ஆட்டிசம் பாதித்த சென்னை சிறுவன் லக்சய், கடலில் பதினைந்து கிலோமீட்டர் துாரம் நீந்தி புதிய சாதனை படைத்துள்ளான்,அவனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
சென்னையைச் சேர்ந்த கிருஷ்ணகுமார்-ஐஸ்வர்யா தம்பதயினரின் ஒரே மகனான லக்சய் ஆட்டிசம் குறைபாடுள்ள குழந்தையாக வளர்ந்தான்.
அவன் அவனது வயதிற்கு உள்ள குழந்தைகளுடன் சேர்க்காமல் வித்தியாசப்படுத்துவதை தாங்கமுடியாத பெற்றோர், அவனுக்கு பிடித்த விஷயத்தில் அக்கறை காட்டி வளர்த்தனர்.அவனுக்கு நீச்சல் பிடிக்கும் என்பதால் மூன்று வயதில் இருந்தே நீச்சல் பயிற்சி கொடுத்தனர்,அவனும் ஒவ்வொரு கட்டமாக முன்னேறி வந்தான்.
இப்போது 11 வயதாகிறது,நீலாங்கரையில் இருந்து சென்னை மெரினா வரையிலான பதினைந்து கிலோமீட்டர் கடற்கரையை நீந்தி கடப்பது என முடிவு செய்து கடுமையான பயிற்சி மேற்கொண்டான்.
நேற்று அனைத்து ஊடகங்கள் முன்னிலையில் தனது சாதனைப் நீச்சல் பயணத்தை நிகழ்த்திக் காட்டினான்,3 மணி 18 நிமிடத்தில் இந்த துாரத்தை நீந்திக்கடந்துள்ளான்.
ஆட்டிசம் பாதித்த எந்த சிறுவனும் இந்த வயதில் இந்த சாதனையை செய்யாததால் சிறுன் லக்சயின் சாதனை ஆசியாவின் சாதனையாகியுள்ளது.
சிறுவனை பாராட்டி எழுந்த கைதட்டல் அடங்க நீண்ட நேரமானது.ஆட்டிசம் பாதித்த குழந்தையைப் பெற்றவர்கள் அத்தோடு தங்கள் உலகமே இருண்டுவிட்டதாக நினைத்து விடாமல் இருக்க, ஊக்கமும் உற்சாகமும் நம்பிக்கையும் தரும் சிறுவனாக லக்சய் இருக்கிறான் ,இருப்பான்.
-எல்.முருகராஜ்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!