Load Image
Advertisement

கோவையில் அதிகமாகும் பாலியல் வக்கிரம்... சீண்டுவோரை சிறைக்கு அனுப்பணும் சீக்கிரம்!

பழங்கள் வாங்கிக் கொண்டு, மித்ராவைப் பார்க்கப் போயிருந்தாள் சித்ரா. அவளை மகிழ்வோடு வரவேற்ற மித்ரா, ''அக்கா! நானே உங்களைப் பார்க்க வரலாம்னு இருந்தேன். அதுக்குள்ள நீங்களே வந்துட்டீங்க... உடம்புக்கு சரியில்லைன்னு ஓவரா ஓய்வெடுத்தா ஓரம் கட்டிருவாங்க...நான் களத்துல கலக்கத் தயார்!'' என்று உற்சாகமாகப் பேசினாள்.

அவள் சொன்ன வார்த்தைகளைக் கவனித்த சித்ரா, ''ஓய்வெடுக்குற யாரை ஓரம் கட்றாங்க?'' என்று ஆர்வத்தோடு கேட்டாள்.

விளக்க ஆரம்பித்தாள் மித்ரா...

''சிட்டியில ஆளும்கட்சியில முக்கியப் பொறுப்புல இருக்குற 'எக்ஸ்', இப்போ உடம்புக்கு முடியாம இருக்கார்ல...அதனால கட்சி நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் வராம ரெஸ்ட்ல இருக்காராம். இந்த நேரத்தைப் பயன்படுத்தி, அவரை ஓரம் கட்ட வேலை நடக்குதாம்!''

மித்ரா சொல்லி முடிக்கும்முன், வேகமாக எதிர்க்கேள்வி கேட்டாள் சித்ரா...

''அவரை ஓரம் கட்டிட்டு, யாரைக் கொண்டு வரப்போறாங்களாம்?''

''அ.தி.மு.க.,வை சேர்ந்த நாலு எம்.எல்.ஏ.,க்களை இழுக்குறதுக்கு, பேரம் பேசிட்டு இருக்காங்க. முதற்கட்டமா, முதல்வரை சந்திச்சு அவுங்க கோரிக்கை மனு கொடுக்கறது மாதிரி ஏற்பாடு நடக்குதாம். அதுல யார், யாரு ஒத்து வந்திருக்காங்கன்னு தெரியலை!''

''அது சரி! அந்த மாவட்டத்தோட மனைவி, அவுங்க மண்டலத்துல கான்ட்ராக்ட் எடுக்குற கட்சிக்காரர்ட்டயே, ரெண்டு பர்சன்டேஜ் கமிஷன் கேட்ட ஆடியோ வெளிவந்துச்சே...கட்சிக்காரங்க கிட்டயே கமிஷன் கேக்குற அளவுக்கு, அவுங்களுக்கு தைரியமான்னு கட்சிக்காரங்ள்லாம் குமுறித்தீர்க்கறாங்களாமே,''

''ஆமாக்கா! மேற்கு மண்டலத்துல வேற மாதிரி பிரச்னை சொல்றாங்க...அங்க ஒரே கான்ட்ராக்டருக்கு பத்து வேலை கொடுத்து தீர்மானம் ஓகே ஆயிருக்காம். இதைப் பத்தி மீட்டிங்ல வச்சு, ஆபீசர்கள்ட்ட கவுன்சிலர்கள் கேள்வி மேல கேள்வி கேட்ருக்காங்க. அவுங்க யாரும் வாயைத் திறக்கவே இல்லியாம்!''

''அதே மீட்டிங்ல, காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி, 'எல்லா பார்மாலிட்டிசும் நாங்க செய்யறோம்னு' பில்டர் ஒருத்தர் என்கிட்டயே சொல்றாரு. அப்படின்னா இங்கே எந்த அதிகாரி பணம் வாங்கறாங்கன்னு தெரிஞ்சாகணும்'னு டென்ஷனாகிப் பேசுனாங்களாமே...!''

''அக்கா! காங்கிரசைப் பத்திப் பேசவும்தான் ஞாபகம் வந்துச்சு...அதானி விவகாரம் சம்பந்தமா, ஸ்டேட் பாங்க் மெயின் பிராஞ்ச் முன்னால, காங்கிரஸ் சார்புல ஒரு ஆர்ப்பாட்டம் நடத்துனாங்கள்ல...அழகிரி நடத்துன ஆர்ப்பாட்டத்துக்கு வந்த கூட்டத்தை விட மயூரா ஜெயக்குமார் நடத்துற போராட்டத்துக்கு கூட்டம் அதிகமா வந்துச்சு. ஆனா அங்க வந்த மாநில நிர்வாகி ஒருத்தரை யாருக்குமே தெரியலை!''

''அது யாரு மித்து?''

''கணபதி சிவக்குமார்ன்னு ஒருத்தரு மாநில செயலாளராம்...அவரைத்தான் கட்சிக்காரங்க பல பேருக்கு யாருன்னே தெரியலையாம்....மீடியாக்காரங்க கேட்டதுக்கே, யார் யார்ட்டயோ கேட்டுதான், அவரு பேரு, பொறுப்பைச் சொல்லிருக்காங்க!''

''இது பரவாயில்லையே....ராகுல் எம்.பி.,பதவி நீக்கத்தைக் கண்டிச்சு, இளைஞர் காங்கிரஸ் சார்புல, சண்டே நைட் தீப்பந்தம் ஏந்திப் போராட்டம் நடத்துனாங்க...அப்பிடி ஒரு போராட்டம் நடக்குறதே மாவட்டத் தலைமைக்கு தெரியாதாம். கட்சி நிலைமை அந்த லட்சணத்துல இருக்கு!''

''என்கிட்ட ஒரு பி.ஜே.பி.,நியூஸ் இருக்கு...எம்.எல்.ஏ.,வானதி சீனிவாசன், அவுங்க தொகுதிக்குள்ள மருத்துவ முகாம், மகளிர் விழிப்புணர்வு முகாம் நடத்துறாங்கள்ல...கார்ப்பரேஷன் ஸ்கூல், சமுதாயக்கூடத்துலதான் இதை நடத்திட்டு இருந்தாங்க. ஆனா, மணியகாரம்பாளையத்துல, முந்தா நாளு இலவச மருத்துவ முகாமுக்கு ஏற்பாடு நடந்தப்போ, திடீர்னு அங்க நடத்தக்கூடாதுன்னு சொல்லீட்டாங்களாம்!''

''அது யாரு சொன்னது?''

''வேற யாரு...நம்ம மேயர் மேடம்தான்...அவுங்க சொன்னதாத்தான், கார்ப்பரேஷன் ஆபீசர்கள் சொல்லிருக்காங்க. வேற வழியில்லாம ரோட்டோரத்துல நடத்துனாங்களாம். இனிமே கார்ப்பரேஷன் பில்டிங்ல, இதை நடத்த அனுமதி தரக்கூடாதுன்னு உத்தரவாம்!''

''இது...கார்ப்பரேஷன் நியூஸ். இந்த வருஷம் பட்ஜெட்டை ஸ்டேட் பட்ஜெட் லெவலுக்கு, தடபுடலா பண்ணிருக்காங்க. மூவாயிரம் கோடி பட்ஜெட்ங்கிறதை, எல்லாரையுமே கவனிக்க வச்சிருக்கு. சொத்து வரி கூட்டுனதால வருமானமும் அதிகமா இருக்கு...இவ்வளவு நிதியைக் கையாள்றதைக் கண்காணிக்க, கவர்மென்ட் ஏதாவது ஏற்பாடு பண்ணுனா நல்லது...!''

''உண்மைதான்க்கா...இல்லேன்னா போன கவர்மென்ட்ல, வேலையே பார்க்காம காசை லவட்டுனது மாதிரி, இப்போ கவுன்சிலர்களும், ஆபீசர்களும் சேர்ந்தே ரெண்டு மடங்கா லவட்டிருவாங்க!''

''இல்லை மித்து! ரெண்டு தரப்புக்கும் இடையில முட்டல், மோதல்தான் அதிகமா இருக்கு. மத்திய மண்டலத்துல, ரோடுகள்ல ஆக்கிரமிப்பு எடுக்குறது, கடைகள்ல விதிமீறிய முகப்பு எல்லாத்தையும் எடுத்து ரோடுகளை ஆபீசர்கள் அகலப்படுத்திட்டு இருக்காங்க. ஆனா அங்க இருக்குற 'தலை', 'லேசா வெளிய நீட்டிட்டு இருந்தா உங்களுக்கு என்ன பிரச்னை'ன்னு டவுன் பிளானிங் ஆபீசர்களைக் கேக்குறாராம்!''

சித்ரா சொல்லிக் கொண்டிருக்கும்போது, மித்ராவின் அம்மா, இருவருக்கும் ஜூஸ் கொடுத்து விட்டு நலம் விசாரித்தார்.

அவரிடம் பேசிவிட்டு, சித்ராவே மீண்டும் தொடர்ந்தாள்...

''மித்து! நம்ம கார்ப்பரேஷன் உயர் கல்வி மையத்துல, புரபசர் கனகராஜ் நடத்துற இலவச ஐ.ஏ.எஸ்.,பயிற்சி மையத்துல, ரெண்டு நாளைக்கு முன்னாடி நம்ம கலெக்டர் வந்து பேசிருக்காரு. அப்போ, அங்க போன சில டுபாக்கூர் ரிப்போர்ட்டர்ஸ், புரபசரை வெளிய கூப்பிட்டு வந்து, அவரோட பாக்கெட்ல இருந்து பறிக்காத குறையா, பணத்தைப் பறிச்சிட்டுப் போயிருக்காங்க. பாவம் அவரு...நொந்தே போயிட்டாராம்!''

''அடக்கொடுமையே...அவரே வருஷக்கணக்கா, லீவு எடுக்காம, சொந்தக்காசை செலவு பண்ணி, ஏழைப் புள்ளைங்க நல்ல நிலைமைக்கு வரணும்னு, கஷ்டப்பட்டுட்டு இருக்காரு. அவர்ட்டயே பணம் பறிக்கிறவுங்களை என்னதான் பண்றது?''

''பணம் பறிக்கிறதைப் பத்திப் பேசவும், இன்னொரு மேட்டர் ஞாபகம் வந்துச்சு...வடக்கு தாலுகா ஆபீஸ்ல சர்வே பாக்குற ஒருத்தரு, லஞ்சம் வாங்குறதுல எப்பவுமே 'ஹரிபறி'யாதான் இருப்பாரு. வழக்கமா அவர் வாங்குற 10 ஆயிரம் லஞ்சத்தைத் திடீர்னு 15 ஆயிரமா உசத்திட்டாராம். கேட்டா 'தாசில்தாருக்குக் கொடுக்கணும்'னு சொல்றாராம்!''

''இவுங்கள்லாம் விஜிலென்ஸ்ல சிக்கவே மாட்டாங்களா?''

'''அந்தத் தகவல்தான் இன்ட்ரஸ்ட்டானது...முன்னெல்லாம், ஆபீஸ் கீழ இருக்குற ஸ்டேட் பாங்க்ல வச்சு, பணத்தை வாங்கிட்டு, கார்ல வச்சுட்டு, சோப்புப் போட்டு கையைக் கழுவுவாராம். இப்போ, விமன்ஸ் பாலிடெக்னிக் பக்கத்துல, பெட்ரோல் பங்க் எதிர்ல இருக்குற பேக்கரிக்கு வரச்சொல்லி, அங்க வச்சு துட்டு வாங்கிக்கிறாராம்!''

''வரவர நம்ம ஊரு விஜிலென்ஸ் சிரிப்பு போலீஸ் மாதிரி ஆயிட்டாங்க...வடக்கு ஆர்.டி.ஓ.,ஆபீஸ்ல, ரெண்டு வாரத்துக்கு முன்னால விஜிலென்ஸ் ரெய்டு நடத்துனாங்கள்ல...அதுல இருந்து, ஆபீசுக்குள்ள மக்களையே உள்ளே விடுறது இல்லை...புரோக்கர்களை மட்டும்தான் 'அலவ்' பண்றாங்க...இது என்ன புது ரூல்ஸ்ன்னே தெரியலை!''

''புது ரூல்ஸ்ன்னதும் டாஸ்மாக் கடைகள்ல பாட்டிலை திருப்பிக் கொடுத்து, 10 ரூபாயை திரும்பி வாங்குற புது ரூல்ஸ் கொண்டு வந்தாங்கள்ல...அதுலயும் கடைக்காரங்க புது தினுசா சம்பாதிக்கிறாங்க...!''

''அது என்னக்கா புது தினுசா...?''

''குடிகாரங்க பல பேரு, அந்த பாட்டில்களைத் திருப்பிக் கொடுத்து, 10 ரூபாயை வாங்குறதே இல்லை... அதனால, 'ஆப்' பாட்டில் கேக்குறவுங்களுக்கும் ரெண்டு குவாட்டர்தான் தர்றாங்களாம். ஏன்னா, ஆப் பாட்டிலை திரும்ப வாங்கலைன்னா 10 ரூபாதான் லாபம். அதுவே ரெண்டு குவாட்டரை வாங்கலைன்னா, 20 ரூபா லாபம்...ஒரு நாளைக்கு 100 பேர் இப்பிடி வாங்கலைன்னா எவ்ளோ துட்டு பாரு!''

''ஓஹோ! அதனாலதான், இந்த திட்டத்தைப் பத்தி, மினிஸ்டர்ட்ட ரிப்போர்ட்டர்ஸ் கேள்வி கேட்டதுக்கு, சரியா பதில் சொல்லாம நழுவிட்டாரோ...அவர்ட்ட கட்சிக்காரங்களே ஏகப்பட்ட கேள்வி கேக்கணும்னு நினைக்கிறாங்க...ஆனா கேக்கத்தான் யாருக்கும் தைரியமில்லை...வாய்ப்புமில்லை!''

''அப்பிடி என்ன கேள்வி கேக்கணும்னு நினைக்கிறாங்க மித்து?''

''அன்னூர் வடக்குல புதுக்கோட்டை கும்பல் ஒண்ணு, சட்டவிரோதமா மண் கடத்தலை அமோகமாகப் பண்ணிட்டு இருக்காம்...கேட்டா, இவரு பேரைத்தான் சொல்றாங்களாம்...கிணத்துக்கடவு தாலுகா பர்மிட்டை வச்சு, அன்னுார்ல மண் அள்ளுறாங்களாம். இதைப் பத்தி கட்சிக்காரங்களே அவர்ட்ட பேச, முயற்சி பண்ணியும் முடியலையாம்!''

''இதே மாதிரித்தான் சூலுார்ல பல லட்ச ரூபா செலவு பண்ணி, மேடை, மைக் செட், லைட் எல்லாம் போட்டு ஒரு நிகழ்ச்சி நடத்துனாங்களாம். ஆனா மினிஸ்டர், பத்தே நிமிஷம்தான் இருந்தாராம்.

மேடையில கூட ஏறலையாம். பேருக்கு சில பஞ்சாயத்துத் தலைவர்கள்ட்ட டிராக்டர் சாவியைக் கொடுத்துட்டுக் கெளம்பீட்டாராம். அவரைப் பார்க்க வந்த உ.பி.,க்கள் எல்லாம் பயங்கர 'அப்செட்'டாம்!''

இதைச் சொல்லி முடித்த சித்ரா, ஏதோ நினைவுக்கு வந்தவளாய், மீண்டும் தொடர்ந்தாள்...

''மித்து! கிணத்துக்கடவுல இருந்து இல்லீகலா, கேரளாவுக்கு தினமும் வண்டி வண்டியா கல்லு, ஜல்லி போகுதுன்னு பிரச்னை ஆச்சுல்லா...அந்த குவாரிகளை எல்லாம் கான்ட்ராக்ட் எடுத்து, இதை அனுப்புறது, சென்னையில இருக்குற ஒரு பெரிய கவிஞராம்... அவருக்கு இங்க நிறைய பினாமிகள் இருக்காங்க. அவுங்களை வச்சுத்தான் கவர்மென்ட் சப்போர்ட்டோட கல்லு மண்ணுல கோடிகள்ல சம்பாதிக்கிறாராம்!''

''இந்த கவர்மென்டை நினைச்சா, 'அவன் பட்டு வேட்டிக்கான கனவில் இருந்தபோது, கட்டியிருந்த கோவணமும் களவாடப்பட்டது'ங்கிற கவிதைதான், ஞாபகத்துக்கு வருது. மண் கொள்ளை, லஞ்சம், ஊழல்னு வாய் கிழியக் கத்துனாங்க. இப்போ எல்லாமே பல மடங்கு அதிகமாயிருச்சு!''

''உண்மைதான் மித்து...தப்புப் பண்ணுன பல பேரை ஒரே மாசத்துல ஜெயிலுக்கு அனுப்புவோம்னு சொன்னாங்க. இப்போ வரைக்கும் ஒண்ணும் நடக்கலை...!''

''ஆமாக்கா! சமீபமா நம்ம ஊர்ல இருக்குற யுனிவர்சிட்டி, காலேஜ்கள்ல நிறைய பாலியல் புகார் வருது... ஆனா எதுலயுமே 'ஸ்ட்ராங்'கா ஒரு நடவடிக்கையும் எடுக்க மாட்டேங்கிறாங்க.

அதனால, தப்புப் பண்றவுங்க தைரியமா மறுபடியும் தப்புப் பண்றாங்க. பாதிக்கப்படுற ஸ்டூடன்ட்ஸ், கம்பிளைன்ட் பண்ணவே பயப்படுறாங்க. இந்த கலெக்டர், காலேஜ் ஜே.டி. வி.சி., கமிட்டியெல்லாம் என்னதான் பண்றாங்க?''

''காலேஜ்கள்ல மட்டுமா...கவர்மென்ட் ஆபீஸ்கள்ல அதை விட மோசமா நடக்குது...நம்ம ஊர்ல எப்.சி.ஐ.,ல கடவுளோட பேரைக் கொண்ட அதிகாரி ஒருத்தரு இருக்காராம். அவரு, அந்த ஆபீஸ்லயும், குடோன்கள்லயும் வேலை பாக்குற லேடீஸ்க்குக் கொடுக்குற 'செக்ஸ் டார்ச்சர்', 'டபுள் மீனிங் டயலாக்' எல்லாம் கேட்டா, அப்பிடியே நெஞ்சு கொதிக்குது!''

''என்னக்கா சொல்றீங்க...மேல இருக்குற ஆபீசர்களுக்கு இதெல்லாம் தெரியாதா?''

''வர்ற ஆபீசருக்கு எல்லாம் ரூம், சரக்கு ஏற்பாடு பண்ணிக் கொடுத்து கரெக்ட் பண்ணிர்றாராம்...அதனால யாருமே கண்டுக்கிறது இல்லியாம்...இந்த மாதிரி ஆளுங்க நாலு பேரையாவது புடிச்சு, சீக்கிரமா ஜெயில்ல போட்டாத்தான் மத்தவங்க அடங்குவாங்க!''

இதைச் சொல்லி முடித்த சித்ரா, 'மித்து! சீக்கிரம் கிளம்பு...வெளிய போகலாம்' என்றதும், 'பத்தே நிமிஷம்க்கா' என்று சொல்லி, தன் அறைக்குள் நுழைந்தாள் மித்ரா.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement