சமீபத்தில், சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா ஓய்வு பெற்றார். அப்போது, 'தமிழக வழக்கறிஞர்கள் தங்களுடைய ஆங்கில திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
அப்போது தான் திறம்பட வாதாட முடியும். சீனியர்கள் வழக்காடும் போது அவர்கள் எப்படி பேசுகிறார்கல் என்பதை ஜூனியர்கள் பார்த்து, கற்றுக் கொள்ள வேண்டும்' என கூறினார்.
இந்த கருத்து நூற்றுக்கு நூறு உண்மை. இப்போதுள்ள இளம் வழக்கறிஞர்களின் நிலையை அது எடுத்துக் காட்டுகிறது.
தடுமாறும் இளையோர்
தமிழகத்தின் இளம் வழக்கறிஞர்கள், சுப்ரீம் கோர்ட்டில் ஆங்கிலத்தில் தங்கள் வாதங்களை சரியாக முன்வைக்க முடியாமல் தடுமாறுவதை நேராக பார்த்திருக்கிறேன்.
தமிழக வழக்கறிஞர்கள் அனைவருமே இப்படியா என கேட்டால்; நிச்சயமாக இல்லை. சுப்ரீம் கோர்ட்டில் அருமையான ஆங்கிலத்தில் பிரமாதமாக வாதாடுபவர்களும் உள்ளனர். ஆனால், அவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.
அனேகமாக, தமிழகத்திலிருந்து டில்லிக்கு வந்து இங்கேயே செட்டில் ஆகி வழக்கறிஞர்களாக இருப்பவர்கள் அருமையான ஆங்கிலத்தில் வாதாடுகின்றனர்.
ஏன், தமிழகத்தில் இருந்து டில்லிக்கு வந்து வக்கீல் அலுவலகத்தில் கிளார்க்காக சேர்பவர்கள் கூட நன்றாக ஆங்கிலம் பழகிக்கொள்கின்றனர்.
கிளார்க்காக இருந்து...
கேஸ் பைல் செய்வது உட்பட வக்கீல்களின் வேலைகளை கிளார்க்குகள் செய்வர்.
இவர்களில் சிலர், டில்லியில் சட்டம் படித்து வழக்கறிஞர்களாகவும் உயர்ந்துள்ளனர். எனக்கு தெரிந்த இரண்டு இளம் தமிழக வக்கீல் கிளார்க்குகள் இப்படி சட்டம் படித்து உச்ச நீதிமன்றத்தில் வக்கீல்களாக உள்ளனர்.
இவர்களில் ஒருவர் தமிழக கிராமத்திலிருந்து டில்லி வந்தவர். நிர்பயா வழக்கில் ஒருவருக்காக உச்ச நீதிமன்றத்தில் வாதாடியவர்.
அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, இந்த இளம் வழக்கறிஞரின் வாத திறமையை பார்த்து, வாதத்தை முன்வைக்க அதிக நேரம் ஒதுக்கினார். கிராமத்துக்காரரான இவர் ஆங்கிலத்தில் நன்றாக வாதாடினார்.
சுப்ரீம் கோர்ட்டில், வழக்கறிஞர்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு வாதாட வாய்ப்பு கிடைப்பது கஷ்டம்.
அப்படி கிடைத்தால் இரண்டே நிமிடங்களில் வழக்கு என்ன, மனுதாரருக்கு என்ன மாதிரியான நிவாரணம் தேவை என்பதை சொல்லிவிட வேண்டும்.
அதை விடுத்து தமிழக அரசியல்வாதிகள் போல பேசிக் கொண்டே போனால் நீதிபதி வெறுத்துப் போய் வழக்கை தள்ளி வைத்து விடுவார்.
ஆக, பிரச்னை, தமிழகத்தின் இளம் வக்கீல்களுக்கு அதிக வெளி உலக ஞானம் இல்லாதது தான். அவர்கள் தமிழகத்தை விட்டு, பணி நிமித்தமாக, அதிகம் வெளியே போவதில்லை. அப்படி சிலர் டில்லிக்கு வந்தாலும், கேஸ் வாதாடிவிட்டு அன்று மாலையே சென்னை திரும்பிவிடுகின்றனர்.
பரிதாபம்
இளம் வக்கீல்கள் ஆங்கிலத்தில் வாதாட தடுமாறுவது ஒரு பக்கம் என்றால், தமிழக அரசின் மூத்த வழக்கறிஞரே திண்டாடுவதை பார்த்திருக்கிறேன்.
ஒரு சமயம், சுப்ரீம் கோர்ட்டின் மூன்றாம் எண் கோர்ட்டில் தமிழக அரசு தொடர்பான வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது.
தமிழக அரசு சார்பில் டில்லியின் மூத்த வழக்கறிஞர் வாதாடிக் கொண்டு இருந்தார். அப்போது, தமிழக அரசின் வக்கீல், அருகிலேயே அமர்ந்திருந்தார். அவர், பெரிய பொறுப்பில் இருப்பவர், அரசியல்வாதி.
வழக்கு தொடர்பாக நீதிபதி ஏதோ கேள்வி கேட்டார். உடனே மூத்த வழக்கறிஞர், அருகே அமர்ந்திருந்த தமிழக அரசு வழக்கறிஞர் பதில் சொல்வார் என அவரை பார்த்தார்.
சென்னையிலிருந்து வந்திருந்த அந்த அரசியல்வாதி, அரசு வழக்கறிஞர், எழுந்து பதில் சொல்ல ஆரம்பித்தார். ஆங்கிலத்தில் கடும் தடுமாற்றம், அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதே புரியவில்லை.
உடனே நீதிபதி, 'போதும் நீங்கள் உட்காரலாம்' என வெறுப்புடன் சொல்ல, சென்னை அரசு வழக்கறிஞர் வியர்க்க விறுவிறுக்க அமர்ந்துவிட்டார்.
பிற்பாடுதான் தெரிய வந்தது, இந்த அரசு வழக்கறிஞர் முக்கிய வழக்கு விசாரணைகளில் ஆஜரானதே இல்லை என்று! ஆனால், அப்போதைய தமிழக அரசு அவருக்கு மிகப் பெரிய பொறுப்பை அளித்திருந்தது. காரணம், ஜாதி அரசியல்.
அரசியல்வாதிகளும்...
அவர் ஒரு சீனியர் வக்கீல். சென்னையில் அரசியல் தொடர்பான பல பரபரப்பான வழக்குகளை வெற்றிகரமாக நடத்தியவர். சுப்ரீம் கோர்ட்டில் வாதாடி வெற்றி பெற்றவர். தற்போது அரசியலிலிருந்து ஒதுங்கி வக்கீல் தொழிலை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
சில நாட்களுக்கு முன் அவரிடமிருந்து போன்... 'கர்நாடகா தேர்தல் விவாதத்தை 'டிவி'யில பார்த்தேன். கர்நாடகா அரசியல்வாதிகள், என்னமா இங்கிலீஷ்ல பேசறாங்க.
எனக்கு என்ன வருத்தம்னா, நம்ம அரசியல்வாதிகள் இப்படி இங்கிலீஷ் பேசறதில்லையே. ஒருத்தர் ரெண்டு பேர் தான் இருக்காங்க' என ஆதங்கப்பட்டார்.
அவர் சொன்னது உண்மைதான். விரல் விட்டு எண்ணக் கூடிய தமிழக அரசியல்வாதிகளை தவிர மற்றவர்கள் ஆங்கில 'டிவி' சேனல்களில் பேசுவதை தவிர்க்கின்றனர். காரணம் தங்களுடைய ஆங்கிலம் சரியா இருக்குமோ, இல்லையோ என்கிற தாழ்வு மனப்பான்மை தான்.
நானும் தமிழ் மீடியம்
என்னுடைய பள்ளி படிப்பு முழுக்க தமிழ் மீடியம். டில்லிக்கு வந்த போது, ஆங்கிலம் தட்டு தடுமாறி பேசி பிறகு, ஓரளவிற்கு சரியானது.
பிரபல ஆங்கில சேனலான 'என்டிடிவி'யில் பணியாற்றும் போது, 'உன்னுடைய உச்சரிப்பு, தென்னிந்தியர்கள் போல உள்ளது; சரிப்பட்டு வராது' எனக் கூறி, கேமரா முன்னால் என்னை நிற்க விடவில்லை.
சில மாதங்ளுக்குப் பிறகு நிலைமை மாறியது. என்ன முக்கிய வழக்காக இருந்தாலும் என்னைத்தான் கேமரா முன் நிற்க வைத்தனர்.
இந்தி தெரியாது போடா
'இந்தி தெரியாது போடா' என சொல்லியாகிவிட்டது. ஆங்கிலத்திற்கும், அந்த 'டி ஷர்ட்' தேவையா?
இதில் வேடிக்கை என்னவென்றால், நன்றாக ஆங்கிலம் பேசும் கன்னட அரசியல்வாதிகளின் மாநிலத்தில், இந்தி எதிர்ப்பு ஏதும் இல்லை; அனேக மக்கள், தேவையெனில் இந்தி பேசுவர்!
அ.வைத்தியநாதன் எழுத்தாளர், டில்லியில் பத்திரிகையாளராக பணியாற்றுகிறார்.
கோர்ட்டுகளில் வழக்காடும் மொழியே தமிழாகயிருக்க வேண்டுமென்று ஒற்றைக்காலில் நிற்கும் கூட்டத்திடம் போய் ஆங்கிலயறிவை வளர்த்துக்கொள் என்பது போல..