அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்: மெரினா கடலில் அமைக்கும்பேனா சின்னம் சுற்றுச்சூழலை பாதிக்கும்; மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும். இதை கருத்தில் கொள்ளாமல், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், அனுமதி கொடுத்திருப்பது தவறு. கடலில் பேனா நினைவு சின்னம் வைப்பது குறித்து, மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இல்லையேல், அ.தி.மு.க., சார்பில், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம்.
டவுட் தனபாலு: என்னது, மத்திய அரசுக்கு எதிராகவே வழக்கு தொடரப் போறீங்களா... அந்த அளவுக்கு உங்களுக்கு துணிச்சல் இருக்குதா அல்லது சும்மா, 'பப்ளிசிட்டி'க்காக இப்படி அடிச்சு விடுறீங்களா என்ற, 'டவுட்'தான் வருது!
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை: அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள், டில்லியில், பா.ஜ., தேசிய தலைவர்கள் அமித் ஷா, நட்டா உள்ளிட்டோரை சந்தித்து பேசினர். லோக்சபா தேர்தலுக்கு இன்னும் நாட்கள் உள்ளதால், தொகுதி பங்கீடு குறித்தெல்லாம் இப்போது பேச்சு கிடையாது; தேர்தல் வெற்றி குறித்தே பேசி உள்ளோம்.
டவுட் தனபாலு: அது சரி... தமிழகத்துல 'ரெண்டு தரப்பும் அடிச்சுக்காம, ஒருத்தரை ஒருத்தர் அனுசரித்து போங்க... இல்லாட்டி, ரெண்டு பேர் மேலயும் நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கும்' என, 'ஹெட் மாஸ்டர்' கணக்கா அமித் ஷா எச்சரிக்கை செஞ்சதும், அதுக்கு நீங்க, 'சரிங்க சார்'னு தலையாட்டிட்டு வந்ததையும், இப்படி பூசி மழுப்புவது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி: காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட, 'மிசா' சட்டத்திற்கும், பா.ஜ., ஆட்சியில் நடக்கும் வருமான வரித்துறை சோதனைகளுக்கும் வித்தியாசம் இல்லை; இரண்டும் ஒன்று தான். எதுவாக இருந்தாலும், சட்டப்படி சந்திக்க தயாராக உள்ளோம்.
டவுட் தனபாலு: 'மிசா' சட்டமும், வருமான வரி சோதனைகளும் ஒண்ணா... மிசாவுல ஒரு வருஷத்துக்கும் மேலா சிறையில பல சிரமங்களை அனுபவிச்ச உங்க அப்பாவே, உங்களது இந்த ஒப்பீட்டை ஏத்துக்க மாட்டார் என்பதில், 'டவுட்'டே இல்லை!
அதிமுகவான நாங்கள் ஜெயலலிதாவுக்கும் சிலை வைப்போம் என சொல்லவேண்டும்