'மறுபடியும் நம்மை நோக்கி அதிர்ஷ்ட காற்று வீசும் போலிருக்கிறது...' என மகிழ்ச்சியில் திளைக்கிறார், கர்நாடகா முன்னாள் முதல்வரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவருமான குமாரசாமி.
இம்மாநிலத்தில், முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. குமாரசாமி, ஏற்கனவே இரண்டு முறை கர்நாடகா முதல்வராக பதவி வகித்துள்ளார். இரண்டு முறையுமே, இவரது மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி, பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றதால் முதல்வராகவில்லை.
காங்கிரஸ், பா.ஜ., கட்சிகளுக்கு பெரும்பான்மை கிடைக்காததால், கணிசமான இடங்களில் வெற்றி பெற்ற குமாரசாமிக்கு, அந்த கட்சிகள் ஆதரவு அளித்தன. அதனால், இவர் முதல்வராக முடிந்தது.
தற்போது, கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இரண்டு பெரிய கட்சிகளான, பா.ஜ.,வுக்கும், காங்கிரசுக்கும், இந்த முறையும் பெரும்பான்மை கிடைக்காது என்ற தகவல் பரவுகிறது.
அதனால், 'குமாரசாமி கட்சி, வெறும், 15 இடங்களில்வெற்றி பெற்றாலும், பா.ஜ., அல்லது காங்கிரஸ் என, ஏதாவது ஒரு கட்சியின் ஆதரவுடன் அவர், மீண்டும் முதல்வர் நாற்காலியில் அமர வாய்ப்பு ஏற்படும்...' என, கர்நாடகாவில் உள்ள அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதையறிந்த குமாரசாமி, 'நம்மை போன்ற ஒரு ராசியான அரசியல்வாதி, இந்த நாட்டில் வேறு யாருமே இருக்க மாட்டார்கள்...' என, குதுாகலிக்கிறார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!