நாடு முழுதும், 680 தனியார் மற்றும் அரசு மருத்துவக் கல்லுாரிகள் உள்ளன. 2018ல், 387 மருத்துவக் கல்லுாரிகள் மட்டுமே இயங்கி வந்த நிலையில், தற்போது, 94 சதவீத அளவுக்கு இந்தக் கல்லுாரிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
அரசு, தனியார் மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் மருத்துவ பல்கலைகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை, தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது. இந்த விதிமுறைகளின்படி, மருத்துவக் கல்லுாரிகள் செயல்படுகின்றனவா என்பதை, ஒவ்வொரு ஆண்டும், தேசிய மருத்துவ ஆணையம் ஆய்வு செய்து, அவற்றுக்கான அங்கீகாரத்தை புதுப்பிக்கும்.
கடந்த இரு மாதங்களாக, நாடு முழுதும் உள்ள மருத்துவக் கல்லுாரிகளில் ஆய்வு நடத்திய, தேசிய மருத்துவ ஆணைய அதிகாரிகள், தர விதிமுறைகளை சரியாக பின்பற்றாத, 40 மருத்துவக் கல்லுாரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்துஉள்ளனர். அந்த,40 மருத்துவக் கல்லுாரிகளிலும், இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கையை நடத்த முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது.
அது மட்டுமின்றி, மேலும், ௧௦௦ மருத்துவக் கல்லுாரிகளும் இதேபோன்ற பிரச்னையை எதிர்கொள்ளலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அங்கீகாரம் ரத்தாகியுள்ள, ௪௦ மருத்துவக் கல்லுாரிகளில் மூன்று, தமிழக அரசுக்கு சொந்தமானவை. சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லுாரி, திருச்சி மற்றும் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரிகள் அவை.
இதுதவிர, குஜராத், அசாம், புதுச்சேரி, பஞ்சாப், ஆந்திர பிரதேசம், திரிபுரா மற்றும் மேற்கு வங்க மாநில அரசு மருத்துவக் கல்லுாரிகளும், இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
அங்கீகாரம் ரத்தான கல்லுாரிகளில், கண்காணிப்பு கேமராக்கள் முறையாக பொருத்தப்படவில்லை. 'பயோமெட்ரிக்' வருகைப் பதிவு முறையாக செயல்படவில்லை. காலியாக உள்ள மருத்துவ பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை என்பதே, தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ள பிரதான குற்றச்சாட்டுகள்.
மருத்துவக் கல்லுாரிகளின் தரம் தொடர்பான விஷயத்தில், எந்த விதமான சமரசத்திற்கும் இடம் தரக்கூடாது என்பதில், யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஏனெனில், தரமற்ற மருத்துவக் கல்லுாரிகளால், முறையாக பயிற்சி பெற்ற, திறமையான டாக்டர்களை உருவாக்க முடியாது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தியது மற்றும் அதற்கான தடுப்பூசியை விரைவாக தயாரித்ததன் வாயிலாக, மேலை நாடுகளுக்கு இணையாக, இந்தியாவில் மருத்துவ வசதி உள்ளதும், இங்கு தரமான சிகிச்சை தரப்படுகிறது என்பதும் நிரூபிக்கப்பட்டது.
அப்படிப்பட்ட நிலையில், மருத்துவக் கல்லுாரிகள் தரமற்ற வகையில் செயல்பட்டால், அது, உலக அளவில் நம் நாட்டிற்கு மிகப்பெரிய களங்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. எனவே, தரமற்ற கல்லுாரிகளின் அங்கீகாரம் ரத்து விஷயத்தில், தேசிய மருத்துவ ஆணையம் பின்பற்றிய கடுமையான அணுகுமுறை சரியானதே.
மேலும், மருத்துவக் கல்லுாரிகளில் குறிப்பாக, அரசு கல்லுாரிகளில், பேராசிரியர்கள் பற்றாக்குறை நிலவுவதையும் எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் அதிக அக்கறை காட்ட வேண்டியது மிகவும் அவசியம். அத்துடன், மருத்துவக் கல்லுாரிகளின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும் கணிசமான நிதியை ஒதுக்க வேண்டும்.
வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, அவர்களுக்கு அடிப்படையான மற்றும் பல்நோக்கு சிறப்பு மருத்துவ வசதிகளையும் வழங்க வேண்டியது இன்றைய தேவை.
எனவே, அங்கீகாரம் ரத்தான கல்லுாரிகள், தேசிய மருத்துவ ஆணையம் குறிப்பிட்ட குறைகளை, போர்க்கால அடிப்படையில் நிறைவு செய்து, ரத்து முடிவை 'வாபஸ்' பெற முயற்சிக்க வேண்டும்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!