Load Image
Advertisement

ஆளும்கட்சி கவுன்சிலர்களுக்கு ஆளுக்கொரு 'கவர்' பரிசு... அதுக்கு முன்னாடி நடந்த சண்டைதான் அதைவிட பெருசு!

மருதமலை கோவிலுக்குச் செல்வதற்காக, காந்திபுரத்தில் காலியாக இருந்த டவுன்பஸ்சில் சித்ராவும், மித்ராவும் அமர்ந்திருந்தனர். பக்திப்பரவசமாக பட்டையடித்துக் கொண்டு ஏறிய ஒரு பக்தரைப் பார்த்ததும், மித்ராதான் ஆரம்பித்தாள்...

''அக்கா! மருதமலை அடிவாரத்துல விபூதி, சந்தன வியாபாரத்துல ஆரம்பிச்சு, ஆளும்கட்சியில 'மாவட்டம்' வரைக்கும் வளர்ந்த அதிபதி, இப்போ அந்த ஏரியாவுல சூப்பர் கிராண்டா ஒரு ஓட்டல் ஆரம்பிச்சிருக்காரு தெரியுமா?''

மித்ராவின் கேள்விக்கு நிதானமாய் பதில் சொன்னாள் சித்ரா...

''அதுவும் தெரியும்...பொண்ணு பேர்ல ஆரம்பிச்சிருக்கிற அந்த ஓட்டல்ல 'பார்' வைக்கிறதுக்கு அவர் செலவழிச்சிருக்கிற தொகையும் தெரியும்...!''

சித்ரா முடிக்கும் முன், மித்ரா குறுக்கிட்டுப் பேசினாள்...

''அதெல்லாம் தெரியும்...அவரை தாமரைக் கட்சிக்கு துாக்குறதுக்கு எல்லா ஏற்பாடும் நடக்குதாம். இந்த மலைகிட்ட அந்த மலை பேசிட்டாராம். பொண்ணுக்கு மேயர் பதவி தரலை; இருந்த மாவட்டப் பதவியையும் பறிச்சிட்டாங்கன்னு கடும் விரக்தியில இருக்குறதால, அவரும் போறதுக்கு வாய்ப்பிருக்குன்னு அவரோட ஆதரவாளர்களே பேசிக்கிறாங்க!''

''ஆனா நம்ம மாவட்ட மினிஸ்டர், அவ்வளவு சீக்கிரத்துல விட்ற மாட்டாரே...!''

''கரெக்டா சொன்னீங்க அக்கா...போன வாரம் சனிக்கிழமை அவரோட வீட்டுல ஒரு முக்கியமான மீட்டிங் நடந்திருக்கு. தி.மு.க.,கவுன்சிலர்களை, தனித்தனியா பார்த்துப் பேசிருக்காரு. அவர்ட்ட கவுன்சிலர்கள் பயங்கரமா கொந்தளிச்சிருக்காங்க!''

''எதுக்கு...எதுவும் சம்பாதிக்க முடியலைன்னா...?''

''அதுக்கும்தான்...அதை விட முக்கியமான விஷயம்...மேயர், துணை மேயர், மண்டலத் தலைவர்கள், நிலைக்குழுத் தலைவர்கள் யாருமே எங்களை மதிக்கிறதில்லை...அதனால இந்த பதவிகளை எல்லாம் சுழற்சி முறையில, மாத்தி மாத்திக் கொடுக்கணும்னு சொல்லிருக்காங்க!''

''அப்பிடிப் போடு அருவாள...!''

''கவுன்சிலர்களை அனுப்பிட்டு, மேயர், துணை மேயர், மண்டலத் தலைவர்கள் எல்லாரையும் தனியா வச்சுக் கூட்டம் நடத்துனாராம்... அப்போ ஒரு மண்டலத் தலைவிக்கும், மேயருக்கும் நேருக்கு நேரா வாக்குவாதமாகி, ரொம்ப மோசமா மாத்தி மாத்தித் திட்டிக்கிட்டாங்களாம்...ரெண்டு பேரையும் மினிஸ்டர்தான் சமாதானப்படுத்தி அனுப்பி வச்சிருக்காரு!''

''சமாதானமாயிட்டாங்களா...?''

''இல்லைக்கா...அமைச்சர் வீட்டு வாசல்லயும் ரெண்டு பேருக்கும் இடையில சண்டை நடந்துச்சாம்... மினிஸ்டர் நொந்தே போயிட்டாராம்...அவர் நொந்து போனாலும் அன்னிக்கு அவரைப் பார்த்த கவுன்சிலர்கள் எல்லாரும், ரொம்ப குஷியாத்தான் அங்கயிருந்துதிரும்பிருக்காங்க!''

''ரீசன்...!''

''மீட்டிங்ல யாருமே எதிர்பாராத விதமா, கவுன்சிலர்கள் எல்லாருக்கும் ஒரு கவர் போட்டுக் கொடுத்தாங்களாம்... அதுல ஒரு லட்சம் ரூபா இருந்துச்சாம்...சிட்டியம்மாவுக்கு 10, மண்டலங்கள், நிலைக்குழுத் தலைவர்களுக்கு அஞ்சு, மூணுன்னு கொடுத்திருக்காங்க. இனிமே கார்ப்பரேஷன்ல 50 பர்சன்டேஜ் வேலை, 'பொறுப்புக்கு' ஒதுக்கிட்டதால, மாசமாசம் இந்த மாமூல் வரும்னு, கவுன்சிலர்கள் கொண்டாட்டமா பேசிக்கிறாங்க!''

''அவரு எவ்வளவு வேலை எடுத்தாலும் சரி...இவுங்க கவர்மென்ட் வந்தப்போ, சிட்டியில ரோடெல்லாம் மோசமா இருக்குன்னு, முதல்வர்ட்ட சிறப்பு நிதி வாங்கி, பூமி பூஜையெல்லாம் போட்டாங்களே...அந்த ரோடு வேலைகளே இன்னும் நடக்காம இருக்கு...முதல்ல அந்த ரோடுகளைப் போட ஏற்பாடு பண்ணுனா நல்லாருக்கும்னு, உடன்பிறப்புகளே புலம்புறாங்க!''

சித்ராவின் கருத்தை ஆமோதித்த மித்ரா, சிரித்துக் கொண்டே தொடர்ந்தாள்...

''மித்து! போன வாரம் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, கலெக்டராபீஸ்ல ரிவியூ மீட்டிங் நடத்திருக்காரு. அப்போ ஸ்டாக் பத்தி அவர் கேட்டதுக்கு, சிவில் சப்ளைஸ் ஆபீசர் பதிலே சொல்ல முடியாம திணறிருக்காரு...லட்சக்கணக்குல சாக்குகள் ஏலம் விடாம இருக்குன்னு சொன்னதும், மினிஸ்டர் கொந்தளிச்சிட்டாராம்!''

''ஏலம் விடாம இருக்கிறதுக்கு என்ன சாக்கு சொன்னாராம்?''

''அது தெரியலை...ஆனா மினிஸ்டர் கடுப்பாகி, 'நீங்க ஏலம் விடுறதுக்குள்ள சாக்கெல்லாம் இத்துப் போயிரும்'னு கிழிச்சிருக்காரு. கடைசியில, லோக்கல் பொறுப்பு மினிஸ்டர்ட்ட ஆலோசனை பண்ணிட்டு, புது ரேஷன் கடைகளை ஆரம்பிக்க, கலெக்டருக்கே அதிகாரம் கொடுத்துட்டாங்களாம். அதனால புதுசா 100 ரேஷன் கடைகளைத் திறக்கப் போறாங்களாம்!''

''இதுவும் ஒரு மினிஸ்டர் மேட்டர்தான்...பாரஸ்ட் மினிஸ்டர் மதிவேந்தன், போன வாரம் கோவை குற்றாலம், சாடிவயல்ல ஆய்வு பண்ணுனார்ல...அப்போ அவரைப் பார்க்க, கட்சிக்காரங்க ஏகப்பட்ட பேரு வந்திருக்காங்க. சால்வை போட்டு, போட்டோ எடுத்துக்கிட்டாங்க!''

''இது வழக்கமா நடக்குறதுதான மித்து?''

''அப்புறம் நடந்ததைக் கேளுங்க..அங்க மினிஸ்டரும், பாரஸ்ட் ஆளுங்களுக்கும் சாப்பாடு ஏற்பாடு பண்ணிருக்காங்க...ஆனா மினிஸ்டரைப் பார்க்க வந்த உடன்பிறப்புகள் எல்லாம் சாப்பிட்டு, சட்டியைக் காலி பண்ணிட்டுப் போயிட்டாங்க. கடைசியில பாரஸ்ட் ஆளுங்க பல பேரு பட்டினிதான் கிடந்தாங்களாம்!''

சாப்பாட்டைப் பற்றிப் பேசிக்கொண்டே, பாட்டிலில் இருந்த ஜூசை சித்ராவிடம் கொடுத்தாள் மித்ரா. அதைச்சுவைத்துக் கொண்டே, அடுத்த மேட்டரை ஆரம்பித்தாள் சித்ரா...

''இன்னொரு மினிஸ்டர் மேட்டர் மித்து...நம்ம ஊருல ஸ்டார் ஓட்டல்ல நடந்த நிகழ்ச்சிக்கு, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் வந்தார்ல...அப்போ அவருக்கு பிளாஸ்டிக் பாட்டில்ல தண்ணி வச்சிருந்தாங்களாம். அதனால குடிக்கிற தண்ணியே வேண்டாம்னு சொல்லிட்டாராம்...!''

''வசூல்னதும் வேற ஒரு மேட்டர் ஞாபகம் வந்துச்சு மித்து...வடக்கு தாலுகா ஆபீஸ்ல சர்வே வேலை பாக்குற ஒருத்தரு, வசூல் பண்ணிட்டு சோப்புப் போட்டுக் கை கழுவுறதைப் பேசுனோமே...அவரைப் பத்தி, பத்திரிக்கையில இனிமே செய்தி வராதுன்னு சொல்லி, அதே ஆபீஸ்ல வலம் வர்ற உக்கடத்தைச் சேர்ந்த ஒரு புரோக்கர், பத்தாயிரம் ரூபா, அந்த சர்வேயர்ட்டவசூலைப் போட்ருக்காரு!''

''மாஸ் புரோக்கர்தான்!''

''ஆனா நியூஸ் தொடர்ந்து வந்ததைப் பாத்துட்டு, அந்த சர்வேயர் அந்த புரோக்கர்ட்ட கேட்டதுக்கு, 'நம்ம ஆபீஸ்ல இருக்குற சில புரோக்கர்கள்தான் தகவல் சொல்றாங்க. அவுங்களைக் கண்காணிச்சா, யாரு தகவல் சொல்றாங்கன்னு பிடிச்சிரலாம்'னு சொல்லிருக்காரு. காசைக் கொடுத்த சர்வேயர், 'என் காசை வாங்கிட்டு, எனக்கே ஐடியாவா'ன்னு கொதிச்சுப் போயிருக்காரு!''

''இப்பிடித்தான் யார் யாரு பேரையோ சொல்லி, யார் யாரோ வசூல் பண்றாங்க...மதுக்கரை முனிசிபாலிட்டியில டவுன் பிளானிங் ஆபீசரே இல்லை. ரொம்ப நாளா 'வேகன்டா' இருக்கு...ஆனா கட்டட அனுமதிக்கு 'டி.பி.ஓ.,'வுக்குக் கொடுக்கணும்'னு சொல்லி, ஒரு பில்டிங் அப்ளிகேஷனுக்கு 10 ஆயிரம் ரூபா வசூல் பண்றாரு, ஒரு லேடி கவுன்சிலர்!''

''ஓ...குடிதண்ணி கனெக்சனுக்கு கமிஷனர் பேரைச் சொல்லி, வசூல் பண்ணுனாரே... அவரா?'' என்று கேட்ட சித்ரா, அருகில் ஒருவர் பாரதியார் பல்கலைக்கு டிக்கெட் கேட்டதும் மற்றொரு மேட்டருக்குத் தாவினாள்...

''இப்பல்லாம் லேடீஸ்தான் இந்த மாதிரி வேலைகளைத் தைரியமா பண்றாங்க மித்து...நம்ம யுனிவர்சிட்டியில என்விரான்மென்ட் டிபார்ட்மென்ட்ல, புரபசர்களுக்கு இடையில பயங்கர ஈகோ யுத்தம் ஓடுது...அதுல பி.எச்.டி.,படிக்கிற ஸ்டூடன்ட்ஸ்தான், ரொம்பவே பாதிக்கப்படுறாங்க!''

''ஏன்க்கா...ஏதாவது சம்பவம் நடந்திருக்கா?''

''ஆமாப்பா...அங்க ஒரு லேடி புரபசர், இன்னொரு புரபசர் மேல ஏற்கனவே ஒரு கம்பிளைன்ட் கொடுத்திருக்காங்க.

''அந்த லேடி புரபசர், ஒரு பி.எச்.டி., மாணவிட்ட பேசுற ஆடியோ, இப்போ யுனிவர்சிட்டி குரூப்கள்ல வலம் வருது... அதுல அந்த புரபசரை அவமானப்படுத்துறதுக்கும், மாட்டி விடுறதுக்கும் அந்தப் பொண்ணை, லேடி புரபசர் எப்பிடி கட்டாயப்படுத்துறாங்கன்னு கேட்டா, நமக்கே பயமா இருக்கு!''

''உண்மைதான்க்கா...இந்த மாதிரி ஒண்ணு ரெண்டு பேரு, தவறா பாலியல் புகார் கொடுக்குறதாலதான், நிஜமா ஒரு பொண்ணு பாதிக்கப்படுறப்போ, அதை யாரும் நம்பாமப் போற சூழ்நிலை ஏற்படுது. பி.எச்.டி., படிக்கிற பொண்ணுங்க நிலைமைதான் ரொம்பப் பரிதாபம்!''

இதைச் சொன்ன மித்ரா, வடவள்ளிக்கு ஒருவர் டிக்கெட் எடுப்பதைப் பார்த்து விட்டு, மற்றொரு தகவலைப் பரிமாறினாள்...

''அக்கா! வடவள்ளி போலீஸ் ஸ்டேஷனை சிட்டியில இணைக்கச் சொல்லிட்டாங்க...ஆனா கார்ப்பரேஷன் ஏரியாவையும், பக்கத்து பஞ்சாயத்துகளையும் எப்பிடி பிரிச்சுக்கிறதுங்கிறதுல ஒரு குழப்பம் நடக்குது. இந்த விஷயத்துல சிட்டி போலீஸ் ஆபீசருக்கும், ரூரல் போலீஸ் ஆபீசருக்கும் பயங்கர 'ஈகோ வார்' நடக்குதாம்!''

''மித்து! செம்ம 'ஹாட்'டான போலீஸ் மேட்டர்...நம்ம ஊர்ல ரவுடிகள் மோதல்ல ரெண்டு மர்டர் நடந்ததும், போலீஸ் சுதாரிச்சு 600 ரவுடிகளை கைது பண்ணிருக்காங்க...ரெண்டு வாரத்துக்கு முன்னால, பெங்களூரு பக்கத்துல சில ரவுடிகளை சுத்தி வளைச்சு கைது பண்ணிருக்காங்க...அந்த ரவுடிகளுக்கு 'சப்போர்ட் பண்றது, இங்க இருக்குற ஒரு வக்கீல்தான்னு விசாரணையில தெரிஞ்சிருக்கு!''

''அப்படியா,''

''ஆமா...பெங்களூருல ரவுடிகளை போலீஸ் துரத்துறப்போ, ஒரு ரவுடி ஓடிக்கிட்டே, 'எனக்கு கை கால் எல்லாம் நல்லாத்தான் இருக்கு. பாத்துக்கங்க'ன்னு வீடியோ எடுத்து குரூப்களுக்கு அனுப்பிருக்கான். போலீஸ்காரங்க என்கவுன்டர் பண்ணுவாங்க அல்லது கால்ல சுடுவாங்கன்னு வக்கீல் கொடுத்த ஐடியாதான் இந்த வீடியோ!''

''இந்த மாதிரி வக்கீல்களை அரெஸ்ட் பண்ண முடியாதா?''

''அரெஸ்ட் பண்றதுக்கு, போலீஸ்காரங்க முடிவு பண்ணி இருக்காங்களாம். அதுக்கான எவிடென்ஸ் எல்லாமே திரட்டிட்டு இருக்காங்க...!''

சித்ரா சொல்லும்போதே, கூட்டம் நிரம்பி, பஸ் புறப்படத் துவங்கியது; இருவரும் பேச்சை நிறுத்தினர்.வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement