அதிகரிக்கும் சாலை ஆக்கிரமிப்பு பாரபட்சமின்றி அகற்ற கோரிக்கை
தாம்பரம், தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், சாலையோர ஆக்கிரமிப்புகள் என்பது நாளுக்குநாள் அதிகரித்தபடி உள்ளது.
அவ்வப்போது, ஆக்கிரமிப்புகளை அகற்றினாலும், அரசியல்வாதிகளின் தலையீடு காரணமாக, முழுமையாக அகற்ற முடியவில்லை.
கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம், குரோம்பேட்டை, நெமிலிச்சேரியை பிளஸ் 2 மாணவி ஒருவர், ராஜேந்திர பிரசாத் சாலை வழியாக சைக்கிளில் வீட்டிற்கு சென்றபோது, அரசு பேருந்து மோதி, பரிதாபமாக இறந்தார்.
இச்சம்பவத்தை தொடர்ந்து, ராஜேந்திர பிரசாத் மற்றும் சிட்லப்பாக்கம் பிரதான சாலை ஆகிய சாலைகளில் இருந்த ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றினர்.
அதன்பின், அப்படியே விட்டு விட்டனர். இதை பயன்படுத்தி, மீண்டும் ஆக்கிரமிப்பு அதிகரித்து விட்டது.
ராஜாஜி, காந்தி, சண்முகம், அப்துல் ரசாக், பல்லாவரம்- -குன்றத்துார், பல்லாவரம்- - திருநீர்மலை, சி.எல்.சி., ராதா நகர், தாம்பரம்- முடிச்சூர், கேம்ப் ரோடு- அகரம்தென், கக்கன் தெரு, முத்துலிங்கம் உள்ளிட்ட சாலைகளில் பெரும்பாலான கட்டடங்கள், மழைநீர் கால்வாயை முழுமையாக ஆக்கிரமித்துள்ளன.
எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவினர், இச்சாலைகளில் ஆய்வு செய்து, எவ்வித பாரபட்சமுமின்றி ஆக்கிரமிப்புகளை அகற்றி, வாகன ஓட்டிகள் நெரிசல் இன்றி சென்றுவர வழிவகை செய்ய வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!