தமிழகத்தில், 'ஆன்லைன்' சூதாட்டத்தில் ஈடுபட்டு, இதுவரை, ௪௦க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில், 'ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுக்களை ஒழுங்குபடுத்துதல் மசோதா' வுக்கு, கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்யும் வகையில், கடந்த ஆண்டு அக்டோபரில், தமிழக சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாவை, நான்கு மாதங்களுக்கு பின், கவர்னர் ரவி திருப்பி அனுப்பிய நிலையில், மார்ச் ௨௩ல், அந்த மசோதா, மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, மறுநாளே கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ௧௮ நாட்களுக்கு பின், மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.
மாநில சட்டசபை நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு, கவர்னர் ஒப்புதல் அளிக்க, காலவரையறை நிர்ணயிக்கும்படி, மத்திய அரசு மற்றும் ஜனாதிபதியை வலியுறுத்தி, தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக, கவர்னர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
முந்தைய அ.தி.மு.க., ஆட்சியிலும், இதுபோன்ற சூதாட்ட தடை சட்டம் கொண்டு வரப்பட்டாலும், உயர் நீதிமன்றம் அந்தச் சட்டத்தை ரத்து செய்து விட்டது. அதனால் தான், தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டது.
அதே நேரத்தில், 'முந்தைய அ.தி.மு.க., அரசு கொண்டு வந்த சட்டத்தை விட, தற்போதைய அரசு நிறைவேற்றியுள்ள சட்டத்தில், ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான காரணங்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளன. இந்தச் சட்டத்தை அமல்படுத்த, தனி ஆணையம் உருவாக்கப்படுகிறது. எனவே, இம்முறை ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை, நீதிமன்றம் ரத்து செய்ய முடியாது' என, சட்ட நிபுணர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
அத்துடன், புதிய சட்டப்படி, ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களுக்கு, மூன்று மாத சிறை தண்டனை மற்றும், ௫,௦௦௦ ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.
ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக விளம்பரங்கள் வெளியிடுவோருக்கு, 5 லட்சம் ரூபாய் அபராதம் அல்லது ஓராண்டு சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். இந்த தண்டனைகள் எல்லாம், ஆன்லைன் விளையாட்டு ஒழுங்கு முறை ஆணையத்தால் விதிக்கப்படும் என்பதால், அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக விசாரணை நடத்த, ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அந்தக் குழுவின் பரிந்துரை அடிப்படையில், தற்போதைய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதால், நிச்சயம் ஆன்லைன் சூதாட்ட அபாயம் முறியடிக்கப்படும் என, பலமாக நம்பப்படுகிறது.
ஆனால், வேறு சில சட்ட நிபுணர்களோ, 'ஆன்லைன் ரம்மி விளையாடுவதை தடுக்க, 'கூகுள் பிளே ஸ்டோர், ஆப்பிள் பிளே ஸ்டோர்' உள்சென்று, ரம்மி விளையாட்டை டவுண்லோடு செய்ய முடியாதபடி தடை செய்ய வேண்டும். அதை மாநில அரசால் செய்ய முடியாது.
'வெளிநாடுகளில் இயங்கும் நிறுவனங்கள் தான், இதுபோன்ற டவுண்லோடு வசதியை அளிக்கின்றன. அந்த நிறுவனங்களுக்கு மாநில அரசு தகவல் அனுப்பினால், அவை ஏற்றுக் கொள்ளாது. எனவே, மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப துறை தான், இதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.
எனவே, ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய தேசிய அளவில் சட்டம் இயற்றும்படி, மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது. அது உண்மையெனில், அதற்கான நடவடிக்கைகளை, தி.மு.க., அரசு மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசும் இதில் துரிதமாக முடிவெடுக்க வேண்டும்.
எத்தனையோ விஷயங்களில், தமிழக அரசுக்கு ஆதரவு தரும்படி, மற்ற மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதும் முதல்வர் ஸ்டாலின், இந்த விஷயத்திலும், தமிழக அரசுக்கு ஆதரவு தரும்படி, பல மாநில முதல்வர்களிடமும் வேண்டுகோள் விடுக்க வேண்டும்.
எது எப்படியோ ஆன்லைன் சூதாட்டம் என்ற உயிர்பலி வாங்கும் விளையாட்டு, மாநிலத்தில் இருந்து மட்டுமின்றி, நம் நாட்டிலிருந்தே முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை, தமிழக அரசு தொடர்ந்து எடுக்கும் என, நம்புவோமாக.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!