Load Image
Advertisement

முயன்றால் எதுவும் முடியும் சொல்கிறார் சுப்பிரமணியன்

உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை, குறுக்கும் நெடுக்குமாக பறக்கும் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களைப் பார்த்தாலே தெரியும்.அதிலும் சென்னையில் அதிகாலை காபி முதல் நள்ளிரவு குல்பி வரை எல்லாமே ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் அடுத்த பத்தாவது நிமிடத்தில் வீடு தேடி வருகிறது.
எவ்வளவு வேகமாகவும், அதிகமாகவும் டெலிவரி செய்கிறோமோ அந்த அளவிற்கு இதில் வருமானம் அதிகம் என்பதால் டெலிவரி ஊழியர்கள் தீயாய் பறப்பனர்.இவர்களின் வேகத்திற்கு ஈடுகொடுத்து சுப்பிரமணியன்,40 என்ற ஒரு மாற்றுத்திறனாளி ஒருவரும் உணவு டெலிவரி ஊழியராக வெற்றிகரமாக சென்னையில் வலம் வருகிறார்.

உலகின் ஒன்பாதவது இடத்திலும், இந்தியாவில் இரண்டாவது இடத்திலும் இருக்கும் ஜோமோட்டோ உணவு டெலிவரி நிறுவனத்தின் ஆயிரக்கணக்கான ஊழியர்களில் ஒருவரான சுப்பிரமணியன், பிறந்தது வளர்ந்தது எல்லாம் சென்னை கோடம்பாக்கம் சாமியார்மடம் பகுதியில்தான்.
சிறுவயதில் போலியோவால் இவரது இரண்டு கால்களும் பாதிக்கப்பட்டது,எட்டாவது வரை படித்தவர், அதன்பிறகு குடும்ப சுமையை தாங்க வேலைக்கு போக ஆரம்பித்தார்.மாற்றுத்திறனாளியான இவருக்கு வேலை கொடுப்பதில் நிறுவனங்கள் தயக்கம் காட்டவே சொந்தமாக சுண்டல் விற்பது முதல் டீ விற்பது வரை எல்லா தொழில்களும் செய்து வந்தார்.நண்பர் ஒருவர் மூலமாக உணவு டெலிவரி செய்யும் வேலை கிடைத்தது.
உன்னால் முடியுமா? என்று பலரும் கேட்டனர் ஆனால் என்னால் முடியும் என்று நிருபித்ததை அடுத்து இப்போது என்னைப் போலவே மேலும் சில மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த உணவு டெலிவரி செய்யும் வேலையை வழங்க நிறுவனம் முன்வந்துள்ளது.
சென்னை ஐஐடி.,மாணவர்கள் உருவாக்கிய 'நியோமோஷன்' மூன்று சக்கர மின்சார சைக்கிள் காரணமாக எரிபொருள் செலவு இல்லை, இந்த வாகனத்திற்கு தேவையான பணத்தில் பத்தில் ஒரு பங்கினை நாம் கொடுத்தால் போது நன்கொடையாளர்கள் புண்ணியத்தில் நமக்கு ஒரு நவீன மின்சார சைக்கிள் வாகனம் கிடைத்துவிடும்.
சென்னையைப் பொறுத்தவரை இப்போது குறிப்பிட்ட நேரம் என்று இல்லாமல் எல்லா நேரமும் யாராவது ஏதாவது கேட்டு வாங்கி சாப்பிட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள், அதிலும் வெள்ளி,சனி,ஞாயிறு கிழமைகளில் ஆர்டர்கள் குவியும்.
போட்டியான உலகம்தான் ஆனால் அன்பு மயமான உலககமும் கூட, எனக்கு சக ஊழியர்கள்,போக்குவரத்து போலீசார்,சம்பளம்தரும் நிறுவனம் மற்றும் அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து இறங்கிவந்து என்னிடம் டெலிவரி வாங்கிக்கொண்டு, டிப்ஸ்ம் கொடுத்து ஊக்கப்படுத்தும் வாடிக்கையாளர்கள் என எல்லோரும் நல்லவர்களாக இருக்கின்றனர்.
இதில் வரும் வருமானம் எனக்கு போதுமானதாக இருக்கிறது இந்த வருமானத்தில் என் காதல் மணைவி பானு,குழந்தைகளுடன் மன நிறைவாக வாழ்கிறேன்.என்ன செய்யலாம் என சோர்ந்து போயுள்ள மாற்றுத்திறனாளிகள் கொஞ்சம் என்னைப் போல மாற்றி யோசித்தால் நல்ல வாழ்க்கை பெறலாம் ஆலோசனை கேட்டால் சொல்ல தயராக இருக்கிறேன் எனும் நம்பிக்கை மனிதர் சுப்பிரமணியனின் போன் எண்:9380515758.

-எல்.முருகராஜ்.



வாசகர் கருத்து (1)

  • Anandan P - Chennai,இந்தியா

    வாழ்த்துகள் சார், உங்கள் விடா முயர்சிக்கு கிடைத்த வெற்றி…

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement