சத்தீஸ்கர் மாநிலம், தண்டேவாடா மாவட்டத்தின் அரண்பூர் பகுதியில், இம்மாதம், 26ம் தேதி மாவட்ட ரிசர்வ் போலீசின் சிறப்பு படையினர், தங்கள் ரோந்து பணியை முடித்து, முகாமிற்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது, நக்சலைட்டுகள் சக்தி வாய்ந்த கண்ணி வெடியை வெடிக்கச் செய்ததில், போலீசார் பயணித்த மினி வேன் சுக்கு நுாறாக நொறுங்கியது. இச்சம்பவத்தில், வாகனத்தில் பயணித்த, 10 போலீசாரும் உடல் சிதறி பலியாகினர்.
இந்த தாக்குதல், இந்த ஆண்டு சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள சத்தீஸ்கர் மாநில அரசின் நிர்வாகத்திற்கும், மத்திய அரசுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நக்சலைட்டுகளின் கண்ணி வெடியில் இறந்த போலீஸ் சிறப்பு படையினரில், எட்டு பேர் தந்தேவாடா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் எல்லாம் இப்பகுதியில் வசிக்கும், மலைவாழ் பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர்களில் இருந்து, நக்சலைட்டுகளை எதிர்கொள்வதற்காக, மாநில போலீஸ் பணிக்கு, குறிப்பாக, நக்சலைட் எதிர்ப்பு படைக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள்.
இந்த கொடூர தாக்குதலானது, 40 கிலோ அளவிலான சக்தி வாய்ந்த கண்ணி வெடியை பயன்படுத்தி, சிறிதும் மன சாட்சி இல்லாமல் நடத்தப்பட்டுள்ளது. சத்தீஸ்கரின் தண்டேவாடா உட்பட ஏழு மாவட்டங்களில் நக்சலைட்களின் ஆதிக்கம் உள்ளது.
அவர்களின் நாச வேலைகளையும், மோசமான செயல்பாடுகளையும் பல ஆண்டுகளாக பார்த்து வரும் பழங்குடியின மக்கள், நக்சலைட்களை ஒழிக்க, மத்திய, மாநில அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு உதவி செய்து வருகின்றனர். இதனால், ஆத்திரமும், எரிச்சலும் அடைந்துள்ள நக்சலைட்டுகள், தங்களின் இருப்பையும், தாக்குதல் நடத்தும் திறனையும் பதிவு செய்வதற்காக, இந்த பயங்கர தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இடதுசாரி பயங்கரவாத அமைப்பான நக்சலைட்களின் ஆதிக்கம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மற்றும் மஹாராஷ்டிர மாநிலங்களின் சில பகுதிகளில் உள்ளது. இவர்களை ஒடுக்க மாநில அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு, மத்திய அரசு பலமான ஆதரவும் தந்து வருகிறது.
இதனால், நக்சலைட்களின் வன்முறையானது, 77 சதவீத அளவுக்கு குறைந்துள்ளது. அதாவது, 2010ல், 2,213 என்ற அளவில் இருந்து நக்சலைட்களின் வன்முறையானது, 2021ல், 509 தாக்குதல் என்ற அளவுக்கு குறைந்துள்ளது. அதேபோல, நக்சலைட்கள் தாக்குதலில் இறக்கும் அப்பாவிகள் மற்றும் பாதுகாப்புப் படையினரின் எண்ணிக்கையும், இந்தக் கால கட்டத்தில், 85 சதவீத அளவுக்கு குறைந்துள்ளது. அப்படிப்பட்ட நிலையில் தான், சமீபத்திய தாக்குதல் நிகழ்ந்துள்ளது.
நக்சலைட் ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில், பொதுமக்களின் நலன் கருதி, சாலைகள் அமைப்பதை விரைவுபடுத்துதல், தொலைத் தொடர்பு வசதிகளை மேம்படுத்துதல், படித்தவர்களின் வேலைவாய்ப்பு திறனை அதிகரித்தல், குடிமக்களுக்கு சிறப்பான நிதி சேவை வழங்குதல் என, பல மக்கள் நலப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனாலும், எரிச்சல் அடைந்துள்ள நக்சலைட்டுகள், இந்தத் தாக்குதலை நிகழ்த்தி, மக்களுக்கும், மாநில அரசுக்கும் அச்சத்தை ஏற்படுத்த முற்பட்டுள்ளனர்.
வடகிழக்கு மாநிலங்கள் பலவற்றில், தீவிரவாத அமைப்புகளின் வன்முறைகள் கட்டுக்குள் வந்துள்ள நிலையில், சத்தீஸ்கர் உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டும், நக்சலைட்டுகளின் ஆதிக்கம் நீடிப்பது சரியல்ல. நக்சலைட்டுகள் விஷயத்தில், அரசுகள் தரப்பில் எந்த விதமான மெத்தனமான செயல்பாடுகளும் கூடாது என்பதையே, தந்தேவாடா மாவட்டத்தில், அவர்கள் நடத்திய வன்முறை நமக்கு உணர்த்தியுள்ளது.
மேலும், சத்தீஸ்கர் மாநிலத்தின் பீஜப்பூர் மற்றும் சுக்மா மாவட்ட எல்லையில், 2021ல் நக்சலைட்டுகள் நடத்திய பெரிய அளவிலான தாக்குதலில், மாநில போலீசார், 14 பேர் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் ஏழு பேர் என, 21 பேர் கொல்லப்பட்டனர். அதன்பின், தற்போது பெரிய அளவிலான தாக்குதல் நடந்துள்ளது.
சத்தீஸ்கரில் இந்த ஆண்டு பிற்பகுதியில், சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், மேலும் பல தாக்குதல்களை நக்சலைட்டுகள் நடத்த வாய்ப்பு உள்ளது. அதனால், பழங்குடியின மக்களின் ஆதரவு மற்றும் உதவியுடன், நக்சலைட்டுகளுக்கு எதிரான வேட்டையை, மத்திய, மாநில போலீஸ் படையினர் தீவிரப்படுத்த வேண்டும். நக்சலைட் அபாயமே நாட்டில் இல்லை என்ற சுதந்திரமான சூழலை உருவாக்குவது அவசியம்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!