Load Image
Advertisement

நேரு ஸ்டேடியத்துல விளையாடுது வாஸ்து... செல்வபுரத்துல வசூலுக்கு போலீஸ் தோஸ்து!

தோழியின் வீட்டுக்குப் போவதற்காக, சித்ராவும், மித்ராவும் ராமநாதபுரம் தெருக்களில் டூ வீலரில் சென்று கொண்டிருந்தனர். பத்தடிக்கு ஒன்றாக இருந்த ஸ்பீட் பிரேக்கரில் வண்டி ஏறி ஏறி இறங்கியதில் கடுப்பான சித்ரா, ''மித்து! எதுக்குடி இந்த வழியில வந்த...வீட்டைக் கண்டு பிடிக்கிறதுக்குள்ள, ஸ்பைன் பஞ்ச்சர் ஆயிரும் போலிருக்கே!'' என்று சத்தம் போட்டாள்.

வண்டியின் வேகத்தைக் குறைத்த மித்ரா, ''அக்கா! இங்க மட்டுமில்லை. சிட்டிக்குள்ள எந்த வீதிக்குப் போனாலும், ஆயிரம் வேகத்தடைகளைக் கடந்துதான் போகணும். இது நம்ம ஊரோட அடையாளம். காசிருந்தா யாரும் எங்கேயும் யாரையும் கேக்காம, ஸ்பீடு பிரேக்கர் போட்டுக்கலாம்!'' என்று பதிலளித்தாள்.

''எத்தனை போட்டாலும் ஒரு இடத்துலயும் வெள்ளை பெயின்ட் அடிக்கிறதேயில்லை. ஏரியாவுக்குள்ள புதுசா டூ வீலர்ல வர்ற எல்லாரும் கீழ விழுகுறாங்க...

தினமும் இப்பிடி நுாறு ஆக்சிடெண்ட் நடக்குது. இந்த கமிஷனர், கவுன்சிலர்களுக்கு இதெல்லாம் ஏன் கண்ணுலயே படுறதில்லைன்னு தெரியலை!'' என்று தொடர்ந்தாள் சித்ரா.

''இப்பல்லாம் ஆபீசர்கள் பேரை வச்சு, கவுன்சிலர்களே பல வேலைகளைச் செஞ்சுர்றாங்கக்கா... வசூலும் அவுங்க பேரை வச்சுத்தான் நடக்குது!'' என்று மித்ரா சொல்லும்போதே குறுக்கிட்டுப் பேசினாள் சித்ரா...

''உண்மைதான் மித்து! கார்ப்பரேஷன்ல மட்டுமில்லை...மதுக்கரை முனிசிபாலிட்டியில, அன்பு நகர்ங்கிற ஏரியாவுல, குடிதண்ணி கனெக்சனுக்குப் பணம் கட்டுனவருக்கு, வருஷக்கணக்கா கனெக்சன் தராம இழுத்தடிச்சிருக்காங்க. ஏரியா லேடி கவுன்சிலர்ட்ட கேட்டதுக்கு, 'பத்தாயிரம் கொடுத்தாதான், ஆபீசர்கள் கையெழுத்துப் போடுவாங்க'ன்னு சொல்லிருக்காரு. அவர் நேரா கலெக்டர்ட்ட புகார் கொடுத்துட்டாரு!''

''அட! சூப்பரு...அப்புறம் என்னாச்சு?''

''கார்ப்பரேஷன் கமிஷனரைக் கூப்பிட்டு, கலெக்டர் கேட்ருக்காரு. அவர் நேரா ஜீப் எடுத்துட்டு 'ஸ்பாட் விசிட்' போயிட்டாராம். அங்க போனப்பதான், ஆபீசர் பேரை வச்சு லேடி கவுன்சிலர் காசு கேட்டது தெரிஞ்சிருக்கு. அவரு நேரடியா விசாரணை பண்ணுனதை வீடியோ எடுத்து பரப்பி விட்டுட்டாங்க. அது வைரலாகி ஆளும்கட்சி மானம் கப்பலேறுது...அதே கவுன்சிலர் ரோட்டுக்கடை வண்டிகள்லயும் மாமூல் வசூல் பண்றாராம்!''

''ஆனா ஆளும்கட்சி கவுன்சிலர்களே கேட்டாலும், இந்த துாய்மைப் பணியாளர்களுக்கு, கலெக்டர் பிக்ஸ் பண்ணுன 721 ரூபாய் சம்பளத்தைத் தர மாட்டேங்கிறாங்களே...அதனால பி.எம்.எஸ்.,யூனியன் காரங்க, பி.ஜே.பி., தலைவர் அண்ணாமலைட்ட போயி, முறையிடப் போறாங்களாம்!''

''பாவம்க்கா அவுங்க....சம்பளம் பத்தாம, இந்த வேலையோட நைட் வாட்ச்மேன் வேலைக்கெல்லாம் போறாங்க. கீரணத்தத்தில இருக்குற 'ஸ்லம்போர்டு' ஆபீஸ்ல நைட் வாட்ச்மேன் வேலைக்குப் போன காளிமுத்துங்கிறவருக்கு, பல மாசமா சம்பளமே தரலையாம். கேட்டதுக்கு, அங்க ஏ.இ.இ., பேரைச் சொல்லி, அந்தப் பெரியவரை வீட்டுல போய் மெரட்டுனதுல, அவர் தற்கொலை செய்யுற அளவுக்குப் போயிட்டாராம்!''

''அடக்கொடுமையே!!''

கோபத்தை வெளிப்படுத்திய சித்ரா, ஆளும்கட்சி போஸ்டரைப் பார்த்து அடுத்த மேட்டரை ஆரம்பித்தாள்....

''சீக்கிரமே மறுபடியும் சி.எம்., கோவை வரப்போறாராம். கொங்கு மண்டல, 'ரிவ்யூ மீட்டிங்' நடத்தப் போறாங்களாம்... வ.உ.சி., சிலை திறப்பு விழாவை பிரமாண்டமா நடத்த முடிவு பண்ணி இருக்காங்களாம்...அடுத்தடுத்து இந்த மாதிரி விழா, கூட்டம்னு நடத்தி, கட்சியை ஆக்டிவா வச்சிட்டு, ஆள் சேர்க்குறாங்களாம். அதனால ஏ.டி.எம்.கே.,வுல கொஞ்சம் பயப்படுறாங்களாம்!''

''அவுங்களாவது பயப்படுறதாவது...அ.தி.மு.க.,வுல இப்பதான் உறுப்பினர் சேர்க்கை வேகமா நடக்குதாம். தொகுதிக்கு ஒரு லட்சம் பேரைச் சேர்க்கணும்னு, மாவட்டங்களுக்கு 'டார்கெட்' பிக்ஸ் பண்ணியிருக்காங்களாம். நம்ம 'மாஜி' பேசுறப்போ, 'யாரும் சோர்ந்து போகாதீங்க; சட்டசபை தேர்தல்ல ஒன்றரை சதவீத ஓட்டு தான் வித்தியாசம்'னு பேசியிருக்காரு...!''

''அவரு ஏதோ சாபம் விட்டதா ஒரு தகவல் வந்துச்சு...!''

''ஆமா மித்து! பேசிட்டு இருந்தவரு, திடீர்னு கோபமாகி, 'கட்சிக்கு துரோகம் செஞ்சுட்டு போனவங்க, கொஞ்சம் காலத்துக்கு மட்டுமே நல்லா இருப்பாங்க; அப்புறம் அவுங்க நிலைமை என்னாகும்னு, உங்களுக்கே தெரியுமே!'ன்னு பேசிருக்காரு...!''

''அவரு அப்பிடிச் சொல்றாரு...ஆனா ஆளும்கட்சியில இப்பத்தான் சேர்ந்த கோவை செல்வராஜ்க்கு உடனே பதவி கொடுத்துட்டாங்கன்னு, உடன்பிறப்புகள் புலம்புறாங்களே...எல்லாம் 'டார்கெட் மினிஸ்டர்' ஆசிர்வாதம்னு சொல்றாங்க!''

பேசிக் கொண்டிருந்த மித்ரா, கடந்து சென்ற ஆம்புலன்ஸ்சைப் பார்த்து விட்டு, அடுத்த மேட்டரை ஆரம்பித்தாள்...

''அக்கா! நம்ம ஜி.எச்.,ல 'கிளீனிங் ஒர்க்' ரொம்ப மோசமாயிட்டு இருக்கு...சங்கம்ங்கிற பேருல சில பேரு ரொம்பவே ஆடுறாங்களாம். அதுலயும் முக்கியப் பொறுப்புல இருக்குற ஒருத்தரு, தண்ணியைப் போட்டுட்டுதான் நைட் டூட்டி வர்றாராம். டாக்டர்கள், நர்ஸ்கள், பேஷன்ட்கள் யார் இதைப் பத்திக் கேட்டாலும், தாறுமாறா திட்றாராம். பணம் கொடுக்கிறவுங்களுக்கு ராஜமரியாதை தர்றாராம்!''

''ஏழைங்க உசிருன்னா இளக்காரமாப் போச்சு...பொள்ளாச்சி ரோட்டுல, பிரைவேட் பஸ்காரங்க பேய் மாதிரி வண்டி ஓட்றாங்க...போன வியாழக்கிழமை ரெண்டு பஸ் மோதி, பல பேரு காயமானதுக்கு ஓவர் ஸ்பீடுதான் காரணம்னு, ஆர்.டி.ஓ.,ஆபீசர்களுக்கே தெரியும். ஆனா நடவடிக்கை எடுக்கப் போனா, சாதாரண டிரைவருக்கு ரொம்பப் பெரிய இடத்துல இருந்து, ரெக்கமண்டேஷன் வருதுன்னு ஆபீசர்களே அலர்றாங்க!''

''ரோட்டுல வீடியோ கேம் விளையாடுறது மாதிரித்தான்க்கா வண்டி ஓட்றாங்க...இவுங்க பண்ற ஆக்சிடெண்ட்ல, அந்தப் பெரிய ஆளுங்க குடும்பத்துல யாருக்காவது, ஏதாவது ஆச்சுன்னா அப்பவும் இப்பிடி ரெக்கமண்டேஷனுக்கு வருவாங்களா?''

''விளையாட்டுன்னதும் ஞாபகம் வந்துச்சு...நம்ம நேரு ஸ்டேடியத்துல வாஸ்தும் விளை யாடுதாம். புதுசா வந்திருக்குற ஸ்போர்ட்ஸ் ஆபீசர், காலம் காலமா முன் பக்கமா இருந்த வாசலை வாஸ்துவுக்காக மூடிட்டு, பின் பக்கமா 'யு டர்ன்' அடிச்சு ஆபீசுக்குள்ள போறது மாதிரி மாத்திருக்காராம். இதனால, பல பேரு ஆபீசரைப் பார்க்க வந்துட்டு, 'பூட்டிருக்குன்னு' நினைச்சுத் திரும்பப் போயிர்றாங்களாம்!''

அப்போது, எதிரில் போலீஸ் ஜீப் ஒன்று கடந்து செல்லவே, போலீஸ் மேட்டருக்குத் தாவினாள் மித்ரா...

''அக்கா! நம்ம பி.ஆர்.எஸ்.,காம்பஸ்ல இருக்குற போலீஸ் ஹாஸ்பிடலுக்கு, போலீஸ் பேமிலியிலயிருந்து தினமும் 40, 50 பேஷன்ட் வர்றாங்களாம். ஆனா அங்க இருக்குற ரெண்டு டாக்டரும் ஸ்கின் ஸ்பெஷலிஸ்ட்களாம். ஸ்டெதஸ்கோப் கூட வச்சுப் பார்க்காம, பேஷன்டைத் தொடாமலே மூணு மீட்டர் துாரத்துல வச்சுப் பார்த்தே பிரிஸ்கிரிப்ஷன் எழுதிர்றாங்களாம்...போலீஸ் குடும்பங்கள்லாம் புலம்பித் தீர்க்குது!''

''செல்வபுரம் போலீஸ் ஸ்டேஷன்ல, போலீஸ்காரங்களே புலம்புறாங்க...அங்க 'எழுதறவருக்கு' யாரு சரியா கப்பம் கட்றாங்களோ, அவுங்களுக்குதான் செக் போஸ்ட், கேஸ் டூட்டி போடுவாராம். ஒத்துவராத போலீஸ்ன்னா கோர்ட், போஸ்ட் மார்ட்டம், நைட் ரவுண்ட்ஸ்னு கஷ்டமான டூட்டிகளைப் போட்டுக் கொல்லுவாராம்!''

''அப்பிடின்னா இவருக்காகவே, போலீஸ்காரங்க கை நீட்டணும் போலிருக்கே...இதெல்லாம் இன்ஸ்க்கு தெரியாதா?''

''அவருக்கு எப்பிடித் தெரியாம நடக்கும்...இவர் வசூல் பண்றதே அவருக்காகத்தானாம். எவ்வளவு கொடுக்குறார்னு தெரியலை...ஆனா வசூல்ராஜா கமல்-பிரபு மாதிரி காம்பினேஷன்ல சுத்துறாங்களாம்!''

''இன்னொரு போலீஸ் மேட்டர்க்கா....சி.சி.பி.,யில எஸ்.ஐ.,யா இருக்குறவரோட பையனும், தி.மு.க.,வக்கீல் ஒருத்தரும், போன வாரம் ரோட்டுல வண்டியில மோதுனதுல ரெண்டு பேருக்கும் அடிதடி ஆயிருக்கு. அந்த வக்கீலை எஸ்.ஐ.,பையன் அடிச்சிட்டானாம். கடுப்பான வக்கீலு, வக்கீல் சங்கத்து முக்கிய நிர்வாகி தலைமையில, கட்சி வக்கீல்களைக் கூப்பிட்டுட்டு, காட்டூர் ஸ்டேஷனுக்குப் போயிருக்காரு!''

''ஆஹா...அப்புறம்!''

''அப்போ அந்தப் பையன் ஸ்டேஷனுக்கு வெளியில நின்னுட்டு இருந்திருக்கான்...மறுபடியும் கைகலப்பாயிருச்சு...வக்கீல்கள் எல்லாம் சேர்ந்து அந்தப் பையனை துவைச்சு எடுத்துட்டாங்களாம்...ஸ்டேஷனே ரணகளமாயிருக்கு...மூணு ஏ.சி., ரெண்டு இன்ஸ்பெக்டர் வந்து பேசிருக்காங்க. விடிய விடிய பேசி, கடைசியில ரெண்டு பேரு மேலயும், எப்.ஐ.ஆர்., போட்டுட்டாங்களாம்!''

''கையின்னதும் ஞாபகம் வந்துச்சு...காங்கிரஸ்ல அன்னுார் வட்டாரம் திருப்பூர் வடக்கு மாவட்டத்துல இருக்காம். அதை கோவையோட இணைக்கனும்னு, சில நிர்வாகிகள் போர்க்கொடி துாக்கவும், அவுங்களை எந்தக் கூட்டத்துக்குமே கூப்பிடுறது இல்லியாம்...இருக்கிறதே நாலு பேரு...அதுலயும் ரெண்டு பேரைக் கூப்பிடாம வந்தா...கட்சி வளர்ந்தது மாதிரித்தான்னு கதர்ச்சட்டைக்காரங்க கதர்றாங்க!''

சித்ரா சொல்லிக் கொண்டிருக்கும்போதே, தோழியின் வீடு வந்து விட்டதால், இருவரும் வண்டியையும், பேச்சையும் நிறுத்தி விட்டு, இறங்கி வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement