இந்த வருட ஐபிஎல்லில் மொத்தம் 74 போட்டிகள் இதில் 90 சதவீதம் போட்டிகள் நடந்துவிட்டன இன்னும் 10 சதவீதம் போட்டிகள் மட்டும் நடக்கவேண்டும்
ஒவ்வொரு மேட்சும் ஐந்து மணி நேரம் நடக்கிறது என்று வைத்துக் கொண்டால் 370 மணி நேரம் இதற்கு இதற்கு என்றே செலவழிக்கப்டுகிறது.
ஒரு மைதானத்திற்கு 50 ஆயிரம் பேர் என்று கணக்கு வைத்து பார்க்கும் போது ஐந்து மைதானத்தில் மட்டும் 2 லட்சத்து 50 ஆயிரம் இளைஞர்களின் மனித சக்தி இதற்கு விரையமாக்கப்பட்டுள்ளது.
டி.வி.,மூலம் பார்ப்பவர்கள் எண்ணிக்கையோ கோடிக்கணக்கில் இருக்கும் அந்த கோடிக்கணக்கான இளைஞர்கள் இளைஞிகள் பொதுமக்களின் பொன்னான நேரம் என்பது பல மடங்காகும்.இதில் பல இளைஞர்கள்மேட்ச் பார்ப்பதற்காக வெளியூரில் இருந்து பஸ்,ரயில் பிடித்து தலைநகர் வருவார்கள் அந்த நேர விரையம் தனி
ஒவ்வொரு நாளும் நாங்கள் விளையாட்டிற்கு சிறிதளவு நேரத்தை செலவழிப்போம், ஆனால் உங்களைப் போல ஒரு நாளையே இதற்காக செலவழிக்கமாட்டோம், இந்த விளயைாட்டு எங்கள் நேரத்தையும், இளைய சக்தியையும், எனர்ஜியையும் உறிஞ்சுவதை எங்கள் நாட்டு இளஞைர்கள் புரிந்து கொண்டதால் எங்கள் நாட்டில் யாரும் கிரிக்கெட் விளையாடுவது இல்லை என,ஏன்? உங்கள் நாட்டில் கிரிக்கெட் விளையாடப்படுவதில்லை என்ற கேள்விக்கு சீன அதிபர்அளித்த பதில் இது.
இப்படி வருடத்தில் இரண்டு மாத காலத்திற்கு ஐபிஎல் கிரிக்கெட் மோகமே இளைஞர்களை ஆட்டிப்படைக்கிறது
கலை கலாச்சாரம் இன்னபிற விளையாட்டுக்கள் மற்றும் பொழுது போக்கு அம்சங்கள் என அனைத்தையும் இந்த ஐபிஎல் கபளீகரம் செய்துவிடுகிறது.பலரது வாழ்வாதாரம் பாழாகிறது.
கோடிககணக்கில் விலை போனது மட்டுமின்றி தனது கண்,காது,மூக்கு தவிர மற்ற எல்லா இடங்களிலும் விளம்பரங்களை சுமந்து கொண்டு, அதற்கு தனியாக பணம் கறந்து கொள்ளும் கிரிக்கெட் வீரர்களின் மீது இந்த இளைஞர்கள் ஏன் இப்படி மோகம் கொள்கின்றனர் என்பதும் புரியாத புதிராக உள்ளது.
ஒரு உயரம் தாண்டும் வீரர் உதாரணத்திற்கு இரண்டு மீட்டர் துாரம் தாண்டுகிறார் என்றால் அவர் அடுத்தடுத்து நடைபெறும் போட்டிகளிலும் இரண்டு மீ்ட்டர் உயரத்திற்கு சற்று ஏறக்குறையத்தான் தாண்டுவாரே தவிர ஒரு மீட்டர் என்றோ தரைமட்டத்திற்கு என்றோ வரமாட்டார் ஆனால் கிரிக்கெட் அப்படியில்லை, கடந்த மேட்சில் சதம் அடித்து 'மேன் ஆப் தி மேட்ச்' என லட்சங்களில் செக் வாங்கிக் கொள்ளும் வீரர் அடுத்த மேட்சில் ரன் எதுவும் எடுக்காமல் 'டக்' அவுட்டாவார், கேட்டால் அதுதான் கிரிக்கெட் அதுதான் திரில் என்பர்.
பந்தை அடித்தாலும்,பிடித்தாலும் மைதானத்தின் நான்கு மூலைகளிலும் நின்று டான்ஸ் ஆடும் சியர்ஸ் கேர்ள்ஸ் ,கேலரியில் இருந்தபடி கும்பல் கும்பலாய், குடும்பம் குடும்பமாய் நடனமாடுபவர்களைப் பார்த்தால் நடப்பது விளையாட்டல்ல பொழுது போக்கே என்பது புரிபடும்.
மைதானம் முழுவதையும் மஞ்சள் பனியனால் நிறைத்திருக்கும் ரசிகர்களுக்கு, சென்னை சூப்பர் கிங்ஸ் ஜெயிப்பது தோற்பது பற்றி கவலையில்லை, அவர்களுக்கு பிரியமான சிஎஸ்கே கேப்டன் தோனி மட்டையுடன் வந்து ஹெலிகாப்டர் ஷாட் மூலமாக இரண்டு சிக்ஸர் அடித்தால் போதும் ஜென்மம் சபால்யம் பெற்றுவிடுவர், இதற்காக இரண்டாயிரத்து ஐநுாறு ரூபாய் டிக்கெட்டை பிளாக்கில் பத்தாயிரம் ரூபாய் கொடுத்து வாங்கவும் தயங்கமாட்டார்கள்.
தோனி விளையாட வரவேண்டும் என்பதற்காக நன்றாக விளையாடிக்கொண்டு இருக்கும் என்னை அவுட்டாக வேண்டும் என்று கூட ரசிகர்கள் கூக்குரலிடுவதாக தோனிக்கு முன் களமிறங்கும் ஜடேஜா வருத்தத்துடன் பதிவிட்டிருக்கிறார் என்றால் என்னவென்று சொல்வது.
நாளாக நாளாக அதிகரித்துவரும் இந்த ஐபிஎல் கிரிக்கெட்டின் மீதான மோகம் தணியவேண்டும்,தணியுமா?
-எல்.முருகராஜ்
உண்மை, யாரலும் மறுக்கமுடியாது. அரசு இதன் விளைவை ஆராய்ந்து தகுந்த முடிவை எடுக்கவேண்டும், ஏனென்றால் இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்கள் கையில் .....