காங்., முன்னாள் தலைவர் ராகுல்: பிரதமர் மோடி ஒரு தினுசானவர். வரலாற்று ஆய்வாளர்களுக்கு வரலாற்று பாடம் எடுப்பார். விஞ்ஞானிகளுக்கு அறிவியல் கற்றுத் தருவார். ராணுவத்தினருக்கு போர் முறைகள் கற்றுத் தருவார். ஒருவேளை கடவுளுடன் அமர்ந்து பேச, அவருக்கு வாய்ப்பு கிடைத்தால், 'இந்த பிரபஞ்சம் எப்படி இயங்குகிறது' என, கடவுளுக்கே பாடம் எடுப்பார். தான் உருவாக்கிய பிரபஞ்சம் குறித்த புதிய தகவல்களை கேட்டு கடவுளே குழப்பம் அடைந்து விடுவார்.
டவுட் தனபாலு: ஆஸ்திரேலிய பிரதமர், 'மோடி தான் பாஸ்' என்கிறார்... இத்தாலி பிரதமர், 'உலகின் சிறந்த தலைவர் மோடி' என்கிறார்... 'மோடி சொன்னால் தான், ரஷ்ய அதிபர் கேட்பார்'னு, உலக நாடுகள் நம்மகிட்ட பஞ்சாயத்துக்கு வர்றாங்க... இதை எல்லாம் பொறுக்க முடியாம உருவான புகைச்சல் தான், உங்களை இப்படி பேச வைக்குது என்பதில், 'டவுட்'டே இல்லை!
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை: அமைச்சர் தியாகராஜன் எந்த விதத்திலும் தவறு செய்யவில்லை. அவர் துறையை மாற்றி இருப்பது, திராவிட மாடல் அரசில் யாருக்கு வேண்டுமானாலும், எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதை எடுத்துரைக்கிறது. அவரை மாற்றியது, மதுரை மண்ணுக்கு தி.மு.க., செய்த மாபெரும் துரோகம்.
டவுட் தனபாலு: நீங்க வெளியிட்ட ஆடியோவால, தியாகராஜன் துறையை தான் இப்ப மாத்தி இருக்காங்க... இப்படியே தொடர்ந்து அவருக்கு வக்காலத்துவாங்கிட்டு இருந்தீங்கன்னா, சீக்கிரமா அமைச்சரவையை விட்டே துாக்கி கடாசிடுவாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன்: மேகதாது அணை கட்ட, தமிழக அரசு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிப்போம். கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் பதவியேற்றதும், வேறு பணிகளை செய்வார் என்று நினைத்தோம். ஆனால், அண்டை மாநிலங்களுடன், அவர் நட்புறவை பேணுவதாக தெரியவில்லை. மேகதாது அணை கட்ட சம்மதிக்க மாட்டோம்.
டவுட் தனபாலு: கர்நாடகாவில், காங்., பதவி ஏற்ற, 10 நாளிலேயே, மேகதாது விவகாரத்தை கையில் எடுத்துட்டாங்க... உங்க கூட்டணி கட்சியா வேற இருக்கறதால, இனி இந்த விவகாரத்துல எதிர்க்கட்சிகாரங்க கொடுக்க போற குடைச்சலை சமாளிக்கறதுக்குள்ள, உங்களுக்கு நாக்கு தள்ளிடும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
ஒரு கட்சியின் பொறுப்பான தலைவராக இல்லாமல் உலகளவில் உளறல் நாயகன் என்று பெயரெடுத்திருக்கிறார் காங்கிரசுக்கு இறுதி 'காரியம்' செய்ய இவர் ஒருவரே போதும்