Load Image
Advertisement

50 தடவை ஓசியில் 'பறந்த' போலீஸ் லேடி ஆளுங்கட்சி கோஷ்டிக்குள்ளே அடிதடி!

வெளியூரிலிருந்து வந்த தோழிகள் இருவருடன், கோனியம்மன் கோவிலுக்குச் சென்றிருந்த சித்ராவும், மித்ராவும், அவர்களிருவரும் சாமி கும்பிட்டு வரும் வரை, மண்டபத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

கூட்டம் குறைவாக இருந்ததால், தன்னையுமறியாமல் சத்தமாகப் பேசினாள் மித்ரா...

''அக்கா! அவுங்க ரெண்டு பேருக்கும் 'பிளைட்'டுக்குப் போகணும். கொஞ்சம் சீக்கிரமாவே கிளம்பிருவோம். அவிநாசி ரோட்டுல எத்தனை 'யு டர்ன்' போட்டு விட்டாலும், டிராபிக் குறைஞ்சபாடில்லை,''.

அவள் முடிக்கும் முன்னே தொடங்கினாள் சித்ரா...

''சிட்டியில சிக்னல் இல்லாம டிராபிக்கை சரி பண்ணுனது நல்ல விஷயம்தான்...ஆனா சிக்னல்கள்ல மட்டுமில்லாம, முக்கியமான பல இடங்கள்ல டிராபிக் போலீசையே பார்க்க முடியலை...அதனால பசங்க பயங்கர ஸ்பீடா வண்டி ஓட்றாங்க, 'ஒன் வே'ல லாரி, கார்கள் வர்றது, டூ வீலர்ல 3, 4 பேரு போறது எல்லாவிதமான 'டிராபிக்' வயலேஷனும் சர்வ சாதாரணமா நடக்குது!''

அதை ஆமோதித்துப் பேசினாள் மித்ரா...

''உண்மைதான்க்கா...சிட்டியில காலேஜ் பசங்க 'பிளைட்' ஓட்றது மாதிரித்தான் வண்டி ஓட்றானுக...போலீசைப் பத்தி பயமே இல்லை!''

ஏதோ நினைவுக்கு வந்தவளாய் மீண்டும் குறுக்கிட்டாள் சித்ரா...

''நீ அடிக்கடி 'பிளைட்'ன்னு சொன்னதும் ஒரு மேட்டர் ஞாபகம் வந்துச்சு...ஒரு லேடி எஸ்.ஐ., ரெண்டு வருஷத்துல 50 தடவை 'பிளைட்'லயே, சென்னைக்கு பறந்து பறந்து போயிருக்காங்க தெரியுமா?''

''என்னக்கா சொல்றீங்க...யூ மீன் 50 டைம்ஸ்?''

''யெஸ்...நம்ம ஊருல நிதி நிறுவனம் நடத்தி, 20 கோடி ரூபா மோசடி பண்ணுன ரெண்டு பேரை, பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ்காரங்க, மூணு நாளைக்கு முன்னாடி அரெஸ்ட் பண்ணிருக்காங்க. ஆக்சுவலா அவுங்க மேல கேஸ் போட்டு ரெண்டு வருஷமாச்சு. ஆனா அரெஸ்ட் பண்ணலை. ரெண்டு வருஷமா ஜாலியா சுத்திட்டு இருந்திருக்காங்க!''

''போலீசுக்கு கவனிப்பு வலுவா இருந்திருக்கும்!''

''அதேதான்...ஆனா இப்போ வந்திருக்குற போலீஸ் ஆபீசர்ஸ், அதிரடியா ரெண்டு பேரையும் துாக்கி விசாரிச்சு இருக்காங்க.

அப்பதான், ரெண்டு வருஷத்துல ஒரு லேடி எஸ்.ஐ.,க்கு 50 தடவைக்கு மேல, சென்னைக்கு 'பிளைட் டிக்கெட்' போட்டுக் கொடுத்ததாச் சொல்லிருக்காங்க...அதைக் கேட்டு போலீசே மெரண்டு போயிட்டாங்க...அப்பிடின்னா, துட்டு எவ்வளவு விளையாடிருக்குன்னு பாரு!''

''இப்போ ஆபீசர்கள் காட்டுலதான் அதிர்ஷ்டக்காத்து அடிக்குது...ஆளும்கட்சிக்காரங்களைப் பார்த்தா வெறும் புலம்பலாத்தான் இருக்கு!''

''அதுல சந்தேகமேயில்லை...தொண்டாமுத்தூர்ல ஆளும்கட்சியில ஒன்றியத்துல முக்கியப் பொறுப்புல சாமி ஒருத்தரு இருக்காரு.

ஆலாந்துறை தி.மு.க.,நகரப் பொறுப்புலயும், ஒரு சாமி இருக்காரு. ஒன்றியப் பதவிக்கு இந்த சாமி முயற்சி பண்ணி கிடைக்கலை. அதுலயிருந்து ரெண்டு பேருக்கும் இடையில பயங்கரமா முட்டிட்டு இருக்கு. அதுல அந்த நகரச் செயலாளர்தான் அதிகமா புலம்புறாரு!''

''அவருக்கு என்ன பிரச்னையாம்?''

''எல்லாத்தையும் கரூர்க்காரங்களே வாங்கிக்கிறாங்க...நகரச் செயலாளர் பதவி நாக்கு வழிக்கக் கூட உதவாதுன்னு, பகிரங்கமாவே பேசுறாராம்...!''

''மித்து! கருணாநிதி நுாற்றாண்டு பிறந்த நாள் விழாவுக்கு, மணியக்காரன்பாளையத்துல கொடி கட்டுறது, பிளக்ஸ் வைக்கிறதுல ஆளும்கட்சியில ரெண்டு கோஷ்டிக்குள்ள பெரிய தகராறு ஆயிருக்கு...வார்டு செயலாளர் கோஷ்டிக்கும், சிட்டி மேடத்தோட வீட்டுக்காரர் கோஷ்டிக்கும், இடையில வாக்குவாதமாகி கைகலப்பாயிருக்கு!''

''கைக்கட்சியோட கலந்ததுல இப்பிடி ஆயிருச்சோ!''

மித்ராவின் 'டைமிங் கமென்ட்'டுக்குச் சிரித்த சித்ரா, மேட்டரைத் தொடர்ந்தாள்...

''இந்தத் தகராறுல, சீட்டாட்ட கிளப் நடத்துற சிட்டி மேடத்தோட தங்கச்சி வீட்டுக்காரரு, அடியாட்களைக் கூப்பிட்டு வந்து, வார்டு செயலாளர் ஆட்களை பின்னி எடுத்திருக்காரு.

அதுல காயமாகி ஒருத்தரு, ஜி.எச்.,ல அட்மிட் ஆகி ட்ரீட்மென்ட் எடுக்குறாரு...ஆனா கேஸ் பதியவேயில்லை. எல்லாம் 'பொறுப்பு' கொடுக்குற தைரியம்னு, உடன்பிறப்புகள் உஷ்ணத்துல கொதிக்கிறாங்க!''

''ஆளும்கட்சியில எல்லா இடத்துலயும், கோஷ்டி மோதல் அதிகமாயிட்டு இருக்கு...மேட்டுப்பாளையம் நகராட்சியில முக்கியப் பொறுப்புல இருக்குற லேடிக்கும், கட்சியில நகரப்பொறுப்புல இருக்கிறவருக்கும், ஏழாம் பொருத்தமாம்.

பொது இடத்துலயே அந்த லேடி மக்கள் பிரதிநிதியை, 'நகரம்' திட்டுற திட்டுல, கட்சிக்காரங்களே கண்ணைக் கசக்குறாங்க!''

''நிஜமாவா?''

''ஆமாக்கா! போன வாரம் கூட, கருணாநிதி நுாற்றாண்டு பிறந்தநாள் விழாவையொட்டி, உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்புல, சைக்கிள் விழிப்புணர்வு பயணம் நடத்தியிருக்காங்க.

அதை இந்தம்மாதான் கொடியசைச்சுத் துவக்கி வச்சிருக்காங்க...அதுக்கு, 'நமக்கு அழைப்பு மரியாதை இல்லாத இடத்துக்கு, ஏன் போனீங்க'ன்னு பொது இடத்துல வச்சு, ஒருமையில திட்டிருக்காரு!''

''இளையவர் பேருல நடக்குற நிகழ்ச்சிக்குப் போகக்கூடாதுன்னா, இந்நேரம் கட்சித் தலைமைக்கு புகார் போயிருக்குமே...!''

''அதெல்லாம் போயிருச்சு...இந்தம்மா மட்டுமில்லை...கட்சிக்காரங்களே இவரோட நடவடிக்கையைப் பத்தி, கட்சித் தலைமைக்கும், உதயநிதிக்கும் ஏகப்பட்ட பெட்டிஷன் தட்டி விட்ருக்காங்களாம்!''

''ஆளும்கட்சிக்காரங்க அலும்பு வரவர அதிகமாயிட்டே இருக்கு...பிளிச்சி பஞ்சாயத்துல சின்ன மத்தம்பாளையம் ஏரியாவுல, ஒரு ரேஷன் கடையில, நிறைய குடும்பங்கள் இருந்ததால, ரெண்டா பிரிச்சு, கோட்டை பிரிவுல புது ரேஷன் கடை அமைச்சுட்டாங்க. ஒரு மாசமாகியும் இன்னும் திறக்கலை... அமைச்சர்ட்ட பர்மிஷன் வாங்கிதான் திறக்கணும்னு, தி.மு.க.,காரங்க தடுத்துட்டு இருக்காங்களாம்!''

''ஓட்டுப் போட்ட மக்களுக்கு, இவுங்களால எந்த நல்லதும் நடக்குறதில்லை...கார்ப்பரேஷன்ல நடக்குற கூட்டங்களுக்கு, பல ஆளும்கட்சி கவுன்சிலர்கள் வர்றதேயில்லை. வந்தாலும் பேசுறதேயில்லை. மேற்கு மண்டலத்துல போன கூட்டத்துல ஏழு கவுன்சிலர்கள் 'ஆப்சென்ட்'டாம்...!''

''கார்ப்பரேஷன்னு சொன்னதும் ஞாபகம் வந்துச்சு...டி.பி.ஓ., ரிட்டயர்டு ஆயிட்டதால, 'பசையுள்ள' அந்த போஸ்ட்டிங்கைப் பிடிக்க, தெற்குலயும், மேற்குலயும் இருக்குற ரெண்டு லேடீஸ் தீவிரமா முயற்சி பண்ணுனாங்க,''

''ஆனா இவங்க முயற்சி எல்லாத்தையும் தாண்டி, கிழக்கு மண்டல ஏ.டி.பி.ஓ., குமாருக்கு போஸ்டிங் போட்டதுல, லேடீஸ் ரெண்டு பேரும் அப்செட்''.

''தடாகம் ஏரியாவுல காட்டு யானைக நடமாட்டம் அதிகமாயிருச்சு...அதுக்குப் பயந்துட்டே, போலீஸ்காரங்க அந்தப்பக்கம் நைட் ரவுண்ட்ஸ் போறதேயில்லை...இதைப் பயன்படுத்திட்டு, திருட்டுப்பசங்க, தோட்டங்கள்ல இருக்குற மோட்டாரு, பம்ப்செட், மீட்டர் எல்லாத்தையும் திருடிட்டுப் போயிர்றாங்க!''

''இதுவும் விவசாயிகள் பிரச்னைதான்...ஒவ்வொரு வருஷமும் ஜமாபந்தி நடக்குறப்போ, தாலுகாவாரியா எந்தெந்த ஏரியாவுல விவசாயம் நடக்குது, எது எதை தரிசா விட்டுட்டாங்கன்னு சர்வே பண்ணி, ஜமாபந்தியில விபரங்களை 'சப்மிட்' பண்ணுவாங்க...ஆனா இந்த வருஷம், அன்னுார் ஏரியாவுல களத்துக்குப் போகாமலே, தரிசு நிலமா இருக்குறதையெல்லாம் விவசாய நிலம்னு, கணக்குக் காமிச்சிருக்காங்க!''

மித்ரா பேசிக்கொண்டிருக்கும்போதே, தோழிகள் இருவரும் வர, நான்கு பேரும் அங்கிருந்து புறப்பட்டனர்.வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement