மாமல்லபுரம்:மாமல்லபுரம், அண்ணா நகர் பகுதியினர், மின் தடை, மின்னழுத்தம் குறைவு போன்ற காரணங்களால், அடிக்கடி மின் வெட்டு ஏற்பட்டு பாதிக்கப்பட்டனர்.
இப்பாதிப்பை தவிர்க்க, ஐந்து ரதங்கள் சாலை பகுதியில், இரண்டு ஆண்டுகளுக்கு முன், 100 கி.வா., மின் மாற்றி அமைக்கப்பட்டது. அதன் பின், மின்சார வினியோகம் சரியானது.
ஆனால், மின் வாரிய நிர்வாகம், ஒரு மாதம் மட்டுமே அதை பயன்படுத்தியது. பின், மின் சாதனங்களை அகற்றி, வேறு பகுதிக்கு மாற்றியது. இதனால், அங்கு கம்பங்கள் மட்டும் வெறுமனே நின்றன.
இதனால், மின் வினியோகம் சிக்கலாகி, இப்பகுதி மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டனர். புதிதாக மின் மாற்றி அமைத்து, மின் வினியோகத்தை சீரமைக்க வலியுறுத்தினர்.
இதுகுறித்து, நம் நாளிதழில் நேற்று முன்தினம் செய்தி வெளியிடப்பட்டது. அதன் விளைவாக, மின் மாற்றி அகற்றப்பட்டு, வெறுமனே நின்ற கம்பங்களில், புதிய மின் மாற்றி அமைக்கும் பணியில், மின் வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!