Load Image
Advertisement

உத்தவ் தாக்கரே வழக்கு தீர்ப்பு கவர்னர்களுக்கு சரியான பாடம்!

மஹாராஷ்டிரா மாநிலத்தில், 2019ல் சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ்கட்சிகள் இணைந்து, 'மஹா விகாஸ் அகாடி' என்ற பெயரில் கூட்டணி அமைத்து, ஆட்சியை பிடித்தன.சிவசேனா கட்சியை சேர்ந்த உத்தவ் தாக்கரே முதல்வராக பதவி வகித்தார்.
இதன்பின், 2022ல் சிவசேனா கட்சியின் மூத்த தலைவரான ஏக்நாத் ஷிண்டே, தன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுடன் வெளியேறி, உத்தவ் தாக்கரேக்கு எதிராக போர்க்கொடி துாக்கியதால், சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பை எதிர்கொள்ளாமலேயே, முதல்வர் பதவியிலிருந்து விலகினார், உத்தவ் தாக்கரே.

இதையடுத்து, பா.ஜ., உடன் கூட்டணி சேர்ந்து, முதல்வரானார் ஏக்நாத் ஷிண்டே. பா.ஜ.,வைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் துணை முதல்வரானார். இந்நிலையில், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ், ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், 16 பேரை பதவி நீக்கம் செய்யும்படி, உச்ச நீதிமன்றத்தில், உத்தவ் தாக்கரே தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த, உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு, 'நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்கொள்வதற்கு முன்னதாகவே, உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்து விட்டதால், அவரை மீண்டும் முதல்வர் பதவியில் அமர்த்த முடியாது. அதேநேரத்தில், உத்தவ் தாக்கரே பெரும்பான்மையை இழந்து விட்டார் என, முடிவெடுப்பதற்கு, அப்போதைய கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியிடம் எந்த விதமான ஆதாரமும் இல்லை.
'இதுபோன்ற நிலையில், உத்தவ் தாக்கரே பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என, அவர் உத்தரவிட்டது தவறு. மேலும், உத்தவ்அரசுக்கு எதிராக, நம்பிக்கையில்லா தீர்மானம்தாக்கல் செய்யப்படாத நிலையில், கவர்னரின் விருப்பதற்கு ஏற்ப, சட்டசபை சபாநாயகர் செயல்பட்டதும் சரியல்ல' என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
இதன் வாயிலாக, கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியும், சபாநாயகர் ராகுல் நர்வேகரும், தவறான முடிவெடுத்ததாகவும், அதன் காரணமாகவே, உத்தவ் தாக்கரே அரசு கவிழ்ந்து, ஏக்நாத் ஷிண்டே ஆட்சி அமைக்கும் சூழ்நிலை உருவானதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, உத்தவ் தாக்கரேக்கு தார்மீக வெற்றி என்றாலும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு நீடிக்க,நீதிபதிகள் அனுமதி அளித்தது, பா.ஜ., கூட்டணிஅரசுக்கு பெரும் ஆறுதலாக அமைந்துள்ளது.
மேலும், 'உட்கட்சி பிரச்னையை தீர்ப்பதற்கு, சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் நடைமுறையை கவர்னர் பின்பற்றியது சரியான அணுகுமுறையல்ல. இந்த விஷயத்தில், மஹாராஷ்டிரா கவர்னராக இருந்தவரின் செயல்பாடு, அரசியல் சட்டத்திற்கு விரோதமானது' என்றும், அரசியல் சாசன அமர்வு சுட்டிக் காட்டியுள்ளது. இதன் வாயிலாக, எதிர்காலத்தில் இதுபோன்ற சூழ்நிலை உருவானால், கவர்னர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்றும், வழிகாட்டியுள்ளது.
அதேநேரத்தில், ஷிண்டே ஆதரவுஎம்.எல்.ஏ.,க்கள், 16 பேரை தகுதி நீக்கம் செய்யும் படி, உத்தவ் தாக்கரே தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க மறுத்த நீதிபதிகள், இதுதொடர்பாக, மஹாராஷ்டிரா சட்டசபை சபாநாயகர் தான், குறிப்பிட்ட காலகெடுவிற்குள் முடிவெடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர். இது, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசுக்கு நெருக்கடி தரும் விஷயமாகும்.
அதுமட்டுமின்றி, இந்த தீர்ப்பின் வாயிலாக, உச்ச நீதிமன்றம் இரு முக்கிய அம்சங்களை சுட்டிக் காட்டியுள்ளது. ஒன்று, கவர்னர்கள் அரசியல் சட்ட ரீதியான பதவி வகிப்பவர்கள். அவர்கள் தங்கள் அலுவலகத்தின் கண்ணியமும், நம்பகத்தன்மையும் பாதிக்கப்படும் வகையில் செயல்படுவதை தவிர்க்க வேண்டும் என்பதாகும்.
இரண்டாவது, ஆளும் கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள்உருவாகும் போது, அதுமட்டுமே, சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி கேட்பதற்கு போதுமான காரணமாக இருக்கக் கூடாது.
தகுந்த ஆதாரங்கள், போதிய காரணங்கள் இருந்தால் மட்டுமே, பெரும்பான்மையை நிரூபிக்கஉத்தரவிட வேண்டும். இதுபோன்ற பிரச்னைகளில், பாரபட்சமின்றி, அரசியல் சார்பற்ற முறையில் கவர்னர்கள் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. வரும் காலங்களில், இந்தத் தீர்ப்பை கருத்தில் கொண்டு, மாநில கவர்னர்கள் செயல்படுவர் என, நம்புவோமாக!



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement