படுகிறது.
அதே நேரத்தில், சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் விரைந்து சென்ற ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் அதிகாரிகள், தேசிய பேரிடர் மீட்பு படையினர், ராணுவத்தினர், தீயணைப்பு படையினர், மாநில அதிகாரிகள் மற்றும் உள்ளூர் தன்னார்வலர்கள் உதவியுடன் வேகமாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இதனால், பல உயிர்கள் காப்பாற்றப்பட்டதுடன், அந்த வழித்தடத்தில் மீண்டும் ரயில் போக்குவரத்தும் துரிதமாக துவங்கி உள்ளது.
ரயில்வேயில், சில ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால், விபத்துகளின் எண்ணிக்கையும், ரயில் பெட்டிகள் தடம் புரள்வதும், லெவல் கிராசிங்கில் விபத்துகள் நடப்பதும் கணிசமாக குறைந்துள்ளதாக, ரயில்வே அமைச்சகம் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே நேரத்தில், ௨௦௧௭ - ௨௧ வரையிலான நிதியாண்டுகளில் நிகழ்ந்த, ௨௦௦க்கும் மேற்பட்ட ரயில் விபத்துகளில், ௭௫ சதவீதம், ரயில் பெட்டிகள் தடம் புரண்டதால் தான் நிகழ்ந்துள்ளன என்று, ஆடிட்டர் ஜெனரல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து, ரயில் பாதைகள் பராமரிப்பில் ஏற்படும் குளறுபடிகளே, ரயில் பெட்டிகள் தடம் புரளவும், ரயில் விபத்துகள் நிகழவும் காரணம் என்பது தெளிவாகிறது.
ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் குறித்து, தற்போதைக்கு மாறுபட்ட தகவல் தெரிவிக்கப்பட்டாலும், ரயில்வே ஆணையரின் முழுமையான விசாரணைக்கு பிறகே, உண்மையான காரணம் தெரியவரும்.
அதே நேரத்தில், இந்த விபத்து தொடர்பாக விரிவான மற்றும் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும். அதில், குற்றம் புரிந்தவர்கள் யார் என்பது தெரிய வந்தால், அவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது ஒருபுறம் இருக்க, ரயில்வேயின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் விஷயத்தில், அதிக அக்கறை காட்ட வேண்டியது அவசியம். ஏனெனில், அதிவேகத்தில் செல்லக்கூடிய, 'வந்தே பாரத்' ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வரும் இந்த நேரத்தில், ரயில் பாதைகள் உட்பட, ரயில்வே கட்டமைப்புகள் தரமானதாக இருக்க வேண்டியது மிக மிக அவசியமாகும்.
மொத்தத்தில், பாலசோர் மாவட்ட ரயில் விபத்திலிருந்து ரயில்வே துறை மிகப்பெரிய பாடத்தை கற்றுக் கொண்டு, அதற்கேற்றபடி செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். ரயில் பயணமானது விபத்தில்லா பயணமாக இனி அமைவது தான், ஒடிசா விபத்தில் இறந்தவர்களுக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாகும்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!