Load Image
Advertisement

வசூலை வாரிக் கொடுக்குது சீட்டுக்கட்டு... வாடிக்கையாளர்களுக்காக கெடா வெட்டு!

வீட்டில் உட்கார்ந்து, 'ஓடிடி'யில் படம் பார்த்துக் கொண்டிருந்தாள் சித்ரா. வீட்டுக்குள் உற்சாகமாக 'என்ட்ரி' கொடுத்த மித்ரா, ''அக்கா! அந்தப் படத்தை அப்புறம் பாருங்க...வாட்ஸ் ஆப்ல வலம் வர்ற இந்த படத்தை இப்போ பாருங்க!'' என்று தன் அலைபேசியில் இருந்த அந்தப் படத்தை எடுத்துக் காட்டினாள்.

அவளே அதைப் பற்றி விளக்கினாள்...

''மாலையோட நிக்கிற கெடாவுக்குப் பக்கத்துல, சேலையோட நிக்கிற மேடத்தைத் தெரியுதா... இந்த படம்தான் இப்போ உடன் பிறப்புகள் குரூப்கள்ல, படுவேகமா 'பார்வேர்டு' ஆயிட்டிருக்கு...மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோவில்ல ஞாயித்துக்கிழமையன்னிக்கு நடந்த, கெடா வெட்டுல எடுத்த போட்டோ இது!''

மித்ரா முடிக்கும் முன் குறுக்கிட்டு கோபமாகக் கேள்வி எழுப்பினாள் சித்ரா...

''அந்த கோவில்ல கெடா வெட்டுறது சாதாரண விஷயம்தான...யாராவது தெரிஞ்சவுங்க, சொந்தக்காரங்க கூப்பிட்டிருப்பாங்க. இவுங்க போயிருப்பாங்க. இதெல்லாம் ஒரு விஷயமா?''

சித்ராவின் கோபத்தைப் பார்த்த மித்ரா, தான் காண்பித்த படத்தின் சிச்சுவேஷனைப் பற்றி விளக்க ஆரம்பித்தாள்...

''அக்கா! இந்த கெடா வெட்டுக்கு ஏற்பாடு செஞ்சதே, சிட்டியம்மாவோட ஹஸ்பெண்ட்டும், அவரோட சகலையும்தான்...அவரோட சகலை இப்போ சிட்டிக்குள்ள பல இடங்கள்ல சூதாட்ட கிளப் நடத்துறாராம். சில நாளைக்கு முன்னால போலீஸ் கேஸ் ஆகி, அரெஸ்ட்டும் பண்ணீட்டாங்க. மேலிடத்துல இருந்து உத்தரவு வந்ததும் ஜாமீன்ல வந்திருக்காரு!''

''அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் மித்து?''

''அவரோட கஸ்டமர்களுக்கான கவனிப்புதான், இந்த கெடா வெட்டு...சரக்கு, கறிச்சாப்பாடு, சீட்டு, பாட்டுன்னு ஒரே அமர்க்களமாம்...அப்போ ஒரு கெடாவோட அவங்க நிக்கிற போட்டோதான் இது!''

''சகலை வெர்சஸ் ரகளைன்னு சொல்லு...!'' என்று சிரித்த சித்ரா, ''இதெல்லாம்... உளவுத்துறைக்கு தெரியாதா... அவுங்க அரசாங்கத்துக்கு ரிப்போர்ட் போட மாட்டாங்களா?'' என்று கேட்க, கிண்டலாய்ச் சிரித்துக் கொண்டே பதில் சொன்னாள் மித்ரா...

''நீங்க வேற... ரிப்போர்ட் அனுப்பி அனுப்பி, உளவுத்துறைக்காரங்களே சலிச்சுப் போயிட்டாங்களாம். உண்மைத்தன்மையை விசாரிச்சு தகவல் அனுப்பினா, எந்த நடவடிக்கையும் எடுக்கறதில்லையாம். உளவுத்துறை ரிப்போர்ட் எதுவுமே, முதல்வரோட நேரடி கவனத்துக்குப் போறது மாதிரித் தெரியலை!''

''இருக்கலாம் மித்து! கிழக்கு மண்டலத்துல நடக்குறதைப் பத்தி, உளவுத்துறையை விசாரிச்சு அறிக்கை அனுப்பச் சொல்லியிருக்காங்க. அவுங்களும், விசாரிச்சு ரிப்போர்ட் கொடுத்துட்டாங்களாம். ஆனா, கவர்மென்ட்ல இருந்து ஒரு ஆக்சனும் இல்லையாம்!''

''இப்பல்லாம் கவர்மென்ட்ல இப்பிடிப் பட்டவுங்களுக்குதான் பதவி, போஸ்ட்டிங் கொடுக்குறாங்கக்கா... பேரூர் டி.எஸ்.பி.,ஏரியாவுல, லாட்டரி, சேவல் சண்டைன்னு போலீஸ்காரங்களுக்கு துட்டு கொட்டுது. அதுலயும் ஆலாந்துறை ஏரியாவுல, 'வேற லெவல்'ல சூதாட்டம் நடக்குதுன்னு சொல்றாங்க!''

''நானும் கேள்விப்பட்டேன்...ஆலாந்துறை லிமிட்ல சூதாட்ட கோஷ்டிகளை வச்சுத் தொழில் பண்ணி, முத்து முத்தா சொத்து சேர்த்த, அந்த இன்ஸ் மேல ஏகப்பட்ட புகார் போனதும் விசாரிச்சிருக்காங்க. உடனே மெடிக்கல் லீவு போட்டுப் போன அவரு, இப்போ அங்க இங்க ஆளைப் பிடிச்சு, கொடுக்க வேண்டியதைக் கொடுத்து, கிணத்துக்கடவுக்கு டிரான்ஸ்பர் வாங்கீட்டாராம்!''

''ஆஹா...அங்க சூதாட்டம் மட்டுமில்லை...கேரளாவுக்கு கல்லு மண்ணு அரிசி கடத்தல்னு, காசு கொட்டோ கொட்டுன்னு கொட்டுமே... இப்பல்லாம் போலீஸ்காரங்க யாருக்கும் பயப்படுறது மாதிரியே தெரியலை... லஞ்சம் கேட்பது எங்கள் பிறப்புரிமைங்கிறது மாதிரித்தான் மெரட்டி காசு புடுங்குறாங்க!''

''உண்மைதான் மித்து...! கொஞ்ச நாளைக்கு முன்னால, ஒரு சீனியர் ரிப்போர்ட்டர் ஒருத்தர், ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டாரு...ஜி.எச்., போறப்ப இறந்துட்டதால, போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பீட்டாங்க.

அதுக்கு 'இன்டிமேசன்' கொடுக்க வந்த லேடி போலீஸ், ரிப்போர்ட்டர்ஸ்ட்டயே, 'போஸ்ட் மார்ட்டத்துக்கு 2 ஆயிரம், ஆட்டோவுக்கு ஆயிரம்'னு சொல்லி 3 ஆயிரம் ரூபா லஞ்சம் வாங்கீருக்காங்க!''

''பத்திரிக்கைக்காரங்ககிட்டயே இவ்ளோ 'தில்'லா லஞ்சம் கேட்டா, சாதாரண மக்கள் நிலைமைய நினைச்சுப் பாருங்க...!'' என்ற மித்ரா, ''கொடிசியாவுல இருந்து சிட்ராவுக்குப் போற வழி, ராத்திரியானா திருநங்கைகள் ஏரியாவாயிடுதாம். சின்னச்சின்ன காலேஜ் பசங்க, சிக்கிட்டு கஷ்டப்படுறாங்கன்னு அந்த ஏரியா மக்கள் புலம்புறாங்க. போலீஸ்ட்ட பல முறை சொல்லியும் கண்டுக்கிறதில்லையாம்!''

''ஆனா ஒரு சில போலீஸ் ஆபீசர்கள் நல்லதும் பண்றாங்க...சூலுார் தாலுகா ஆபீஸ் எதிர்ல இடிஞ்சு போன கால்வாயை, டவுன் பஞ்சாயத்துல கட்ட ஆரம்பிச்சிருக்காங்க. அதுக்கு ஒரு குரூப் எதிர்ப்பு தெரிவிச்சிருக்கு. மாற்றுப்பாதையில கட்ட ஆரம்பிச்சதுக்கு அங்கேயும் எதிர்ப்பாம். இதுல ரெண்டு குரூப்களுக்கு இடையில, மோதல் வர்றது மாதிரி இருந்ததால, வேலையை பாதியிலேயே நிறுத்திட்டாங்க!''

''இதுல போலீஸ் என்ன பண்ணுனாங்க?''

''டவுன் பஞ்சாயத்தை நம்புனா வேலையாகாதுன்னு, இன்ஸ்பெக்டரே ராத்திரியோட ராத்திரியா தன்னோட செலவுலயே ஆளுகளை வச்சு, கால்வாயைக் கட்டி பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வச்சுட்டாராம்!''

''நான் ஆளும்கட்சி நியூஸ் ஒண்ணு சொல்றேன்...காந்தி பார்க் கார்ப்பரேஷன் நீச்சல் குளத்தை ஆளும்கட்சி ஆதரவுல ஒருத்தரு கான்ட்ராக்ட் எடுத்திருக்காரு...ஆனா சுத்தமா மெயின்டனன்ஸ் இல்லையாம். தண்ணி சுத்தமில்லையாம்; டைல்ஸ் வழுக்குதாம்...இதுக்கு முன்னாடி புரபசனலா நடத்திட்டு இருந்தாங்க...இப்போ எந்த அனுபவமும் இல்லாதவங்களுக்குக் கொடுத்ததாலதான் பிரச்னை!''

''ஆமா மித்து! கார்ப்பரேஷன்ல வேலை எடுக்கணும்னா, வட்டச் செயலாளர்ல ஆரம்பிச்சு, கவுன்சிலர், நிலைக்குழுத் தலைவர்கள், மண்டலத் தலைவர்கள், மண்டல ஆபீசர்கள்னு ஏகப்பட்ட ஆளுங்களைக் கவனிக்க வேண்டியிருக்காம். இதுல கட்சிக்காரங்களே எடுத்தாலும் லஞ்சம், மாமூல்ல எந்தத் தள்ளுபடியும் கிடையாதாம்!''

''அதைத்தான் நான் சொல்ல வந்தேன்க்கா....இந்த நீச்சல் குளத்துக்கு டெண்டர் எடுத்தவரு, கார்ப்பரேஷன் மெயின்ஆபீஸ்ல இருக்குற, முக்கியத் தலைக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுத்துதான் கையெழுத்து வாங்கிருக்காரு. ஆனா ஜோன்ல இருக்குற ஆபீசர், ஆர்டரை நிறுத்தி வச்சுட்டாராம். ஒரு வழியா அவரையும் கவனிச்சுதான் ஆர்டர் வாங்குனாராம். இப்போ கவுன்சிலர் குடைச்சல் கொடுக்குறாராம்!''

மித்ரா பேசிக் கொண்டிருக்கும்போது, இருவருக்கும் ஜூஸ் கொண்டு வந்து கொடுத்தார் சித்ராவின் அம்மா. அவருக்கு நன்றி சொல்லி விட்டு, ஜூஸ் குடித்துக் கொண்டே, தன்னுடைய பேச்சைத் தொடர்ந்தாள் மித்ரா...

''கார்ப்பரேஷன்ல மட்டுமில்லைக்கா...கலெக்டராபீஸ்லயும் கரை வேட்டிகள் ஆதிக்கம் அதிகமாயிருச்சு. அரசு பொருட்காட்சி ஆரம்பிக்க ஏற்பாடு நடக்குது...அதுல கடை போடுறதுக்கு, ஆளும்கட்சியில ஆளுக்கு ஆளு லெட்டர் பேடு, விசிட்டிங் கார்டு வச்சிக்கிட்டு, பி.ஆர்.ஓ.,ஆபீஸ்ல வந்து டார்ச்சர் கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்களாம். இதுக்குன்னே ஆளும்கட்சியில ஒரு குரூப் 'பார்ம்' ஆயிருக்காம்!''

''நீ குரூப்னதும் ஞாபகம் வந்துச்சு மித்து! பெரியநாயக்கன்பாளையம் ஏரியாவுல காட்டுப்பன்னி, யானைகள் பயிர்களைச் சேதப்படுத்துறது பத்தி, தகவல் பகிர்றதுக்காக பாரஸ்ட் சார்புல வாட்ஸ் ஆப் குரூப் ஒண்ணு ஆரம்பிச்சிருக்காங்க. அதுல விவசாயிகள், தங்களோட வயல்ல வன விலங்குகளால ஏற்படுற பாதிப்பை படத்தோட பதிவு பண்றாங்க!''

''நல்ல விஷயமாச்சே...!''

''முழுசாக் கேளு...முதல்ல பாரஸ்ட்காரங்க இதை 'அக்செப்ட்' பண்ணிருக்காங்க. கொஞ்ச நாளா, 'இந்த மாதிரி படம், தகவலை பதிவு பண்ண வேண்டாம்; போன்ல தகவல் சொல்லுங்க'ன்னு சொல்லி இருக்காங்க. அதை மீறி, வன விலங்குகளால ஏற்பட்ட சேதத்தைப் பத்தி, குரூப்ல பதிவு பண்ணுனா, உடனே அந்த விவசாயியை குரூப்ல இருந்து துாக்கிர்றாங்களாம்!''

''நம்ம ஊருல கேள்வி கேக்குறவன்லாம், நடுத்தெருவுலதான் நிக்கணும் போலிருக்கு...உக்கடம்-காந்திபுரம் ரூட்ல ராத்திரி பத்தரை மணிக்கு கிளம்புற பிரைவேட் பஸ்கள்ல, எட்டு ரூபா டிக்கெட்டுக்கு 30 ரூபா டிக்கெட் வாங்குறாங்களாம்.

மூணு 10 ரூபா டிக்கெட் கொடுக்குறாங்களாம். ஏன் இவ்வளவு வாங்குறீங்கன்னு கேட்டா, 'கொடுத்தா பஸ்ல ஏறு...இல்லேன்னா 150 ரூபா கொடுத்து ஆட்டோவுல போ'ன்னு இறக்கி விட்றாங்களாம்!''

''இங்க இருக்குற ஆர்.டி.ஓ.,க்கள்தான் கொடுக்குற காசுக்கு மேல கூவுறவுங்களாச்சே...சாய்பாபா கோவில் பஸ் ஸ்டாண்ட்ல இருந்து, மேட்டுப்பாளையத்துக்கு டிக்கெட் சார்ஜ்ல மூணு ரூபாய் குறைக்கணும்னு, கலெக்டர் புதுசா ஒரு உத்தரவு போட்ட பிறகும் அதையும் நடைமுறைப்படுத்தாத வடக்கு ஆர்.டி.ஓ., 'வர்ற 26ம் தேதி கேஸ் வருது. அதைப் பாத்துட்டு குறைக்கலாம்'னு சொல்றாராம்!''

''கோவைக்கு பேசாம வசூல் சிட்டின்னு பேரு வச்சுரலாம் போலிருக்கு...நம்ம ஜி.எச்.,ல துாய்மைப் பணியாளர்களுக்கான யூனியன் ஆளுங்க சில பேரு, வேலையே பார்க்காம மக்கள்ட்ட பணம் பறிச்சதால, சில பேரை போன வாரம் வேற இடங்களுக்கு மாத்திருக்காங்க. உடனே வேற இடத்துக்குப் போக மாட்டோம்னு, ஸ்டிரைக் பண்ணிருக்காங்க...அப்ப வேலைக்கே வேண்டாம்னதும் போயிருக்காங்க!''

''அங்க இருக்குற ஒரு யூனியன் சார்புல, போன செப்டம்பர்ல மாநாடு நடத்துறோம்னு, அங்க வேலை பாக்கிறவுங்கள்ட்ட வசூல் பண்ணிருக்காங்க. ஜி.எச்.,க்குள்ள வசூல் பண்ணக்கூடாதுன்னு நிர்வாகம் சொன்னதும், வெளியில வசூல் நடத்தியிருக்காங்க. நல்லா வசூல் பண்ணிட்டு மாநாடு நடத்தலை. இப்போ மே மாசம் நடத்துறதாச் சொல்லி மறுபடியும் வசூலிக்க ஆரம்பிச்சிட்டாங்களாம்!''

''வசூல் ராஜாக்களைப் பத்திப் பேசுனதும், நம்ம 2 ஜி ராஜா ஞாபகம் வந்துச்சு...எந்த உள்ளாட்சி சார்புல என்ன வளர்ச்சிப் பணி துவக்குனாலும், பூஜை போட்டு வேலையைத் துவக்குறதுதான் வழக்கம். ஆனா தன்னோட தொகுதியில எந்த வேலையைத் துவக்குனாலும் பூஜை போடக்கூடாது; தேங்காய் உடைக்கக்கூடாதுன்னு ராஜா ஆபீஸ்ல இருந்து ஆபீசர்களுக்கு உத்தரவு போயிருதாம்!''

''இதென்ன புதுக்கதையா இருக்கு!''

''அன்னுார், அன்னுார் செட்டிபாளையம்னு ரெண்டு ஊர்ல நடந்த ரெண்டு நிகழ்ச்சிகள்யும் பூஜையே இல்லாம, நேரடியா கடப்பாரையைப் பிடிச்சு போஸ் கொடுத்துட்டு நடையைக் கட்டிர்றாராம்...எப்பிடியும் அடுத்த தேர்தல்ல, இங்க நிக்கிறதில்லைன்னு ஒரு முடிவுக்கு வந்துட்டாரு போலிருக்கு!''

மித்ரா சொன்னதைக் கேட்டதும் ஏதோ நினைவுக்கு வந்தவளாய் ஆரம்பித்தாள் சித்ரா...

''அவரு எப்பிடியோ...அ.தி.மு.க.,வுல இப்பவே லோக்சபா எலக்சனுக்கு பூஜை போட்டாங்க...தேர்தலுக்கு தலைவர்கள் பிரசார வேன்களைத் தயார் படுத்துறதுல, நம்ம ஊருல இருக்குற ஒரு கம்பெனிதான் ரொம்ப பேமஸ் ஆச்சே...அங்க கோவை ரிஜிஸ்ட்ரேஷனோட ரெண்டு வேன்களை பிரசாரத்துக்கு, பிரமாதமா தயார் பண்ணிட்டு இருக்காங்க...!''

''யார் யாருக்காம்?''

''இலைக்கட்சியைக் கைப்பத்துன தலைக்கும், அவருக்கு வலதுகரமா இருக்குற நம்ம ஊரு 'மாஜி'க்கும்தான், ரெண்டு வண்டியும் ரெடியாகுறதா ஒரு தகவல்!''

சித்ரா சொல்லி முடிக்கும் முன், மித்ராவுக்கு அலைபேசி அழைப்பு வரவே, ''அக்கா! அவசரமா கலெக்ட்ரேட் வரைக்கும் போறேன்...போன்ல கூப்பிடுறேன்!'' என்று சொல்லி விடை பெற்று விட்டு, மின்னல் வேகத்தில் வண்டியைக் கிளப்பினாள் மித்ரா.வாசகர் கருத்து (1)

  • மதிவாணன் -

    0 .....

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement