பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத்தொடர், மார்ச், ௧௩ம் தேதி துவங்கியது. துவங்கிய நாளில் இருந்தே, லோக்சபாவும், ராஜ்யசபாவும் அமளியால் ஆட்டம் கண்டன.
காங்கிரஸ் முன்னாள் எம்.பி., ராகுல், லண்டனில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என, ஆளுங்கட்சியான பா.ஜ., - எம்.பி.,க்களும், அதானி விவகாரத்திற்காக, பார்லிமென்ட் கூட்டுக்குழு அமைக்க வேண்டும் என, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்.பி.,க்களும் தொடர்ந்து கோஷங்கள் எழுப்பி, அமளியில் ஈடுபட்டு வந்ததால், உருப்படியாக அலுவல்கள் எதுவும் நடக்காமல், பார்லிமென்ட் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
இந்தக் கூட்டத்தொடரில், லோக்சபா எவ்வளவு நேரம் செயல்பட வேண்டும் என, நிர்ணயிக்கப்பட்டதில், ௩௪ சதவீதம் மட்டுமே செயல்பட்டுள்ளது. அதை விட மோசமாக, ராஜ்யசபா, ௨௪.௪ சதவீத நேரம் மட்டுமே செயல்பட்டுள்ளது.
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வில், அதாவது, ஜனவரி, ௩௧ முதல், பிப்ரவரி, ௧௩ வரையிலான காலகட்டத்தில் லோக்சபாவின் செயல்பாடுகள், ௮௩.௮ சதவீத அளவுக்கு இருந்தன. ராஜ்யசபாவின் செயல்பாடுகள், ௫௬.௩ சதவீத அளவுக்கு இருந்தன.
அவற்றை ஒப்பிடுகையில், இரண்டாம் அமர்வின் செயல்பாடானது, மிக மோசமாக அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி, கடந்த எட்டுக்கும் மேற்பட்ட கூட்டத்தொடர்களில், பார்லிமென்டின் இரு சபைகளும், நிர்ணயிக்கப்பட்ட கால கட்டத்திற்கு முன்னதாகவே ஒத்தி வைக்கப்பட்டதாக, சில புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வில், எதிர்க்கட்சிகள் அதானி விவகாரத்தை எழுப்பியதால், அதற்கு போட்டியாக, லண்டனில் ராகுல் பேசிய பேச்சுக்காக, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என, ஆளுங்கட்சியினர் குரல் எழுப்பத் துவங்கினர்.
இதனால், நான்கு வாரங்களுக்கும் மேலாக, பார்லிமென்ட் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், அவதுாறு வழக்கில், ராகுலுக்கு குஜராத் நீதிமன்றம் இரண்டாண்டு தண்டனை விதித்தது மற்றும், அவரின் எம்.பி., பதவி பறிக்கப்பட்டது போன்றவை அடுத்தடுத்து அரங்கேறின. இது, எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல, எதிர்க்கட்சிகள் போராட்டங்களை தீவிரப்படுத்த ஒரு வாய்ப்பாக அமைந்து விட்டது.
அதற்கேற்ற வகையில், தேதி குறிப்பிடாமல் பார்லிமென்ட் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், அங்கிருந்து விஜய்சவுக் வரை, எதிர்க்கட்சிகள் ஊர்வலமாக சென்று, ஆளுங்கட்சிக்கு எதிராக தங்களின் ஒற்றுமையை காட்டியுள்ளன. இதனால், ௫௦ லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நிதி நிலை அறிக்கையை, எந்த விதமான விவாதமும் இன்றி, நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் மத்திய அரசுக்கு உருவானது.
எம்.பி.,க்களின் இந்த செயல்பாட்டை, அவர்கள் சார்ந்த கட்சிகள் வேண்டுமானால் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், பார்லிமென்டில் பொதுநலன் சார்ந்த விஷயங்களையும், தங்களின் தொகுதிப் பிரச்னைகளையும் பேசி, நல்ல தீர்வு காண்பர் என்ற நம்பிக்கையில் இருக்கும் மக்களுக்கு, எம்.பி.,க்களின் இந்த செயல்பாடு மிகப்பெரிய துரோகமாகும்.
'பார்லிமென்ட் செயல்பாடுகளை முடக்குவதன் வாயிலாக, அரசியலை ஆயுதமாக்குவது, நம் நாட்டின் அரசியல் நிலவரங்களில், மோசமான பாதிப்புகளை, கடுமையான பின் விளைவுகளை ஏற்படுத்தும்' என, ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ள கருத்து முற்றிலும் சரியானதே. அவரின் இந்த வார்த்தைகளுக்கு எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, ஆளுங்கட்சியினரும் செவிசாய்க்க வேண்டும்.
ஒவ்வொரு பிரச்னையும் சுமுகமாக தீர்க்கப்படவும், எதிர்க்கட்சிகளின் ஆவேசத்தை முடிவுக்கு கொண்டு வரவும், அவற்றுடன் ஆக்கப்பூர்வமான பேச்சு நடத்தவும், ஆளும் தரப்பு முன்வர வேண்டும்.
பார்லிமென்டிற்கு புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. அந்தக் கட்டடத்தில் விரைவில், லோக்சபா மற்றும் ராஜ்யசபா செயல்பட உள்ளது. அங்காவது, சபையின் நடவடிக்கைகள் சிறப்பாக நடைபெற, ஆளுங்கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் உறுதி ஏற்க வேண்டும். இல்லையெனில், தற்போதைய நிலைமையில் எந்த மாற்றமும் ஏற்படாது.
மொத்தத்தில், பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வானது, ௧௮௭ மணி நேரம் வரை செயல்படாமல் வீணடிக்கப்பட்டது, மக்களால் மன்னிக்க முடியாத செயலாகும்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!