Load Image
Advertisement

'வசூல்ராஜா' வந்து இறங்குறதுக்கு புது காரு மாஜி எம்.எல்.ஏ., எந்திரிச்சப்பிறகுதான் வந்தது உசிரு!

கோடை துவங்கிவிட்டதால், வழக்கத்தை விட முன்னதாகவே, 'வாக்கிங்' புறப்பட்டு விட்ட சித்ராவும், மித்ராவும், தங்களின் வண்டிகளை ரேஸ்கோர்ஸ் ஸ்கீம் ரோட்டில் நிறுத்திவிட்டு, கலெக்டர் பங்களா அருகில் நடக்கத்துவங்கினர். பங்களா முன்பிருந்த பெயர்ப் பலகையைப் பார்த்து விட்டு, மித்ரா தான் பேச்சை ஆரம்பித்தாள்...

''என்னக்கா... நம்ம கலெக்டர் எல்லாத்துலயுமே பயங்கர 'ஆக்டிவா' இருக்கார்னு எல்லாரும் சொல்றாங்க. ஆனா, கொரோனா தடுப்பூசி பத்தி, அவர் பேசுனதைப் பார்த்துட்டு, ஹெல்த் டிபார்ட்மென்ட்காரங்க திகைச்சுப் போயிருக்காங்க!''

மித்ரா ஆச்சரியமாகக் கேள்வி கேட்டாள்...

''அப்பிடி என்ன பேசுனாராம்?''

''ஜி.எச்ல., கொரோனா தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சியில, 'நம்ம மாவட்டத்துல பூஸ்டர் தடுப்பூசி நிறைய்யப் பேரு போடாம இருக்காங்களே'ன்னு ரிப்போர்ட்டர்ஸ் கேட்டதுக்கு, 'ரெண்டு டோஸ் போட்டாலே போதும்; நோய் எதிர்ப்பு சக்தி வந்துடும். பயப்படத் தேவையில்லை'ன்னு சொல்லிருக்காரு. பூஸ்டர் போடச் சொல்லி, கவர்மென்ட் வற்புறுத்திட்டு இருக்குறப்போ இவரு இப்பிடிப் பேசலாமா?''

''அது அவரோட நம்பிக்கையா இருக்கலாம் மித்து...ஆனா இப்பவும் நம்ம மாவட்டம் கொரோனா பாதிப்புல முதலிடத்துல இருக்கு...இதை மட்டுமில்லை...ரேஷன் அரிசி கடத்தல், ரெவின்யூ டிபார்ட்மென்ட்ல அநியாயத்துக்கு வாங்குற லஞ்சம்னு, பல விஷயங்களை அவர் உடனே கவனிக்கணும்!''

''ஆமாக்கா! இப்பல்லாம் ரேஷன் அரிசி கடத்தல் பகிரங்கமா நடக்குது. சொக்கம்புதுார், செல்வபுரம், தெலுங்குபாளையம் ஏரியாவுல, ரேஷன் கடைகளுக்கு முன்னாடியே மினி லாரி, சரக்கு ஆட்டோக்களை நிறுத்தி, தைரியமா ரேஷன் அரிசி மூட்டைகளை ஏத்திட்டுப் போறாங்க...சர்வே சர்ட்டிபிகேட் கொடுக்க, தாலுகா ஆபீஸ்கள்ல ஈவு இரக்கமே இல்லாம காசு புடுங்குறாங்க!''

மித்ரா முடிக்கும் முன் குறுக்கிட்டுத் தொடர்ந்தாள் சித்ரா...

''உண்மைதான் மித்து! நம்ம வடக்கு தாலுகா ஆபீஸ் சர்வேயர் பத்திப் பேசுனோமே...'அவரு கூட, டிமாண்ட் பண்ணி யார்ட்டயும் பணம் வாங்குறதில்லை; வேலையெல்லாம் நல்லாப் பார்ப்பாரு'ன்னு சொல்றாங்க... ஆனா சவுத் ஆபீஸ்ல இருக்குற சர்வேயர்ட்ட கலெக்டரே சொன்னாலும், காசு இல்லாம அணுவும் அசையாதாம். அவருக்கு தகவல் சொல்றதுக்கு விஜிலென்ஸ்லயே ஆளு வச்சிருக்காராம்!''

''ரெவின்யூ டிபார்ட்மென்ட் பத்தி இன்னொரு தகவல்...சில மாசத்துக்கு முன்னால, நம்ம மாவட்டத்துல கிராம உதவியாளர்கள் நிறையப்பேரை நியமிச்சாங்கள்ல...ஆனா அவுங்க யாருமே வி.ஏ.ஓ., ஆபீஸ்கள்ல வேலை பாக்குறதில்லையாம்!''

''கரெக்ட்தான்...!அன்னுார் வி.ஏ.ஓ., ஆபீஸ்களுக்கு நியமிச்ச உதவியாளர்கள் சில பேரு, அங்க வேலை பார்க்காம, தாலுகா ஆபீஸ்லயும், வடக்கு ஆர்.டி.ஓ., ஆபீஸ்லயும் வேலை பாக்குறாங்களாம். வி.ஏ. ஓ.,க்கள் பழையபடி, வெளியாட்களை வச்சு வேலை பாக்குறாங்க!''

''எல்லாமே காசுதான்...ரேஷன் கடை பணியாளர்களுக்கு புரமோஷன் கொடுத்த பிறகுதான், புது நியமனம் பண்ணனும்னு ஐகோர்ட் ஆர்டர் போட்ருக்கு. பல பேருக்கு இன்டர்வியூ வச்சு, இட ஒதுக்கீட்டுல பட்டியலும் ரெடி பண்ணீட்டாங்க. பல பேரு பணமும் கொடுத்திருக்காங்க. அது வருமா வராதான்னு தெரியாம, பணம் கொடுத்தவுங்க, காசைத் திரும்பக் கேட்டு நச்சரிக்க ஆரம்பிச்சிருக்காங்க!''

பேசிக் கொண்டிருந்த மித்ரா, எதிரில் கடந்து சென்ற துணை நடிகர் ஒருவரைப் பார்த்து விட்டு, அடுத்த மேட்டருக்குத் தாவினாள்...

''அக்கா! வ.உ.சி., கிரவுண்ட்ல நடக்குற, 'எங்கள் முதல்வர் எங்கள் பெருமை' கண்காட்சியில கூட்டம் சேர்க்கிறதுக்கு, தினமும் பல நடிகர்கள், கலைஞர்களைக் கூப்பிட்டு வர்றாங்க...அது மட்டுமில்லாம, ஆளும்கட்சிக் கவுன்சிலர்கள் எல்லாரும் தினமும் சாயங்காலம், 'கம்பல்சரி அட்டெண்டன்ஸ்' போடணுமாம். அதனால, வார்டு விசிட் எதுக்கும் போக முடியலைன்னு கவுன்சிலர்கள் புலம்புறாங்க!''

''அவுங்க போய் என்ன நடக்கப்போகுது...

''மித்து! சாய்பாபா கோவில் ஏரியாவுல இருக்குற சேனிட்டரி சூபர்வைசர் ஒருத்தரு, நிரந்தர துாய்மைப் பணியாளர்களை, காலங்காத்தால வேலைக்கு வரச் சொல்லி, தன்னோட சொந்த வேலைகளுக்கு அனுப்புறாராம். வயசானவங்க, முடியாதவங்க யாராவது கேள்வி கேட்டா, வாய்க்கு வந்தபடி திட்டுறாராம்!''

''இப்படித்தான், காரமடை நகர பொறுப்புல இருக்கிறவரு மேல, இது மாதிரி ஏகப்பட்ட புகார் குவியுது...அங்க இருக்குற ஆளும்கட்சி பெண் நிர்வாகி ஒருத்தரு, ஸ்கூல் நடத்துறாங்களாம். அந்த ஸ்கூல் விழாவுக்குக் கூப்பிட, நகராட்சித் தலைவர் வீட்டுக்குப் போனப்போ, அங்க வச்சு இந்தம்மாவை மோசமா திட்டிருக்காரு!''

''தலைவரு அதைக் கண்டுக்கலையா?''

''அந்தம்மாவோட வீட்டுக்காரரும் சேர்ந்துதான் திட்டிருக்காரு...இது இப்போ பெரிய பிரச்னையாயிருக்கு... நகர நிர்வாகி பத்தி, கட்சியில இருக்கிறவுங்க எல்லாம் சேர்ந்து, தலைமைக்கு பெட்டிஷன் போடப் போறாங்களாம்!''

''ஆளும்கட்சிப் பத்திப் பேசவும், நம்ம எக்ஸ் எம்.எல்.ஏ.,ஞாபகம் வந்துச்சு...அணிகள்ல அந்த போஸ்ட்டிங், இந்த போஸ்ட்டிங் தர்றேன்னு சொல்லி, அஞ்சு, பத்துன்னு ரெண்டு 'சி' வரைக்கும் வசூல் பண்ணிட்டு, திடீர்னு 'அட்டாக்'ல படுத்துறவும், காசு கொடுத்தவுங்க ஆடிப்போயிட்டாங்க. ஆபரேஷன் பண்ணி வந்த பிறகுதான், காசு கொடுத்தவுங்க பெருமூச்சு விட்டாங்களாம். அதுக்குள்ள தலைமைக்கு தகவல் போயிருச்சாம்!''

''ஆபரேஷன், ஆளும்கட்சின்னதும் எனக்கு வேற ஒரு மேட்டர் தோணுச்சு...கமல்ட்ட இருந்து ஆளும்கட்சிக்கு வந்த டாக்டர், வர்ற எம்.பி., எலக்சன்ல, பொள்ளாச்சியில போட்டி போடுறது உறுதியாயிருச்சாமே?''

மித்ராவின் கேள்விக்கு 'டக்'கென்று குறுக்கிட்டு பதில் சொன்னாள் சித்ரா...

''எனக்கும் அப்பிடித்தான் தகவல் வந்துச்சு மித்து! ஆனா கோவை தொகுதியில அண்ணாமலை நின்னா, அவரை எதிர்த்துப் போட்டி போடுறதுக்கு, டாக்டர்தான் சரியான ஆளுன்னு சொல்லி, அவரை இங்க நிறுத்துற ஐடியாவும் இருக்காம். தலைமைக்கு நெருக்கமான குடும்பத்துல சம்பந்தம் பண்ணியிருக்காரு...வண்டி, வாகனம், வசதி நிறைய இருக்குறதால, அவருக்கு ஏதாவது ஒரு தொகுதியில சீட் உறுதி!''

''அக்கா! வசதி வந்தாலே வண்டி வந்துரும்ல...நம்ம சிட்டியம்மாவோட வீட்டுக்காரரு, வசூல்ராஜாவா மாறீட்டாருல்ல... இப்போ வேறொருத்தரு பேருல, புதுசா ஒரு காரு எடுத்திருக்காராம்...பெரிய செயின், பிரேஸ்லெட்டோட புது கார்ல அவரு வந்து இறங்குற பந்தாவைப் பார்த்து, ஏரியாக்காரங்க வாயடைச்சிப் போயிருக்காங்க... கட்சிக்காரங்க கலாய்க்கிறாங்க!''

மித்ரா பேசும்போது, அறிவிப்புடன் கடந்து சென்ற போலீஸ் வாகனத்தைப் பார்த்ததுமே, அவளே மீண்டும் தொடர்ந்தாள்...

''அக்கா! பல் புடுங்குன மேட்டர்ல, சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்ல செக் பண்ணப்போ, அங்க இருந்த 'சிசிடிவி' கேமரா பதிவெல்லாம் மூணு நாளைக்கு அழிஞ்சிருந்திருக்கு...அதனால கோவையில இருக்குற கேமரா எல்லாம் செக் பண்ணப்போ, நம்ம ஊருல பல ஸ்டேஷன்கள்ல 'சிசிடிவி'யே ஒர்க் ஆகாம இருந்திருக்கு!''

''அப்பிடியே ரிக்கார்டு ஆனாலும் அதை அழிச்சிர்றாங்களே!''

''அதுக்குதான் வழி தெரியாம வேற ஒரு ஐடியா பண்றாங்களாம். அதை நினைச்சுதான் போலீஸ் பயந்துட்டு இருக்காங்க...!''

''ஆனா போலீஸ் பேரை வச்சே, ஒரு வக்கீல் ஒரு தொழிலதிபர்ட்ட 40 லட்ச ரூபா புடுங்கிருக்காரு...!''

''என்ன மித்து சொல்ற...?''

''ஆமாக்கா! தியேட்டர் சொத்துல ரவுடிங்க கட்டப்பஞ்சாயத்து பண்ணுனதுல, நம்ம ஊரு பிஸினஸ்மேன் ஒருத்தரும் சம்மந்தப்பட்ருக்காரு. கேஸ் வருமோன்னு பயந்த அவர்ட்ட, 'எனக்கு போலீஸ்ல பெரிய அளவுல செல்வாக்கு இருக்கு'ன்னு சொல்லி, 40 லட்ச ரூபா வாங்கிருக்காரு ஒரு வக்கீலு...ஆனா ஒண்ணுமே பண்ணலை!''

''பண்ணலைன்னா...?''

''ஒண்ணுமே பண்ணலை...திருச்சியில இருந்து இலங்கை போறதுக்கு முன்னாடி, போலீஸ் அந்த பிஸினஸ்மேனைத் துாக்கி கேஸ் போட்டு, 'லுக் அவுட்' நோட்டீஸ் போட்டாங்க.

அப்புறம்தான், அந்த வக்கீல் ஏமாத்துனது தெரிஞ்சிருக்கு...இப்போ பணமும் போச்சு; மானமும் போச்சுன்னு, 'காஸ்மோரா' மாதிரி புலம்புறாராம் அந்த தொழிலதிபர்!''

''ஒரு நல்ல விஷயம் சொல்றேன்க்கா...நம்ம மாவட்டத்துல இருக்குற 'எய்டடு ஸ்கூல்' டீச்சர்ஸ்களோட சர்வீஸ் ரிக்கார்டுகளைக் கையாள்றதுல, பயங்கரமா காசு புடுங்கிருக்காங்க சில ஊழியர்கள்...அதைப் பத்தி டி.இ.ஓ., பாண்டியராஜ சேகரன்ட்ட டீச்சர்ஸ் புகார் பண்ணிருக்காங்க...இப்போ எல்லாமே அவர் பார்வைக்குப் போகுதாம். எந்த தப்பும் நடக்கிறதில்லையாம்; வசூலும் நின்னுருச்சாம்!''

''பரவாயில்லையே...நம்ம ஊர்ல நேர்மையாவும் சிலவேலைகள் நடக்குது...இப்பிடித்தான் சுல்தான்பேட்டை யூனியன்ல, ஒரு கிராம பஞ்சாயத்துல ஆளும்கட்சி வைஸ் பிரசிடெண்ட் ஒருத்தரு, ஏகப்பட்ட ஆட்டம் போட்டுட்டு இருந்திருக்காரு. எல்லாரும் புகார் பண்ணுனதால, ஆளும்கட்சின்னு பார்க்காம, அவரோட அதிகாரத்தை எல்லாம் ரத்து பண்ணிட்டாராம் நம்ம கலெக்டர்!''

''அப்பிடியே நம்ம மாவட்டத்துல விவசாயிகள் சங்கம்கிற பேருல, கட்டப்பஞ்சாயத்து பண்ணிட்டு, 'எனக்கு கலெக்டரைத் தெரியும்; ஐ.ஜி.,யைத் தெரியும்'னு பல பேரை மிரட்டி வசூல் பண்ணிட்டு இருக்குற, சில ஆளுங்களுக்கும் கலெக்டரும், போலீஸ் கமிஷனரும், ஐ.ஜி.,யும் சேர்ந்து ஒரு முடிவு கட்டுனா நல்லாருக்கும்!''

இதைச் சொல்லி முடித்த மித்ரா, ''அக்கா! மெதுவா ஒரு ஜாகிங் போய் முடிச்சிருவோம்!'' என்று சொல்ல, இருவரும் மெது ஓட்டத்தை ஆரம்பித்தனர்.வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement