வலி நிவாரணிகள், தொற்று நோய் தடுப்பு மருந்துகள், நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் இதய நோய் மருந்துகள் உள்ளிட்ட, ௮௦௦க்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலை, ஏப்ரல் 1 முதல், 12.12 சதவீதம் உயர்ந்துள்ளது. இது, கடந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட விலை உயர்வான, 10.7 சதவீதத்தை விட அதிகமாகும்.
ஒவ்வொரு ஆண்டும் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம், அத்தியாவசிய மருந்துகள் விலையை மாற்றி அமைக்கும். அதன்படி, மூலப்பொருட்களின் விலை உயர்வு, உற்பத்தி செலவு அதிகரிப்பு உள்ளிட்டவை காரணமாக, மருந்துகளின் விலையை அதிகரிக்க வேண்டும் என்ற, மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று, இந்த ஆண்டு விலை உயர்வு அறிவிக்கப்பட்டு, அமலுக்கு வந்துள்ளது. ஒரு மருந்தையோ, மாத்திரையையோ ஒரு நிறுவனம் புதிதாக கண்டுபிடித்தால், முதல், 20 ஆண்டுகளுக்கு அந்த நிறுவனம் மட்டுமே, அந்த மருந்தை விற்பனை செய்ய முடியும். இது, காப்புரிமை காலம் என, அழைக்கப்படுகிறது. இந்த, காப்புரிமை காலத்தில், பல மருந்துகள் அதிகமான விலையில் விற்கப்படுகின்றன.
காப்புரிமை காலம் முடிந்த பின், அந்த மருந்தானது பொதுவானதாகி விடும். அப்போது, எந்த நிறுவனம் வேண்டுமானாலும், அந்த மருந்தை தயாரித்து விற்பனை செய்ய முடியும். இப்படி தயாரித்து விற்கப்படும் மருந்துகள் தான், 'ஜெனரிக்' மருந்துகள் என அழைக்கப்படுகின்றன. இந்த ஜெனரிக் மருந்துகளுக்கு அவற்றை தயாரிக்கும் நிறுவனங்கள், தங்களுக்கு விருப்பமான பெயர்களை சூட்டிக் கொள்ளலாம். ஒரே மருந்து, மாத்திரைகளை பல நிறுவனங்கள் தயாரிக்கும் போது, அவற்றுக்கு இடையே போட்டி உருவாகும். அப்போது, இந்த மருந்துகளின் விலை கணிசமாக குறையும். எனவே தான், நோயாளிகளுக்கு டாக்டர்கள் மருந்துகளை பரிந்துரைக்கும் போது, மருந்தை தயாரிக்கும் நிறுவனங்களின் பெயர்களை குறிப்பிடாமல், அவற்றின் ஜெனரிக் பெயர்களை குறிப்பிட வேண்டும் என, இந்திய மருத்துவ கவுன்சில், சில ஆண்டுகளுக்கு முன், விதிமுறையை கொண்டு வந்தது.
ஆனாலும், பெரும்பாலான டாக்டர்கள் இந்த விதிமுறையை பின்பற்றுவதில்லை. தங்களுக்கு சலுகைகள், பரிசுப் பொருட்களை வாரி வழங்கும் மருந்து நிறுவனங்களின் பெயர்களையே பரிந்துரைக்கின்றனர். மக்களும் அந்த மருந்தையே வாங்கிச் சாப்பிடும் நிலைமைக்கு தள்ளப்படுகின்றனர்.கொரோனா தொற்று பரவல் மற்றும் அதனால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு போன்ற வற்றால், ஏராளமானோரின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், குறிப்பிட்ட வயதை கடந்தவர்கள், நோய் உபாதைகளுக்கு ஆளாகும் போது, தினமும் ஒன்றுக்கு மேற்பட்ட மருந்துகளை எடுத்துக் கொள்ள நேரிடுகிறது. இதற்காக தங்களின் மாதாந்திர பட்ஜெட்டில், குறிப்பிட்ட தொகையை செலவிட வேண்டிய கட்டாயம் உருவாகிறது.
இந்தப் பிரச்னையை தீர்ப்பதற்காகவே, 'நாடு முழுதும், 32 ஆயிரம் மக்கள் மருந்தகங்கள் துவக்கப்படும்' என, மத்திய அரசு அறிவித்தது. ஆனாலும், இதுவரை, 9,000 மருந்தகங்கள் வரையே துவக்கப்பட்டு, அவற்றில் குறைவான விலையில் மருந்துகள் விற்கப்படுகின்றன. நம் நாட்டின் மக்கள் தொகையை கணக்கிடுகையில், இந்த மருந்தகங்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாகும். எனவே, விரைவில் மக்கள் மருந்தகங்கள் எண்ணிக்கையை கணிசமாக அதிகரிக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கு விற்கப்படும் மருந்துகளின் எண்ணிக்கையையும் உயர்த்த வேண்டும்.
வெளிநாடுகளில் இருந்து மருந்துகள் இறக்குமதி செய்வதை தவிர்த்து, உள்நாட்டிலேயே அரசு சார்பில், மருந்துகள் தயாரித்து, மக்கள் மருந்தகங்களுக்கு வழங்க வேண்டும். அத்துடன், மேலும் பல மருந்து, மாத்திரைகளை அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் சேர்த்து, அவற்றை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு சலுகைகள் வழங்கி, கட்டுப்படுத்தப்பட்ட விலையில் விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன், தற்போதைய விலை உயர்வில் மாற்றங்களை ஏற்படுத்தி, மக்களுக்கு நல்லது செய்ய முன்வர வேண்டும்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!