ஒரு நாட்டின் வரலாற்றில், அன்றாட அரசியலை விட, உயரிய அமைப்புகளும், மறக்க முடியாத சம்பவங்கள் நிகழ்ந்த தருணங்களுமே முக்கியத்துவம் வாய்ந்தவை. அப்படிப்பட்ட உயரிய அமைப்புகளில் ஒன்று தான் பார்லிமென்ட். நாடு முழுதும் வசிக்கும் மக்களின் பிரச்னைகள் பற்றி விவாதிக்கும் சபையே பார்லிமென்ட். இங்கு மக்களின் குரலானது, அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளான, எம்.பி.,க்கள் வாயிலாக ஒலிக்கிறது.
தலைநகர் டில்லியில், இதுவரை பயன்பாட்டில் உள்ள பார்லிமென்டானது, 1927 ஜனவரி 18ல் ஆங்கிலேய அரசால் திறக்கப்பட்ட பழமையான கட்டடம். தற்போதைய சூழ்நிலையில், நம் நாடானது நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் அதிக வசதிகளுடன் கூடிய பார்லிமென்டை பெற்றிருக்க வேண்டியது அவசியம்.
அதனால் தான், தற்போதைய பார்லிமென்ட் அருகே, புதிய பார்லிமென்ட் கட்டடத்தை கட்ட, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ., அரசு முடிவு செய்தது. இதன்படி, புதிய பார்லிமென்ட் கட்டுவதற்கு, 2020ல் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 970 கோடி ரூபாய் செலவில், புதிய பார்லிமென்ட் கட்டப்பட்டு, டில்லியில் நடந்த கோலாகல விழாவில், பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது.
ஆனால், 'புதிய பார்லிமென்டை பிரதமர் மோடி திறக்கக் கூடாது; ஜனாதிபதி திரவுபதி முர்மு தான் திறந்து வைக்க வேண்டும்' என வலியுறுத்தி, 19 எதிர்க்கட்சிகள் திறப்பு விழாவை புறக்கணித்து விட்டன. அதே நேரத்தில், மதச்சார்பற்ற ஜனதா தளம், பிஜு ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், அ.தி.மு.க., உள்ளிட்ட பல கட்சிகளின் பிரதிநிதிகள் விழாவில் பங்கேற்றனர்.
இந்நிலையில், பிரதமர் மோடியால் நேற்று திறந்து வைக்கப்பட்ட புதிய பார்லிமென்ட் கட்டடத்தில், நம் தமிழகத்தின் பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தை பறைசாற்றும் வகையில், நாடு சுதந்திரம் அடைந்த போது, அப்போது ஆட்சி பொறுப்பை ஏற்கவிருந்த ஜவஹர்லால் நேருவிடம் வழங்கப்பட்ட செங்கோல், நேற்று முன்தினம் திருவாவடுதுறை ஆதீனத்தால், பிரதமர் மோடியிடம் வழங்கப்பட்டு, நேற்று புதிய பார்லிமென்டில் சபாநாயகர் இருக்கை அருகே நிறுவப்பட்டது.
இந்த செங்கோலானது, உத்தர பிரதேச மாநிலம், அலஹாபாதில் உள்ள அருங்காட்சியகத்தில், 'பண்டிட் ஜவஹர்லால் நேருவுக்கு பரிசளிக்கப்பட்ட கோல்டன் வாக்கிங் ஸ்டிக்' என்று பெயரிடப்பட்டு, பல ஆண்டுகளாக பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.
தமிழகத்தில் சோழ மன்னர்கள் நடத்திய ஆட்சி முறைப்படி உருவாக்கப்பட்ட இந்த செங்கோலுக்கு, நாடு சுதந்திரம் அடைந்து, ௭௫ ஆண்டுகளுக்கு பின், தற்போது பிரதமர் மோடியால் முக்கியத்துவம் கிடைத்துள்ளது. சைவ சமயத்தில் நந்தி என்பது தர்மத்தின் அடையாளம்.
அப்படிப்பட்ட நந்தி சிலையை மேற்புறத்தில் கொண்டுள்ள இந்த 5 அடி உயர செங்கோலை தயாரித்த, சென்னையில் உள்ள உம்மிடி பங்காரு செட்டி நகைக் கடையினரும், புதிய பார்லிமென்ட் திறப்பு விழாவில் கவுரவிக்கப்பட்டது பாராட்டுக்குரியது.
நம் செழுமையான ஆன்மிகம் மற்றும் கலாசார பாரம்பரியம் பேணிக் காக்கப்பட வேண்டும் என்பதில் எப்போதும் உறுதியாக இருக்கும் பிரதமர் மோடி, தொழில்நுட்பம் மற்றும் நவீனத்துவத்தை அறிமுகப்படுத்துவதிலும், பயன்படுத்துவதிலும் சிறந்த நபராக உள்ளார்.
அந்த வகையில், அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய, புதிய பார்லிமென்ட் கட்டடத்தை கட்டி திறந்து வைத்ததுடன், தமிழகத்தின் பெருமையை, சோழ மன்னர்களின் நீதி வழுவா ஆட்சியை பறைசாற்றும் செங்கோலுக்கு முக்கியத்துவம் கொடுத்து நிறுவியது சிறப்பானதாகும். எனவே, மே 28 நம் இந்திய வரலாற்றில் ஒரு பொன்னான நாள்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!