பள்ளிக்கரணை, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழை நீர் தேங்காமல் இருக்க, மழை நீர் வடிகால் கட்டுமானங்களை அமைக்க, அரசு உத்தரவிட்டது.
அந்த வகையில், பல்லாவரம் - துரைப்பாக்கம் இடையே உள்ள ரேடியல் சாலையில், பல்லாவரம் ஏரி முதல் பள்ளிக்கரணை தனியார் மருத்துவமனை அடுத்த சதுப்பு நிலம் வரை, மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டன.
முதற்கட்டமாக பல்லாவரம் ஏரி முதல் கீழ்க்கட்டளை ஏரி, 6,100 மீட்டர் துாரத்துக்கும், இரண்டாம் கட்டமாக கீழ்க்கட்டளை ஏரி முதல் நாராயணபுரம் ஏரி வரை, 3,500 மீட்டர் துாரத்துக்கும் பணிகள் நடக்கின்றன.
மூன்றாவதாக, நாராயணபுரம் ஏரி முதல், பள்ளிக்கரணை தனியார் மருத்துவமனை அருகே சதுப்பு நிலம் வரை பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இப்பணி குறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
மூன்று பணிகளும், 2022, ஆக., மாதம் துவங்கின. 2023 ஏப்ரலில் பணி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இதுவரை, 40 சதவீத பணிகள் மட்டுமே முடிந்துள்ளன.
சதுப்பு நிலத்தின் உயரத்தைவிட, மழை நீர் வடிகால்களின் உயரம் குறைவாக இருப்பதுபோல் தெரிகிறது. உயரம் குறைவான இடத்திலிருந்து, மேடான இடத்திற்கு நீர் எப்படி செல்லும்.
சரியாகத் திட்டமிடாமல், அவசரகதியில் இத்திட்டம் உருவாக்கப்பட்டதாலேயே, குறிப்பிட்ட காலத்தில், பணிகளை நிறைவேற்ற முடியாமல், நத்தை வேகத்தில் பணிகள் நடந்து வருகின்றன.
தென்மேற்கு மழைக்காலத்திற்கு முன், ரேடியல் சாலையில் நடக்கும் வடிகால் பணிகளை முடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!