Load Image
Advertisement

சீனாவை மிஞ்சிய இந்தியா: அதிரடி நடவடிக்கை அவசியம்

கடந்த, 1950 முதல், உலக மக்கள் தொகை குறித்த தகவல்களை, ஐக்கிய நாடுகள் சபை திரட்டி வெளியிட்டு வருகிறது.

அதன்படி சமீபத்தில், 'உலக மக்கள் தொகை அறிக்கை - 2023'ஐ வெளியிட்டது. அதில், மக்கள் தொகை எண்ணிக்கையில், சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.

இதன்படி, இந்தியாவின் மக்கள் தொகை, 142.86 கோடி. சீனாவின் மக்கள் தொகை, 142.57 கோடியாகும். சீனாவை விட இந்தியாவில், 29 லட்சம் பேர் அதிகமாக உள்ளனர்.

சீனாவில் மக்கள் தொகை குறைந்து வருவதற்கு, பல காரணங்கள் உள்ளன. அங்கு பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. பணியாளர்கள் வயதாகி விட்டனர்; அதை இளம் தலைமுறையினர் ஈடுசெய்யவில்லை. செலவுகள் அதிகரித்துள்ளதால், சீனர்கள் அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை.
இதனால், குழந்தைகள் பிறப்பை அதிகரிப்பதற்கான சில திட்டங்களை, சீன அரசு அறிமுகப்படுத்தியும், அதற்கு பெரிய அளவில் பலன் கிடைக்கவில்லை.

இந்தியாவில், 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. ஆனாலும்,2021ல் நடத்தப்பட வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக நடத்தப்படாமல் தாமதமாகி வருகிறது.

இந்நிலையில் தான், ஐ.நா., சபை வெளியிட்டு உள்ள அறிக்கையில், உலக மக்கள் தொகை, 804.5 கோடியை தாண்டி விட்டதாகவும், மக்கள் தொகையில், சீனாவை இந்தியா பின்னுக்கு தள்ளிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், மக்கள் தொகை எண்ணிக்கையில், இந்தியா, சீனாவுக்கு அடுத்தபடியாக, 34 கோடியுடன், அமெரிக்கா மூன்றாவது இடத்தில் உள்ளது.

மேலும், இந்திய மக்கள் தொகையில், 25 சதவீதம் பேர், 14 வயதுக்கு உட்பட்டவர்கள். 68 சதவீதம் பேர், 15 முதல், 64 வயதுக்கு உட்பட்டவர்கள். 7 சதவீதம் பேர், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள். அத்துடன், இந்தியாவின் மக்கள் தொகை மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது.

கேரளா மற்றும் பஞ்சாபில் வயதானவர்கள் அதிகம் உள்ளனர். பீஹார் மற்றும் உத்தர பிரதேசத்தில் இளம் வயதினர் அதிகம் உள்ளனர். அதுமட்டுமின்றி, இந்தியாவின் மக்கள் தொகை, 2050ம் ஆண்டில்,166.8 கோடியாகவும், சீனாவின் மக்கள் தொகை, 131.7 கோடியாகவும் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலும், சீனாவிலும் மக்கள் தொகை அதிகரித்து வந்தாலும், அதன் வளர்ச்சி விகிதம் என்னவோ குறைவாகவே உள்ளது. இந்தியாவில், 1950ல் ஒரு பெண்ணுக்கு, 5.7 குழந்தை பிறக்கும் என்ற நிலை இருந்தது. அது தற்போது, 2.2 குழந்தை என்ற விகிதத்திற்கு குறைந்துள்ளது.

சீனாவில் மக்கள் தொகை அதிகரித்த போது, அந்த மனித வளத்தை சிறப்பாக பயன்படுத்தி, பொருளாதார ரீதியாக சக்தி மிகுந்த நாடுகளில் ஒன்றாக அந்நாடு உருவெடுத்தது. அதனால் தான், 'மக்கள் தொகை பங்களிப்பு என்பது அளவைச் சார்ந்தது அல்ல; அது தரத்தை சார்ந்தது. சீனாவில் தரமான பணியாளர் வர்க்கத்தினர், இன்னும்,90 கோடி பேர் இருக்கின்றனர்' என, அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் பெருமையாக கூறியுள்ளார்.

அவரின் கூற்றுக்கு ஏற்ற வகையில், இந்தியாவில் உள்ள இளம் வயதினருக்கு, தரமான கல்வி மற்றும் பயிற்சி அளிப்பதன் வாயிலாக, திறமையான பணியாளர்களை உருவாக்க வேண்டும். அதாவது, அதிக மக்கள் தொகை உடைய நாடு என்பது, எந்த வகையிலும் பெருமையை தராது. அதேநேரத்தில், அதை தேவையற்ற சுமையாகப் பார்ப்பதும் விவேகமற்றது.

எனவே, திறமையான இளைஞர்களுடன் கூடிய கட்டமைப்பை உருவாக்கி, அவர்களின் வாயிலாக, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்களை, மத்திய அரசு செயல்படுத்த வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்கி, இளைஞர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டும். வேலையில்லா திண்டாட்டம் உருவாகாமல் தவிர்க்க வேண்டும்.

சில மாநிலங்களில் வயதானவர்கள் அதிகமாகவும், வேறு சில மாநிலங்களில் இளம் வயதினர் அதிகமாகவும் இருப்பது போன்ற நிலைமையில் மாற்றங்களை ஏற்படுத்த முற்பட வேண்டும். இந்தியாவின் மக்கள் தொகை வளர்ச்சிக்கு இணையாக பொருளாதார வளர்ச்சி இருக்க வேண்டுமென்றால் அது, 10 சதவீதம் அளவுக்கு வளர வேண்டும்.

அப்படிப்பட்ட வளர்ச்சியை எட்டும் போது, மக்கள் தொகை ஒரு பிரச்னையாகவே இருக்காது. அதற்கேற்ற வகையில், மத்திய அரசு திட்டமிட்டு செயல்படும் என நம்புவோமாக!



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement