சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி மூர்சா தெரு வழியாக போகிறவர்கள் இந்த காட்சியை பார்த்திருப்பார்கள்
ஒரு நடுத்தர வயது பெண்மணி தனது மகள்களில் ஒருவரையோ அல்லது இருவரையோ வைத்து சைக்கிளை மிதித்து போய்க்கொண்டு இருப்பார், இது இன்று நேற்றல்ல பதினாறு வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து மக்கள் பார்த்துக் கொண்டு இருக்கும் காட்சியாகும்.அந்தப் பெண்ணின் பெயர் மகாலட்சுமி, மாநகராட்சி துப்புரவு தொழிலாளியின் மகளாக பிறந்தவர்,பள்ளிக்கூடம் பக்கம் போனதில்லை.
சிறுவயது முதலே சைக்கிள் என்றால் பிரியம் அதிகம் தன் வீட்டிற்கு யார் சைக்கிள் கொண்டுவந்தாலும். அதை ஒட்டிப்பார்க்க முற்படுவார். இதனால் பல முறை காயம் ஏற்பட்டாலும் அது பற்றி கவலையின்றி சைக்கிள் ஒட்டக்கற்றுக் கொண்டார்.
மகளின் சைக்கிள் ஆர்வத்தைப் பார்த்த அம்மா ராஜேஸ்வரி , மகாலட்சுமியின் பதினெட்டு வயதில் 750 ரூபாய்க்கு ஓரு பழைய ‛ராலே' சைக்கிள் வாங்கிக் கொடுத்தார் அந்த சைக்கிளைத்தான் இன்னமும் ஒட்டிக்கொண்டு இருக்கிறார்.‛சைக்கிள் லட்சுமி'என்று எல்லோருக்கும் அவரை தெரிந்திருக்கிறது.அம்மா வாங்கிக் கொடுத்த சைக்கிளை ஒரு போதும் பிரிந்ததில்லை திருமணமாகி சிந்துஜா,மேகலா ஆகிய இரண்டு மகள்கள் பிறந்தனர். தான் படிக்க முடியாத கல்வியை மகள்கள் படிக்கவேண்டும் என்பதற்காக துாரத்தில் இருந்த பள்ளிக்கு இரு மகள்களையும் சைக்களிலேயே கொண்டு போய் விட்டு கூட்டிவருவார். அதிலும் சின்ன மகள் துாங்கிப்போனால் அந்த மகளை ஒரு கையால் தோளில் சாய்த்துக் கொண்டே இன்னோரு கையால் சைக்கிளை பேலன்ஸ் செய்து ஒட்டுவார், அவ்வளவு திறமைசாலி.இந்த காட்சி பதினாறு ஆண்டுகளுக்கு முந்திய மகளிர் தினத்தில் பத்திரிகைகளில் ‛வாழ்க்கை சைக்கிள் இரண்டையும் பேலன்ஸ் செய்யும் பெண்'என்ற தலைப்பில் படமாகவும் வந்துள்ளது.
படத்தில் உள்ள இரு மகள்களும் வளர்ந்து இன்று கல்லாரியில் மூன்றாமாண்டு மற்றும் முதலாமாண்டு படித்துக் கொண்டு இருக்கின்றனர்.கணவரது வருமானம் இல்லாத நிலையில் நாலைந்து வீடுகளில் வேலை பார்த்து வரும் வருமானத்தில்தான் குடும்பத்தை அப்போது முதல் இப்போது வரை நகர்த்திக் கொண்டு இருக்கிறார், மகள்களை படிக்கவைத்துக் கொண்டிருக்கிறார் அந்த வகையில் இவர் ஒரு வரைாக்கிய லட்சுமியும் கூட.நாலைந்து வீடு என்பது இப்போது ஐந்தாறு வீடுகளாகிவிட்டது அனைத்து வீட்டிற்கும் தனது சைக்கிளில்தான் பயணம் மேற்கொள்வார்.மகள்கள் வளர்ந்துவிட்டாலும் இப்போதும் அவசரத்திற்கு அம்மாவோடு சைக்கிளில்தான் பயணம் மேற்கொள்கின்றனர்.
பிள்ளைகள்தான் வளர்ந்துவிட்டனரே! அவர்களை சைக்கிள் ஒட்டச் சொல்லி நீங்கள் உட்கார்ந்து போகலாமே? என்று கேட்டால், அது மட்டும் முடியாது; நான்தான் சைக்கிளை ஒட்டுவேன், இருபது வருடத்திற்கு மேல் இந்த சைக்கிளை ஒட்டிக்கொண்டு இருக்கிறேன், இதுவரை ஒரு காய்ச்சல் தலைவலி வந்தது கிடையாது, எனது உடம்புக்கும் மனதிற்கும் தெம்பு தருவதும் மனகாயங்களுக்கு மருந்திடுவதும் கூட எனக்கு இந்த சைக்கிள்தான், இது வெறும் சைக்கிள் இல்லை எனக்கு மூத்த பிள்ளை, இந்த சைக்கிளைவிட்டு ஒருநாளும் பிரிந்தது கிடையாது பிரியவும் மாட்டேன் என்கிறார்.
-எல்.முருகராஜ்
கணவரை பற்றி சொல்லவில்லை .... அவர் பிள்ளைகள் கொடுத்தது வைத்தவர்கள் . நல்ல தாய் .... சல்யூட்