தலைநகர் டில்லி உள்ளிட்ட பல மாநிலங்களில், வெறுப்புணர்வை துாண்டும் வகையிலான பேச்சுகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, பொதுவெளியில் சிலர் பேசும் பேச்சுகள், ஜாதி, மதம் மற்றும் அரசியல் ரீதியாக மோதல்களை துாண்டும் வகையில் அமைந்து விடுகின்றன என்பதால், இத்தகைய வெறுப்பு பேச்சுகளில் ஈடுபடுவோர் மீது, வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கும்படி, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில், பத்திரிகையாளர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை சமீபத்தில் விசாரித்த உச்ச நீதிமன்றம், 'வெறுப்புணர்வை துாண்டும் வகையிலான பேச்சுக்கு எதிராக புகார் தரப்படவில்லை என்றாலும், அதற்காக காத்திருக்காமல், உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும்' என, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. வழக்குப் பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டால், நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும் என்றும், எச்சரிக்கை விடுத்துள்ளது.
சமீப காலங்களாக, மதங்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சுகள் அதிகரித்து, நாட்டின் மதசார்பற்ற கட்டமைப்பையே சீர்குலைக்கும் வகையிலான நிகழ்வுகள் நடைபெற்று வருவதை கவனத்தில் கொண்டு, உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. வெறுப்பு பேச்சு தொடர்பாக, உச்ச நீதிமன்றம் இவ்வளவு அதிருப்தி தெரிவித்திருப்பதும், இதுவே முதல் முறை.
நம் அரசியல் சட்டத்தின் ௧௯(௧) (ஏ) பிரிவானது, பொதுமக்கள் அனைவருக்கும், பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரத்தை வழங்குகிறது. அதே நேரத்தில், ௧௯ (௨) பிரிவானது, பேச்சு சுதந்திரம் விஷயத்தில், ஏழு அம்சங்கள் அடிப்படையில் தகுந்த கட்டுப்பாடுகள் விதிக்கவும், அவற்றை மீறுவோர் மீது, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவும் அதிகாரம் வழங்குகிறது.
அதாவது, நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு எதிராக பேசுவது, அன்னிய நாடுகள் உடனான உறவை சீர்குலைக்கும் வகையிலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும், நீதிமன்றங்களை அவமதிக்கும் வகையிலும் பேசுவது போன்றவை, வெறுப்புணர்வை துாண்டும் பேச்சுகளாக கருதப்படும். அப்படி பேசுவோர் மீது, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க முடியும் என்பதே, இதன் அர்த்தம்.
வெறுப்பு பேச்சு, இப்படித்தான் இருக்கும் என, எந்த வரையறையும் கிடையாது. அதே நேரத்தில், அரசியலோடு மதத்தை தொடர்புப்படுத்தி பேசும் போதும், மக்களில் ஒரு பிரிவினரின் ஆதரவை பெறுவதற்காக, அரசியல்வாதிகள் மற்றொரு பிரிவினரை விமர்சிக்கும் போதும் சர்ச்சைகளும், மோதல்களும் உருவாகின்றன.
அத்துடன், வெறுப்புணர்வை துாண்டும் வகையில் பேசுவோருக்கு எதிராக, இந்திய தண்டனை சட்டப்படி நடவடிக்கை எடுப்பதிலும், பாரபட்சமான அணுகுமுறையை பல மாநில அரசுகள் பின்பற்றுகின்றன. இது தடுக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்திலும், வெறுப்பு பேச்சு தொடர்பாக கடுமையான உத்தரவை, உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
பேச்சு சுதந்திரம் என்பது, ஆரோக்கியமான விவாதங்கள் மற்றும் அறிவார்ந்த உரையாடல்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையிலான கருத்துகளை வெளிப்படுத்துவதாகும். ஒருவர் தன் பேச்சுரிமையை பயன்படுத்தியதற்காக, அவர் மீது வழக்குத் தொடர முடியாது. அதேநேரத்தில், பிரிவினையை துாண்டும் வகையிலான பேச்சுகள், சமூக ஒற்றுமையை சீர்குலைப்பதோடு, வன்முறைக்கும் வழிவகுக்கும் என்பதால், அதற்கு தண்டனை வழங்க வேண்டியது அவசியமாகும்.
மதம், இனம், பாலினம் மற்றும் பாலியல் ரீதியான பேச்சுகள், ஒரு தனிப்பட்ட நபரையோ அல்லது ஒரு பிரிவினரையோ விமர்சிக்கும் வகையில் அமைந்தால், அவை வெறுப்புப் பேச்சுக்களாக கருதப்பட வேண்டும் என, ஐ.நா., சபையின் செயல்திட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதை, மாநில அரசுகள் பின்பற்ற வேண்டியது அவசியமாகும்.
எது எப்படியோ, வெறுப்பு பேச்சுக்களுக்கு எதிராக, புகார் தரப்படவில்லை என்றாலும், அந்தப் பேச்சால் பாதகமான விளைவுகள் ஏற்படும் என கருதினால், போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு வரவேற்கத்தக்கதே.
அதேநேரத்தில், அரசியல் எதிரிகளை பழிவாங்க, இந்த உத்தரவை ஆளுங்கட்சியினர் தவறாக பயன்படுத்தவும் வாய்ப்பு உள்ளது. அதுவும் தடுக்கப்பட வேண்டும். அதற்கேற்ற வகையிலான, சில உத்தரவுகளையும் உச்ச நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும் என்பதே, மக்களின் எதிர்பார்ப்பு.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!