Load Image
Advertisement

சீட்டாட்ட பணத்தை போலீசார் 'ஆட்டை' 10 சதவீத கமிஷன் கேட்டு லேடி ஆபீசர் சேட்டை!

கிருஷ்ணாம்பதி குளக்கரையில் வண்டியை நிறுத்தி விட்டு, சித்ராவும், மித்ராவும் நடைபாதையில் 'வாக்கிங்' போய்க் கொண்டிருந்தனர். குளத்தை முழுவதுமாக மூடியிருந்த ஆகாயத்தாமரைகளைப் பார்த்து விட்டு, ஆதங்கத்துடன் பேசினாள் சித்ரா...

''என்ன மித்து இது...பார்க்கவே படுசங்கடமா இருக்கு...கோடி கோடியா குளக்கரையில கொட்றாங்க...ஆனா 'ட்ரீட்மென்ட் பிளான்ட்' போட்டு, குளத்துல சாக்கடைத் தண்ணிய தடுக்குறதுக்கு ஒரு நடவடிக்கையும் எடுக்க மாட்டேங்கிறாங்க...!''

கொதிப்போடு பேசிய சித்ராவின் வார்த்தைகளை ஆமோதித்து, தன் பங்கிற்கு ஆரம்பித்தாள் மித்ரா...

''கட்டட அனுமதி, காண்ட்ராக்ட் எல்லாத்துலயும் யாரு வசூல் பண்றதுங்கிறதுல, ரெண்டு மினிஸ்டருக்கும் இடையில ரொம்ப நாளா 'வார்' நடந்துட்டு இருந்துச்சு...இப்போ, 'பிப்டி பிப்டி'ன்னு பிரிச்சுக் கொடுத்துட்டாங்க...அவுங்க வசூல் பண்றதைப் பார்ப்பாங்களா... குளத்துல சாக்கடை கலக்குறதைப் பத்திக் கவலைப்படுவாங்களா?''

கேள்வியோடு நிறுத்திய மித்ராவுக்கு பதிலளித்தாள் சித்ரா...

''ரெண்டு மினிஸ்டரும் சேர்ந்து, சிட்டிக்குள்ள நிறைய வேலைகளைத் துவக்கி வச்சுட்டுப் போன ரெண்டே நாள்ல, கார்ப்பரேஷன் ஆபீசர்கள் நிறைய்யப்பேரை துாக்கி அடிச்சிருக்காங்க...மண்டலத் தலைவர்கள் சில பேரு போட்டுக் கொடுத்ததாலதான், கிழக்கு ஏ.சி.,மத்திய மண்டல ஆபீசர்களை மாத்திருக்காங்க!''

''யாரை எங்க மாத்துனாலும் ஒரு சில ஆபீசர்கள்தான் வேலை பாக்குறாங்க...மத்தவுங்க சம்பாதிக்கிறதையே வேலையா வச்சிருக்காங்க... போன வாரம் அடிச்ச கோடை மழையில, அவிநாசி ரோடு மேம்பாலம், லங்கா கார்னர்ல பெரிய அளவுல வெள்ளம் தேங்கிருச்சு. ஆனா சில ஆபீசர்கள் தீயா வேலை பாத்து, அப்பப்போ எல்லாத்தையும் 'க்ளியர்' பண்ணீட்டாங்க!''

''ஆனா மெயின் ஏரியாவுலதான் இந்த வேலை வேகமா நடக்குது...போன வாரம் ஒரு நாள் செம்ம மழை அடிச்சப்போ, நைட் பத்தரை மணிக்கு, திருச்சி ரோடு சங்கனுார் பள்ளத்துல அடைப்பாகி, கழிவுத்தண்ணி எல்லாம் ரோட்டுல ஓட ஆரம்பிச்சிருச்சு...அந்நேரத்துல யாருமே இல்லை. ஒரே ஒரு சேனிட்டரி இன்ஸ்பெக்டர் மட்டும், பொக்லைன் வச்சு, ராத்திரி 12 மணி வரைக்கும் தனியா அதை சரி பண்ணிருக்காரு!''

''உண்மைதான்க்கா...வேலை பாக்குறது ஒருத்தரு... சம்பாதிக்கிறது ஒருத்தரு...இப்பிடித்தான் பள்ளிக் கல்வித் துறையிலயும், ஆயிரம் ரூபா சம்பளத்தைக் கொடுத்துட்டு, காலேஜ் ஸ்டூடண்ட்கள்ட்ட ஏகப்பட்ட வேலை வாங்குறாங்க!''

மித்ரா முடிப்பதற்குள் குறுக்கிட்ட சித்ரா, ''புரியலை மித்து! தெளிவாச் சொல்லு!'' என்று சொல்ல, அதைப் பற்றி விளக்கினாள் மித்ரா...

''அக்கா! நம்ம மாவட்டத்துல 6,500 இல்லம் தேடி கல்வி மையங்கள் இருக்கு. அங்க சாயங்காலம் குழந்தைகளுக்கு டியூஷன் எடுக்க, மாசம் ஆயிரம் ரூபா சம்பளத்துக்கு தன்னார்வலர்களைப் போட்ருக்காங்க. அதுல பெரும்பாலானவுங்க காலேஜ் ஸ்டூடண்ட்ஸ்தான்...இவுங்களுக்கு மாணவர் சேர்க்கையிலயிருந்து பல ஸ்கூல் வேலைகளையும் சீனியர் எச்.எம்., சில பேரு திணிக்கிறாங்களாம்!''

''மாசச்சம்பளம்னதும் ஞாபகம் வந்துச்சு...இப்போ ஆளும்கட்சி கவுன்சிலர்கள், நிர்வாகிகளுக்கு மாசச்சம்பளம் மாதிரி கொடுத்துர்றாங்களாம்... அதனால டாஸ்மாக், பில்டிங் அப்ரூவல், டெண்டர் எதுலயும் அவுங்க தலையிடக்கூடாதாம்... அதெல்லாம் கரூர்க்காரங்களே கவனிச்சுக்குவாங்க. இதுல மாவட்டச் செயலாளர்களுக்குதான் பெரிய சம்பளமாம்... டீசல், பேட்டாவெல்லாம் உண்டாம்!''

''ஓஹோ...அதனாலதான் கட்சி வேலைன்னா யாருமே இப்போ காசில்லாம காலை நகத்துறதே இல்லை!''

''உண்மைதான்...தொண்டாமுத்துார் பக்கத்துல காட்டுக்குள்ள தீப்பிடிச்சப்போ, அந்த ஏரியாவுல இருக்குற 'மாவட்டம்', கட்சி நிர்வாகிகளைக் கூப்பிட்டு, 'ஒரு நுாறு பேரை ரெடி பண்ணுங்க. பாரஸ்ட் ஆளுங்களோட சேர்ந்து தீயை அணைக்கப் போவோம்'னு ஆர்வமாச் சொன்னாராம்...அதுக்கு அவுங்க அதையும் அந்த கரூர்க்காரங்களை வச்சே செஞ்சுக்கோங்கன்னு பொட்டுல அடிச்சது மாதிரி சொல்லீட்டாங்களாம்!''

''இந்த மாசச்சம்பளத்தை வாங்குறதுக்கு எதுக்குதான் இவ்ளோ காசு கொடுத்து கட்சிப் பதவியை வாங்கத் துடிக்கிறாங்கன்னு தெரியலை...அன்னூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பதவியை கைப்பத்துறதுக்குக் கடுமையான போட்டி நடக்குதாம்...பல பேரு சென்னையில 'கேம்ப்' அடிச்சு, ஆள் பிடிச்சிட்டு இருக்காங்க...அதுல ஒருத்தரு, 50 லட்ச ரூபாயோட போயிருக்கார்ங்கிறதுதான் ஹைலைட்!''

இதைச் சொல்லி முடித்த மித்ரா, சிறிது இடைவெளி விட்டு மீண்டும் தொடர்ந்தாள்...

''கட்சிக்காரங்களைக் கவனிக்கிறது, காப்பாத்துறதுன்னா வேலுமணியை விட்டா ஆளே இல்லைக்கா... அவரோட ஆதரவாளர் ஒருத்தர், அரசு பொருட்காட்சியில கடை கேட்டு, சம்பந்தப்பட்ட ஆபீசரைப் போய்ப் பாத்திருக்காரு. அதுக்கு அவரு, 'நீங்க வேலுமணி ஆளுதான...கடை தர முடியாது'ன்னு துரத்தி விட்டுட்டாராம். இத்தனைக்கும் அந்த ஆபீசர், அ.தி.மு.க.,ஆட்சியிலயும் நல்லா 'வாழ்ந்தவர்'தான்!''

''ஓ...அந்த அண்ணாவா...அதுக்கு வேலுமணி என்ன பண்ணுனாரு?''

''தன்னோட கட்சி எம்.எல்.ஏ.,க்களோட போயி, கலெக்டர்ட்ட மனு கொடுக்கப் போனப்போ, கலெக்டருக்கு முன்னாடியே வச்சு, அந்த ஆபீசரை நார் நாரா கிழிச்சு எடுத்துட்டாராம்...கலெக்டர் அதை 'நோட்' பண்ணிக்கிட்டாரு...என்ன செய்யப்போறார்ன்னு தெரியலை!''

''கட்சிக்காரங்களா இருந்தாலும் கடைக்கு 10 ஆயிரம் ரூபாய் கொடுத்தால்தான், எக்ஸிபிஷன்ல கடைன்னு சொல்லி, முதல்ல பேரம் பேசிருக்காங்க...பயங்கர எதிர்ப்பு வந்ததால, அஞ்சாயிரம்னு பேசி வாங்கிருக்காங்க...காசை வாங்கிட்டு, இல்லீகலா நிறைய கடைகளை வைக்க விட்ருக்காங்க...ரிப்போர்ட்டர்ஸ் பேரை வச்சும் துறைரீதியாக செம்ம கலெக்சன் நடந்திருக்குன்னு குரூப்கள்ல மெசேஜ் ஓடுது!''

''மெசேஜ்ன்னதும் பி.ஜே.பி., மாவட்டத்தலைவரைப் பத்தி ஞாபகம் வந்துச்சு...இவர் வந்த பிறகு, மாவட்டத்துல இருந்த ரெண்டு கோஷ்டி மூணாயிருச்சு...அதுல ஒரு கோஷ்டிக்கு, முழு நேர வேலையே, இவரைப் பத்தி தாறுமாறா மெசேஜ் போட்டு கலாய்க்கிறதுதானாம். அதை ஸ்கிரீன் ஷாட் எடுத்தும் அனுப்புறாங்களாம். அதுல அவருக்கு நெஞ்சுவலியே வந்து ட்ரீட்மென்ட் எடுத்திருக்காரு!''

''இப்பிடி டார்ச்சர் பண்ணியே, பதவியை ராஜினாமா பண்ண வச்சிருவாங்களோ?''

''டார்ச்சர்னதும் இன்னொரு மேட்டர் ஞாபகம் வந்துச்சு...ஏர்போர்ட் விரிவாக்கத்துக்கு நிலமெடுக்குற வேலை முடியுற மாதிரி இருக்காம்.

இன்னும் 60 ஏக்கர்தான் எடுக்கணுமாம்...ஆனா இருகூர் ஏரியாவுல இருக்குற ஒரு லேடி ரெவின்யூ ஆபீசர், இழப்பீட்டுத் தொகையில, 10 பர்சண்டேஜ் கேட்டு, டார்ச்சர் பண்ணி, கலெக்டரோட 'அவார்டு பாஸ்' நகலைத் தர மாட்டேங்கிறாங்களாம்!''

''அச்சச்சோ! அது இல்லைன்னா, பாங்க்ல இழப்பீட்டுத் தொகைக்கு 20 பர்சண்டேஜ் 'டிடிஎஸ்' பிடிச்சிருவாங்களே...!''

''யெஸ்....அதை வச்சுத்தான் மிரட்டி, 10 பர்சண்டேஜ் அமவுண்ட்டை ரொக்கமாக் கேக்குறாங்களாம்... இதனாலேயே அந்த ஏரியாவுல இன்னும் 25 ஏக்கரை எடுக்கமுடியாம இழுத்துட்டு இருக்குதாம்!''

மித்ரா சொல்லிக் கொண்டிருக்கும்போது, ரோட்டில் கடந்து சென்ற போலீஸ் ஜீப்பைப் பார்த்த சித்ரா, அடுத்த மேட்டரைத் தொடர்ந்தாள்...

''மித்து! ரவுடிகளுக்கு உதவுன போலீசை அரெஸ்ட் பண்ணாங்களே...அவர் மேல ஏகப்பட்ட புகார் குவியுது. நம்ம ஜி.எச்.,அவுட் போஸ்ட்ல அவர் வேலை பார்த்தப்போ, ஏகப்பட்ட டூ வீலர் திருடு போயிருக்கு... விசாரிச்சதுல இந்த வண்டிகளைத் திருட, 'ஸ்கெட்ச்' போட்டுக் கொடுத்ததே அந்த போலீஸ்தானாம்...டாக்டர் ஒருத்தரோட காஸ்ட்லி பைக்கை துாக்கவும் இவர்தான் ஐடியா கொடுத்தாராம்!''

''ரூரல் போலீஸ் அதை விட மோசம்...சூலுார், கருமத்தம்பட்டி ஏரியாக்கள்ல கஞ்சா கொடிகட்டிப் பறக்குது...அதுலயும் பள்ளப்பாளையம், பாப்பம்பட்டி பிரிவுல இருக்குற பேக்கரிகள்ல டீ குடிக்க வர்றது மாதிரி பொட்டலங்களை கை மாத்திட்டுப் போறாங்க. கஞ்சா வாங்குற பெரும்பாலான பசங்க கார்லதான் வர்றாங்க. சூலுார் போலீசுக்கு வலுவா மாமூல் ஓடுது!''

''போன வாரம் மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோவில் ரோட்டுல, ஒரு சமுதாயத்துக்காரங்க மூணு நாளு திருவிழாக் கொண்டாடிருக்காங்க... விருந்தோட, குரூப் குரூப்பா காசு வச்சு சீட்டாடிருக்காங்க... தகவல் தெரிஞ்சு வந்த போலீஸ் எல்லாரையும் விரட்டி ஒரு லட்ச ரூபாய்க்கு மேல பறிமுதல் பண்ணிட்டு, கேஸ்ல 31 ஆயிரம் ரூபாய்தான் கணக்குக் காமிச்சிருக்காங்க!''

''செங்கல் சூளைகள் கேசுல, நம்ம மாவட்டத்துல இருக்குற சூளைகளை எல்லாம் மூடி, மின் இணைப்பைத் துண்டிக்கச் சொல்லி, கோர்ட்ல உத்தரவு போட்டாங்கள்ல... தடாகம், பெரியநாயக்கன்பாளையம், காரமடை எல்லா ஏரியாவுலயும் அதைப் பண்ணீட்டாங்க...ஆனா பேரூர் பக்கத்துல கரடிமடை, வடிவேலம்பாளையம், ஆலாந்துறை ஏரியாவுல ஆயில் இன்ஜின் உதவியோட செங்கல் சூளைகள் ஜோரா நடக்குது!''

மித்ரா சொல்லும்போதே, 'வாக்கிங்' கூட்டம் அதிகமாகவே, இருவரும் பேச்சை நிறுத்தி விட்டு, வேகமாக நடக்க ஆரம்பித்தனர்.வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement